நிதி அமைச்சகம்
சூரத்தில் 2 கிலோ கொக்கைன் போதைப் பொருளைப் பறிமுதல் செய்தது டிஆர்ஐ - ஒருவர் கைது
प्रविष्टि तिथि:
26 JUN 2026 4:57PM by PIB Chennai
போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்துவதற்கும், போதைப்பொருள் விநியோக கட்டமைப்புகளைத் தகர்ப்பதற்கும் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, வருவாய் புலனாய்வு இயக்குநரகமான டிஆர்ஐ (DRI) இன்று (26.06.2026) சூரத் நகரில் 2 கிலோ கொக்கைனைப் பறிமுதல் செய்ததுடன், 1985-ம் ஆண்டு போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் சட்டவிரோத கடத்தலில் ஈடுபட்ட ஒருவரையும் கைது செய்தது.
இந்தப் பறிமுதலைத் தவிர, டிஆர்ஐ அமைப்பு மும்பை, தில்லி, ஜெய்ப்பூர், பாட்னா, கொச்சி, அகமதாபாத் ஆகிய நகரங்களில் உள்ள பல்வேறு விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், கூரியர் முனையங்கள், நெடுஞ்சாலைகளில் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு, கடந்த மாதம் முதல் ஒட்டுமொத்தமாக சுமார் 26 கிலோ கொக்கைனைப் பறிமுதல் செய்துள்ளது. இந்த நடவடிக்கைகளின் போது, 14 வெளிநாட்டினர் உட்பட 22 பேர் கைது செய்யப்பட்டனர்.
போதைப்பொருள் நிரப்பப்பட்ட மாத்திரைகள் அல்லது உருண்டைகளை உடலுக்குள் மறைத்து உட்கொள்வது, வீட்டு உபயோகப் பொருட்கள், உண்ணக்கூடிய பொருட்களில் மறைப்பது, துணிகளில் மறைப்பது, பயணப் பைகளில் மறைப்பது போன்ற பல்வேறு வழிமுறைகள் மூலம் கடத்தல் முயற்சி நடைபெற்றது.
போதைப் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டுள்ள கும்பல்களை, ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மூலம், டிஆர்ஐ தொடர்ந்து குறிவைத்து, மத்திய அரசின் போதைப்பொருள் இல்லாத இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை அடையப் பங்களித்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26-ம் தேதி, போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 1987-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் நிறுவப்பட்ட இந்த நாள், உலகளாவிய நடவடிக்கைகளை வலுப்படுத்தவும், போதைப்பொருள்களின் பேரழிவுகரமான தாக்கங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தை எதிர்த்துப் போராடவும் சர்வதேச அளவில் கடைப்பிடிக்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278227®=3&lang=1
(Release ID : 2278227)
****
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2278238)
आगंतुक पटल : 9