PIB Backgrounder
விண்வெளித் துறையில் இந்தியாவின் சாதனைகள்
இடுகை இடப்பட்ட நாள்:
21 JUN 2026 3:12PM by PIB Chennai
மத்திய அரசின் கடந்த 12 ஆண்டுகால விண்வெளித்துறை பயணம் நம்பிக்கை, வளர்ச்சி, மக்கள் நலன் என்ற உன்னதக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது. தற்சார்பு இந்தியா இயக்கம், இந்தியாவில் தயாரிப்போம் திட்டம், வளர்ச்சியடைந்த இந்தியா 2047 போன்ற தொலைநோக்குப் பார்வைகளின் மூலம் நம் நாடு இன்று உலகின் முன்னணி விண்வெளி சக்தியாக உருவெடுத்துள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க விண்வெளித்துறை சாதனைகள்
சந்திரனின் தென்துருவத்தில் தரை இறங்கிய சந்திரயான்-3 திட்டம், சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா-எல்1 விண்கலம், ககன்யான் திட்டத்தின் மூலம் மனிதனின் விண்வெளிப் பயணத்திற்கான ஏற்பாடுகள், தேசிய விண்வெளி நிலையம் அமைப்பதற்கான பணிகள் போன்றவை கடந்த பத்தாண்டுகளின் முக்கிய விண்வெளி சாதனைகளாகும். சந்திரயான்-1 திட்டம் நிலவில் நீர் மூலக்கூறுகள் இருப்பதை உலகிற்கு எடுத்துக் காட்டியது. 2014-ல் விண்ணில் செலுத்தப்பட்ட மங்கள்யான் விண்கலம், முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையை வெற்றிகரமாக அடைந்து 8 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு சாதனை படைத்தது. விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவித்ததன் பலனாக, இந்தத் துறையில் புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை கடந்த 2014-ம் ஆண்டில் ஒன்றில் இருந்து, 2026 பிப்ரவரியில் 400 ஆக அதிகரித்துள்ளது. விண்வெளித் துறையில் தாராளமயமாக்கப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. செயற்கைக்கோள் தயாரிப்பு, செயல்பாடுகளுக்கு 74 சதவீதம் வரையிலும், ஏவுகலன்கள் தயாரிப்புக்கு 49 சதவீதம் வரையிலும் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஒத்துழைப்பும் மக்கள் நலனும்
சர்வதேச விண்வெளி அரங்கில் இந்தியாவின் நம்பகத்தன்மை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்தியா 1990 முதல் 2014 வரை வெறும் 35 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை மட்டுமே விண்ணில் செலுத்தியிருந்த நிலையில், கடந்த 12 ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை 399 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் நாசா அமைப்புடன் இணைந்து 'நிசார்' செயற்கைக்கோளும், பிரான்ஸ் நாட்டின் விண்வெளி முகமையுடன் இணைந்து 'த்ரிஷ்ணா' செயற்கைக்கோளும் புவி கண்காணிப்பு, காலநிலை மாற்றங்களை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டு வருகின்றன. ரஷ்ய நாட்டின் ஒத்துழைப்புடன் ககன்யான் விண்வெளி வீரர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டன. ஜப்பானின் ஜாக்ஸா விண்வெளி அமைப்புடன் இணைந்து சந்திரயான்-5 திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. மத்திய அரசின் நேவிக் வழிகாட்டுச் செயற்கைக்கோள் கட்டமைப்பு, பேரிடர் மேலாண்மை, விவசாய மேம்பாடு, மீனவர்களுக்கான தகவல் சேவைகள், தொலைதூரப் பகுதிகளில் மருத்துவ வசதிகள், கல்வி ஒளிபரப்பு போன்ற சேவைகளின் மூலம் சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தி வருகிறது. மத்திய அரசின் இத்தகைய ஒருங்கிணைந்த முயற்சிகள் விண்வெளித் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து, உலக அளவில் விண்வெளி சக்தியாக இந்தியாவை நிலைநிறுத்தியுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2276117®=3&lang=1
***
SS/PD
(வெளியீட்டு அடையாள எண்: 2279740)
வருகையாளர் எண்ணிக்கை : 36