PIB Backgrounder
azadi ka amrit mahotsav

கல்விசார் கடன் வங்கி, அபார் ஐடி: வாழ்நாள் முழுவதிற்குமான கற்றல் சூழல் அமைப்பை உருவாக்குதல்

प्रविष्टि तिथि: 30 JUN 2026 2:08PM by PIB Chennai

மத்திய கல்வி அமைச்சகத்தின் புரட்சிகரமான டிஜிட்டல் தளமான கல்விசார் கடன் வங்கி (ஏபிசி), பல்கலைக்கழக மானியக் குழுவால் ஒழுங்குமுறைப்படுத்தப்படுகிறது. மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பெறும் கல்விசார் கடன்களை டிஜிட்டல் முறையில் சேமிக்கவும், நிர்வகிக்கவும், மாற்றவும், மீட்டெடுக்கவும் இத்தளம் உதவுகிறது. 'ஒரே நாடு, ஒரே மாணவர் அடையாள அட்டை' திட்டத்தின் கீழ், தனித்துவமான 12 இலக்க அபார் அடையாள எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது கல்விசார் கடன் வங்கி அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. டிஜிலாக்கர் மூலம் பயன்படுத்தக்கூடிய இத்தளம் பள்ளி, உயர்கல்வி, திறன் மேம்பாட்டு பதிவுகளை ஒருங்கிணைக்கிறது. பொது சேவை மையங்கள் மூலமும் இதை உருவாக்கலாம். 2026 ஜூன் வரை, நாடு முழுவதும் 26.30 கோடி சரிபார்க்கப்பட்ட அபார் அடையாள அட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி 3,025 கல்வி நிறுவனங்கள் இதில் பதிவு செய்துள்ளன.

தேசிய கல்விக்கொள்கை 2020, தேசிய கடன் கட்டமைப்பு ஆகியவற்றின் தொலைநோக்குப் பார்வையை கல்விசார் கடன் வங்கி ஆதரிக்கிறது. மாணவர்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்தினால், அவர்கள் பெற்ற புள்ளிகள் இந்த தரவு வங்கியில் சேமிக்கப்படும். எதிர்காலத்தில் படிப்பை மீண்டும் தொடரும்போது அவை பயன்படுத்தப்படும். தேசிய கல்விசார் களஞ்சிய தளம் இதன் முதுகெலும்பாகச் செயல்படுகிறது. உயர்கல்வி நிறுவனங்கள் 2026-ல் ஜூன் 30-க்குள் கடன் தரவுகளை பதிவேற்ற வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது.

மாணவர்கள் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களுக்கு இடையே தடையின்றி மாறலாம். 153 பல்கலைக்கழகங்கள் பலமுறை நுழைவு, வெளியேறும் வாய்ப்புகளை வழங்குகின்றன. இதனால் ஓராண்டில் சான்றிதழ், ஈராண்டில் பட்டயம், மூன்றாண்டு அல்லது நான்காண்டுகளில் பட்டம் பெற முடியும். 13 முதல் 30 வயதுக்குட்பட்ட மாணவர்கள் அபார் அடையாள அட்டை மூலம் விமானக் கட்டணத்தில் 10% வரை தள்ளுபடி பெறலாம். ஸ்வயம் ஆன்லைன் தளம் மூலம் 40% வரை கல்விசார் கடன்களைப் பெறலாம்.

மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், கல்வித் துறைக்கான டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பில் ஏபிசி ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்கிறது. தேசிய கல்வி ஆவணக் காப்பகம், டிஜிலாக்கர் உடனான ஒருங்கிணைப்பு, மாணவர்கள் தங்களின் சரிபார்க்கப்பட்ட கல்விச் சான்றிதழ்களை எந்த நேரத்திலும் பாதுகாப்பான முறையில் பெறுவதை உறுதி செய்கிறது. மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய மின்-ஆளுமைப் பிரிவு, கடந்த 2024-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடத்திய டிஜிட்டல் இந்தியாவின் ‘எங்கள் நிபுணர்களிடம் கேளுங்கள்’ என்ற தொடரில் ஏபிசி, தேசிய கல்வி ஆவணக் காப்பக திட்டத்தை முன்னிலைப்படுத்தியது. மேலும், ஏபிசி ஒருங்கிணைப்புக்காக சமர்த் இஆர்பி என்ற முன்னணி கிளவுட் அடிப்படையிலான மின்-ஆளுமை தளம் பயன்படுத்தப்படுவதன் மூலம், மாணவர்களுக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் தரப்படுத்தப்பட்ட, ஒருங்கிணைந்த தளமாக விளங்குகிறது. கிராமப்புறங்களில் டிஜிட்டல் இடைவெளியைக் குறைக்கும் நோக்கில், தொலைதூரக் கிராமங்களில் உள்ள பொதுச் சேவை மையங்கள் (சிஎஸ்சி) தற்போது ஏபிசி, அபாருக்கான நேரடிப் பதிவு மையங்களாகச் செயல்பட்டு வருகின்றன.

தரவு பாதுகாப்பை பலப்படுத்த டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் 'பாரத் பிரமான் செயின்' என்ற பிளாக்செயின் தளத்தை உருவாக்கியுள்ளது. இது டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்திற்குட்பட்டு, கல்விப் பதிவுகளைப் பாதுகாப்பாக பராமரிக்கிறது. இப்பயணமானது நாட்டின் கல்வித் திறனை வலுப்படுத்தவும், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கிய பயணத்திற்கும் சிறந்த அடித்தளமாக அமையும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279321&reg=3&lang=1

 

***

SS/PD/SH


(रिलीज़ आईडी: 2279498) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati