குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தின விழா - குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்

प्रविष्टि तिथि: 27 JUN 2026 2:39PM by PIB Chennai

குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன், இன்று (27.06.2026) புது தில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்ற 'குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) தினம் 2026 – உத்யமி பாரத்' நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு ஜிதன் ராம் மாஞ்சி, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை இணையமைச்சர் செல்வி ஷோபா கரந்த்லாஜே, காதி - கிராமத் தொழில் ஆணையத்தின் தலைவர் திரு மனோஜ் குமார், மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறைத் தலைவர்கள், பெண் தொழில்முனைவோர், நிதி நிறுவனங்கள், கல்வித்துறையினர், குறு,சிறு,நடுத்தர நிறுவனச் சூழலமைப்பைச் சேர்ந்த பிற முக்கியத் தரப்பினரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மேலும் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும், போட்டித்தன்மை வாய்ந்த, எதிர்காலத்திற்குத் தயாரான குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் சூழலமைப்பை உருவாக்குவதில் அரசின் அர்ப்பணிப்பை இந்த நிகழ்வு எடுத்துக் காட்டியது. நிகழ்ச்சியின் போது, தேசிய சிறுதொழில் கழகம் 'பி' அட்டவணையிலிருந்து 'ஏ' அட்டவணை மத்திய பொதுத்துறை நிறுவனமாக தரம் உயர்த்தப்பட்டதற்காக குடியரசுத் துணைத் தலைவர் பாராட்டுத் தெரிவித்தார்.

நாடு முழுவதும் உள்ள குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வலுவூட்டும் நோக்கில், மாற்றத்தை உருவாக்கும் பல டிஜிட்டல் தளங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் மூன்றாண்டுகளை நினைவுகூரும் வகையிலும், கைவினைஞர்களின் எழுச்சியூட்டும் வெற்றிக் கதைகள் மூலம் அதன் தாக்கத்தை எடுத்துரைக்கும் வகையிலும், அத்திட்டம் குறித்த ஒரு கையேட்டை குடியரசுத் துணைத் தலைவர் வெளியிட்டார். மேலும், தற்சார்பு இந்தியா நிதியம் குறித்த ஒரு புத்தகமும் வெளியிடப்பட்டது. இது, தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம், புத்தாக்கம், பெண் தொழில்முனைவு ஆகியவற்றில் அந்த நிதியத்தின் பங்களிப்பை எடுத்துரைக்கிறது.

நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் பேசுகையில், குறு, சிறு, நடுத்தர தொழில் துறையை வடிவமைக்கும் தொழில்முனைவோர்களுக்கும், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார். தொழில் துறையினர் உறுதியுடன் இருந்தால், இலக்குகளை நிச்சயமாக அடைய முடியும் என்று அவர் தெரிவித்தார். உலகின் ஒவ்வொரு பொருளாதாரமும் குறு, சிறு, நடுத்தர தொழில் துறையின் பங்களிப்புகளால் வளர்ந்துள்ளது இன்று திரு சி.பி.. ராதாகிருஷ்ணன் கூறினார்.

 காதி - கிராமத் தொழில் ஆணையத்தால் (KVIC) உருவாக்கப்பட்ட பல்வேறு தயாரிப்புகளையும் அவர் அறிமுகம் செய்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு ஜிதன் ராம் மாஞ்சி, ஒவ்வொரு தொழில்முனைவோருக்கும் சம வாய்ப்புள்ள ஒரு சூழலை உருவாக்குவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்று கூறினார்.

முறைப்படுத்துதல், டிஜிட்டல் அதிகாரமளித்தல், கடன்களை எளிதாக்குதல், வலுவான சந்தை இணைப்புகள், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், புதுமையால் வழிநடத்தப்படும் வளர்ச்சி ஆகியவற்றில் அரசின் கவனம் தொடர்ந்து உள்ளது என்று திரு மாஞ்சி தெரிவித்தார்.

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை இணையமைச்சர் செல்வி ஷோபா கரந்த்லாஜே கூறுகையில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை பொருளாதார வளர்ச்சியின் உந்து சக்தியாக உள்ளது என்றார்.

“பெண் தொழில்முனைவில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குதல்”,  “சிறந்த குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை உருவாக்குதல்” ஆகிய தலைப்புகளில் நடைபெற்ற இரண்டு தொழில்நுட்பக் குழு விவாதங்களுடன் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் தினக் கொண்டாட்டங்கள் நிறைவடைந்தன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278392&reg=3&lang=1 

****

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2278405) आगंतुक पटल : 22
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी