PIB Backgrounder
சர்வதேச யோகா தினம் - வருடாந்திர கொண்டாட்டம் முதல் அன்றாட நல்வாழ்வு வரை
प्रविष्टि तिथि:
20 JUN 2026 12:32PM by PIB Chennai
2015-ல் முதன்முதலாகக் கொண்டாடப்பட்டதிலிருந்து, சர்வதேச யோகா தினம், ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வருடாந்திர நிகழ்வாகவும், உலகின் மிகப்பெரிய நல்வாழ்வு இயக்கங்களில் ஒன்றாகவும் பரிணமித்துள்ளது. இது, யோகா பயிற்சியின் மூலம், நாடுகள், கலாச்சாரங்கள், சமூகங்களைக் கடந்து கோடிக் கணக்கான மக்களை ஒன்றிணைக்கிறது. 'ஆரோக்கியமான முதுமைக்கான யோகா' என்ற கருப்பொருளுடன் 2026-ம் ஆண்டுக்கான யோகா தினம் கொண்டாடப்படுகிறது.
யோகா உலகின் மிகப் பழமையான அறிவு மரபுகளில் ஒன்றாகும். இதன் வேர்கள் சிந்து-சரஸ்வதி நாகரிகம் (கிமு 2700) வரை செல்கின்றன. 'யோகா' என்ற சொல் சமஸ்கிருதத்திலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் சேர்வது அல்லது ஒன்றிணைப்பது. உடல், மனம் ஆகியவற்றின் இணைப்பை இது குறிக்கிறது.
வேதங்கள், உபநிடதங்கள், பௌத்த, ஜைன மரபுகள், அத்துடன் மகாபாரதம், ராமாயணம் ஆகியவற்றிலும் யோகப் பயிற்சிகள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. யோக மரபானது , மகரிஷி பதஞ்சலியால் யோக சூத்திரங்கள் மூலம் முறைப்படுத்தப்பட்டு, அதன் தத்துவ, நடைமுறைக் கட்டமைப்பிற்கு அடித்தளமிடப்பட்டது. பல நூற்றாண்டுகளாக, முனிவர்களும் யோக குருக்களும் இந்த அறிவைப் பாதுகாத்து வளப்படுத்தி, அது உலகம் முழுவதும் பரவ உதவியுள்ளனர்.
இந்தியாவுக்கும் யோகாவுக்கும் இடையே பல்லாயிரம் ஆண்டுகளாக ஒரு பிணைப்பு இருந்து வருகிறது. இந்தியாவின் தொன்மையான மரபுகளில் வேரூன்றிய யோகா, ஒரு ஆன்மீக, தத்துவப் பயிற்சியிலிருந்து உடல், மன, உணர்ச்சி நலனுக்கான ஒரு உலகளாவிய இயக்கமாகப் பரிணமித்துள்ளது.
அதன் உலகளாவிய ஈர்ப்பையும் நன்மைகளையும் அங்கீகரித்து, ஐக்கிய நாடுகள் சபை 2014-ம் ஆண்டில் ஜூன் 21-ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது. ஐநாவின் 69 -வது அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடியால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த முன்மொழிவுக்கு 175 உறுப்பு நாடுகள் ஆதரவளித்தன. இதன் முதல் கொண்டாட்டம், 2015-ம் ஆண்டு ஜூன் 21-ஆம் தேதி நடைபெற்றது. 2016-ம் ஆண்டில், யுனெஸ்கோவின் கலாச்சார பாரம்பரியத்தின் பிரதிநிதித்துவப் பட்டியலில் யோகா சேர்க்கப்பட்டது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அங்கீகாரம், உலகளாவிய நல்வாழ்வுக்கு இந்தியா ஆற்றும் பங்களிப்பை போற்றுவதாக அமைந்தது. அதுமட்டுமின்றி, யோகாவின் பயணத்தை ஒரு புதிய கட்டத்திற்கு எடுத்துச் சென்று, அதனை கண்டங்கள் கடந்து ஒரு உலகளாவிய கொண்டாட்டமாக மாற்றியது. அன்று முதல், சர்வதேச யோகா தினக் கொண்டாட்டமானது, ஆரோக்கியம், நல்லிணக்கம், நிலையான வாழ்க்கை முறைகளை ஊக்குவித்து, நாடுகளுக்கு இடையேயான ஒரு பாலமாக யோகாவின் பங்கை வலுப்படுத்தியுள்ளது.
