PIB Backgrounder
பிரதமரின் வேளாண் நீர்ப்பாசனத் திட்டம்: வேளாண் துறை வளர்ச்சியில் ஒரு தசாப்த கால சாதனைகள்
प्रविष्टि तिथि:
30 JUN 2026 5:34PM by PIB Chennai
கடந்த பத்தாண்டுகளில், இந்தியாவின் பாசனக் கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும், திறன் மிக்க நீர் நிர்வாகத்தை ஊக்குவிப்பதிலும் பிரதமரின் வேளாண் நீர்ப்பாசனத் திட்டம் முக்கியப் பங்கு வகித்துள்ளது. 64,407 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதியுதவியுடன், பாசனம் சார்ந்த வேளாண்துறை வளர்ச்சியின் முக்கிய உந்துசக்தியாக இத்திட்டம் உள்ளது. 2016-17 முதல், இத்திட்டம் 2.7 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்குப் பயனளித்துள்ளதுடன், 24.61 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவிலான வேளாண் நிலத்தில் நீர்ப்பாசனத்தை மேம்படுத்தியுள்ளது.
'ஒரு துளி நீர், அதிகப்படியான விளைச்சல்' திட்டத்தின் கீழ், தொடக்கம் முதலே 110.92 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு சொட்டுநீர்பாசனத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. பாசனப் பரப்பை விரிவுபடுத்தவும், நீர் பயன்பாட்டுத் திறனை மேம்படுத்தவும், நிலையான நீர் நிர்வாகத்தை ஊக்குவிக்கவும் 2026-27 மத்திய பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கு 26,587 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
விவசாய உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கும், காலநிலை மாற்றத்தைத் தாங்கும் திறனை வலுப்படுத்துவதற்கும், விவசாயிகளுக்கு நிலையான வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்கும் நீர் பாதுகாப்பு அவசியமாகும். ஜூலை 1, 2015 அன்று தொடங்கப்பட்ட இத்திட்டம், நான்கு கூறுகளைக் கொண்டுள்ளது.
முதலாவதாக, விரைவுப்படுத்தப்பட்ட பாசனப் பயன் திட்டம் பெரிய, நடுத்தர பாசனத் திட்டங்களை விரைவாக முடிப்பதில் கவனம் செலுத்துகிறது. இரண்டாவதாக, 'ஒவ்வொரு வயலுக்கும் நீர்’ திட்டம், சிறிய அளவிலான பாசன வசதிகள் மூலம் புதிய நீர் ஆதாரங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. மூன்றாவதாக, நீர்ப்பிடிப்புப் பகுதி மேம்பாடு, மானாவாரி, தரிசு நிலங்களின் உற்பத்தித் திறனை மேம்படுத்துகிறது. நான்காவதாக, நுண்ணீர்பாசனத் தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கிறது.
உத்தரப்பிரதேசம் பாராபங்கி மாவட்டத்தைச் சேர்ந்த உமா சங்கர் வர்மா, சுபாஷ் வர்மா ஆகிய விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் தெளிப்பு நீர் பாசன முறையைப் பின்பற்றி, தங்களின் பயிர் விளைச்சலை 25-30 சதவீதம் அதிகரித்துள்ளனர். இம்முறை நீர், மின்சாரம், உழைப்பு, உரப் பயன்பாட்டை பாதியாகக் குறைத்து, விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 60,000-70,000 ரூபாய் வரை லாபத்தை ஈட்டித் தந்துள்ளது.
நுண்ணீர்பாசன முறைகளை செயல்படுத்த சிறு, குறு விவசாயிகளுக்கு 55% நிதியுதவியும், இதர விவசாயிகளுக்கு 45% நிதியுதவியும் வழங்கப்படுகிறது. இத்தகைய உள்ளடக்கிய, நடைமுறை கற்பித்தல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நடைமுறைகள் மூலம் 2047-ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைவதில் இத்திட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279431®=3&lang=1
****
TV/PD/SH
(रिलीज़ आईडी: 2279629)
आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English