PIB Backgrounder
வளர்ச்சியும், பாரம்பரியமும்
प्रविष्टि तिथि:
18 JUN 2026 10:52AM by PIB Chennai
வளர்ச்சியும் பாரம்பரியமும் என்ற தொலைநோக்கு பார்வையின் அடிப்படையில், கடந்த 12 ஆண்டுகளில் நாட்டின் பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிறுவனங்களை வலுப்படுத்துதல், தேசிய நினைவுச் சின்னங்களைப் பாதுகாத்தல், தொல்பொருட்கள் இயக்கம், ஞான பாரதம், வேத பாரம்பரிய இணையதளம் போன்ற முயற்சிகள் மூலம் கலாச்சார வளங்களைப் பாதுகாக்கும் பணிகள் அதிக அளவில் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. ஆன்மீக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பிரசாத், ஹிருதய் ஆகிய திட்டங்களின் கீழ் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு, சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த அனுபவம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் இந்தியாவிலுள்ள இடங்களின் எண்ணிக்கை 31-லிருந்து 44 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் யோகா, கும்பமேளா, துர்கா பூஜை, கார்பா போன்ற அழியாத கலாச்சார மரபுகளும் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட தொல்பொருட்களைத் தாய்நாட்டிற்கு திரும்ப கொண்டுவருதல், அருங்காட்சியக மேம்பாடு ஆகியவை நாட்டின் நாகரிகப் பெருமையையும் உலகளாவிய கலாச்சாரத் தலைமையையும் மீண்டும் நிலைநிறுத்தியுள்ளன.
பாரம்பரிய பாதுகாப்பு, சுற்றுலா மேம்பாடு: செப்டம்பர் 2017-ல் தொடங்கப்பட்டு, செப்டம்பர் 2023-ல் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட 'பாரம்பரியத்தை தத்தெடுங்கள் 2.0' திட்டம், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னங்களில் பார்வையாளர்களுக்கான வசதிகளை மேம்படுத்த பொதுத்துறை நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் கூட்டுறவை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 2026 நிலவரப்படி, இத்திட்டத்தின் கீழ் 30 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. 2015 ஜனவரியில் தொடங்கப்பட்ட பிரசாத் திட்டத்தின் கீழ், பிப்ரவரி 2026 வரை 28 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 1726.74 கோடி ரூபாய் மதிப்பிலான 54 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு, 32 திட்டங்கள் நிறைவடைந்துள்ளன. குறிப்பாக சோம்நாத் நடைபாதை மேம்பாடு, கேதர்நாத் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவை ஆன்மீகச் சுற்றுலாவை வளர்ச்சியடையச் செய்துள்ளன. ஒருங்கிணைந்த சுற்றுலா உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக 2014-15-ல் தொடங்கப்பட்ட ஸ்வதேஷ் தர்ஷன் 1.0 திட்டத்தின் கீழ் 5290.33 கோடி ரூபாய் முதலீட்டில் 76 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு, மார்ச் 2026-க்குள் 75 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன. இது தற்போது நிலையான சுற்றுலா மையங்களை உருவாக்கும் நோக்கில் 'ஸ்வதேஷ் தர்ஷன் 2.0' ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மார்ச் 2024-ல் அறிமுகப்படுத்தப்பட்ட போட்டி அடிப்படையிலான சுற்றுலாத் தல மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 697.94 கோடி ரூபாய் முதலீட்டில் 38 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அகழ்வாராய்ச்சி, நினைவுச் சின்னங்கள் பராமரிப்பு: மத்திய அரசால் பாதுகாக்கப்பட்ட 3,686 நினைவுச் சின்னங்களை இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை பராமரித்து வருகிறது. 2024-25 நிதியாண்டில் நினைவுச் சின்னங்களின் பாதுகாப்பு, பராமரிப்பிற்காக சுமார் 374 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. தேசிய நினைவுச் சின்னங்கள், தொல்பொருட்கள் இயக்கம் மார்ச் 2026 வரை 1.84 லட்சத்திற்கும் அதிகமான நினைவுச் சின்னங்களையும், 17.20 லட்சத்திற்கும் அதிகமான தொல்பொருட்களையும் டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்தியுள்ளது. நகரங்களின் கலாச்சார அடையாளத்தைத் தக்கவைத்து உள்கட்டமைப்பை மேம்படுத்தும் ஹிருதய் திட்டம் காஞ்சிபுரம், வேளாங்கண்ணி, வாரணாசி, பூரி உள்ளிட்ட 12 நகரங்களில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டது.
தொல்பொருட்களை மீட்டல்: கடந்த காலங்களில் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட இந்தியாவின் புனிதச் சின்னங்கள், தொல்பொருட்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 2014-க்கு முன்பு 13 தொல்பொருட்கள் மட்டுமே மீட்கப்பட்டிருந்த நிலையில், 2014 முதல் மே 2026 வரையிலான காலக்கட்டத்தில் 653 தொல்பொருட்கள் திரும்பக் கொண்டுவரப்பட்டுள்ளன. இதில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 613 பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. குஜராத்தின் வட்நகரில் ஜனவரி 2025-ல் 298 கோடி ரூபாய் செலவில் இந்தியாவின் முதல் தொல்லியல் அனுபவ அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. புதுதில்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நார்த், சவுத் பிளாக் கட்டிடங்களில் பிரம்மாண்டமான 'யுகே யுகீன் பாரத் தேசிய அருங்காட்சியகம்' மேம்படுத்தப்பட்டு வருகிறது.
தொழில்நுட்பத்தின் மூலம் கலாச்சாரத்தைப் பாதுகாத்தல்: 2025-ல் தொடங்கப்பட்ட 'ஞான பாரதம்' திட்டத்தின் கீழ், ஓலைச்சுவடிகள் உள்ளிட்ட பண்டைய கால சுவடிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றன. இதில் 1.29 லட்சம் சுவடிகள் தேசிய டிஜிட்டல் களஞ்சியத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்குப் கிடைக்கின்றன. 2022-ல் தொடங்கப்பட்ட 'பாஷினி' செயற்கை நுண்ணறிவுத் தளம் 22 குரல் மொழிகளையும், 36 உரை மொழிகளையும் கொண்டுள்ளது. இது காசி தமிழ்ச் சங்கமம் போன்ற நிகழ்வுகளில் நிகழ்நேர மொழிபெயர்ப்பை சாத்தியமாக்கியுள்ளது. பழங்குடியின மொழிகளைப் பாதுகாக்க 'ஆதி-வாணி' தளம் செயல்படுகிறது. மார்ச் 2023-ல் தொடங்கப்பட்ட வேத பாரம்பரிய இணையதளம் நான்கு வேதங்களின் மரபுகளையும் ஆவணப்படுத்தியுள்ளது. திரைப்படப் பாரம்பரியத்தைப் பாதுகாக்க 2015-ல் தொடங்கப்பட்ட தேசிய திரைப்பட பாரம்பரிய இயக்கத்தின் கீழ் டிசம்பர் 2025 வரை 1,469 திரைப்படங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. மும்பையில் உள்ள இந்தியத் திரைப்பட தேசிய அருங்காட்சியகம் நாட்டின் நூற்றாண்டு கால சினிமா பயணத்தைப் பறைசாற்றுகிறது.
இந்த முயற்சிகள் அனைத்தும் நாகரிகத்தை பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்பைக் குறிக்கின்றன. மேலும், இந்தியா தனது பாரம்பரியம், கலாச்சாரத்தின் வேர்களுடனான பிணைப்பை வலுப்படுத்துவதோடு அவற்றை முன்னோக்கி கொண்டு செல்வதை இந்த நடவடிக்கைகள் எடுத்துரைக்கின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2274401®=3&lang=1
***
SS/PD/RJ
(रिलीज़ आईडी: 2275041)
आगंतुक पटल : 11