சர்வதேச யோகா தினம் இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான நிகழ்வுகள் மூலம் கொண்டாடப்பட்டாலும், ஒவ்வொரு பதிப்பும் வெவ்வேறு நகரத்தில் நடத்தப்படும் ஒரு முதன்மை தேசியக் கொண்டாட்டத்தை மையமாகக் கொண்டுள்ளது. இந்தப் பயணம் 2015-ல் புது தில்லியின் ராஜ்பத்தில் தொடங்கி , அதன் பின்னர் சண்டிகர், லக்னோ, டேராடூன், ராஞ்சி, மைசூரு, ஜபல்பூர், ஸ்ரீநகர், விசாகப்பட்டினம் போன்ற நகரங்கள் வழியாகப் பயணித்துள்ளது.
சர்வதேச யோகா தினத்தை உண்மையிலேயே ஒருங்கிணைக்கப்பட்ட உலகளாவிய நிகழ்வாக மாற்றுவதற்கு, ஒரு பொதுவான மற்றும் எளிதில் அணுகக்கூடிய வடிவம் தேவைப்பட்டது. இதன் விளைவாக, இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற சில யோகா குருக்கள், நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து, ஆயுஷ் அமைச்சகம் 2015-ல் பொது யோகா நெறிமுறையை உருவாக்கியது. இது தரப்படுத்தப்பட்ட 45 நிமிட யோகா பயிற்சியாகும். இது உலகெங்கிலும் நடைபெறும் சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களின் முக்கிய நிகழ்ச்சியாகச் செயல்பட்டு, நாடுகளையும் கலாச்சாரங்களையும் கடந்து மக்கள் ஒரு பகிரப்பட்ட யோகா அனுபவத்தில் பங்கேற்க உதவுகிறது. இந்த நெறிமுறையானது, யோகாசனங்கள், கபாலபாதி, பிராணாயாமம், தியானம், தளர்வு நுட்பங்கள் போன்ற உடலைத் தளர்த்தும் பயிற்சிகளை, வெவ்வேறு வயது பின்னணியைச் சேர்ந்த மக்கள் பயிற்சி செய்யக்கூடிய ஒரு எளிய, கட்டமைக்கப்பட்ட வழக்கமாக ஒருங்கிணைக்கிறது.
2026-ம் ஆண்டு கொண்டாட்டத்தில் தேவையான இடங்களில் பிராணாயாமம், யோக நித்ரா, தியானம் மற்றும் சத்சங்கம் போன்ற யோகப் பயிற்சிகளை கூடுதலாக 15 நிமிடங்கள் சேர்த்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சர்வதேச யோகா தினத்தின் 12-வது பதிப்பு 2026 ஜூன் 21 அன்று கொண்டாடப்படுகிறது, இதன் முக்கிய தேசிய கொண்டாட்டத்தை கொல்கத்தா நடத்துகிறது.
சர்வதேச யோகா தினத்தின் உண்மையான பயன், ஜூன் 21 அன்று பங்கேற்பதை மட்டும் கொண்டு அளவிடப்பட மாட்டாது; மாறாக, மக்கள் இந்தப் பயிற்சியைத் தங்கள் அன்றாட வாழ்வில் எந்த அளவிற்கு எடுத்துச் செல்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அமையும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2275594®=3&lang=1
(Release ID: 2275594)
****
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2275632)
आगंतुक पटल : 7