PIB Backgrounder
இந்தியாவின் வளர்ச்சியில் முக்கியப்பங்கு வகிக்கும் உட்கட்டமைப்பு மேம்பாடு
प्रविष्टि तिथि:
09 JUN 2026 4:41PM by PIB Chennai
கடந்த பத்தாண்டுகளில் போக்குவரத்து, வீட்டுவசதி, குடிநீர், எரிசக்தி, டிஜிட்டல் கட்டமைப்பு ஆகிய துறைகளில் இந்தியாவின் உட்கட்டமைப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. ஒட்டுமொத்த தேசத்தையும் உள்ளடக்கிய இத்தகைய உட்கட்டமைப்பு முதலீடுகள், மக்களின் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளதோடு, பொதுச் சேவைகளை வலுப்படுத்தி, பொருளாதாரச் செயல்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளன. ஒருங்கிணைந்த திட்டமிடல் நடவடிக்கைகளான பிரதமரின் கதிசக்தி திட்டம், தேசிய தளவாடக் கொள்கை, சாகர்மாலா திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், உடான் போன்ற திட்டங்கள் இந்தியாவின் உலகளாவிய போட்டித்தன்மையை அதிகரித்துள்ளதோடு, நவீனப் பொருளாதாரமாக உருவெடுக்க வழிவகுத்துள்ளன. உட்கட்டமைப்பு மேம்பாடு என்பது வெறும் திட்டச் செயல்பாடாக மட்டும் இல்லாமல், தேசக் கட்டமைப்பின் முக்கியக் கருவியாக மாறியுள்ளது. சாலைகள், இரயில்வே, விமான நிலையங்கள், தூய்மையான எரிசக்தி ஆகியவை அடிப்படைச் சேவைகளை அனைவருக்கும் எளிதாகக் கிடைக்கச் செய்துள்ளன. நாட்டின் பொது மூலதனச் செலவினம் 2014-15 நிதியாண்டில் சுமார் 2 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், 2026-27 நிதியாண்டில் 12.2 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது உட்கட்டமைப்பை உருவாக்குவதில் அரசு கொண்டுள்ள நீண்டகாலத் தொலைநோக்குப் பார்வையையும் அர்ப்பணிப்பையும் காட்டுகிறது. இந்திய இரயில்வே, 2014 முதல் பாதுகாப்பு, செயல்திறன் ஆகியவற்றில் பெரும் மாற்றத்தைக் கண்டுள்ளது. இரயில்வேக்கான பட்ஜெட் 32,000 கோடி ரூபாயிலிருந்து 2.78 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இரயில்வே மின்மயமாக்கல் 20 சதவீதத்திலிருந்து 99.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன வந்தே பாரத் இரயில்கள், ஏழை எளிய மக்களுக்கான அம்ரித் பாரத் இரயில்கள் ஆகியவை பயணிகளின் வசதியை மேம்படுத்தியுள்ளன. கவச் எனப்படும் உள்நாட்டுத் தானியங்கி இரயில் பாதுகாப்புத் தொழில்நுட்பம் விபத்துகளைக் கணிசமாகக் குறைத்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் 61 சதவீதம் அதிகரித்து 1.46 லட்சம் கிலோமீட்டராக விரிவடைந்துள்ளது. பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் மூலம் 99.6 சதவீத கிராமங்கள் சாலை வசதியைப் பெற்றுள்ளன. சிவில் விமானப் போக்குவரத்துத் துறையைப் பொருத்தவரை, விமான நிலையங்களின் எண்ணிக்கை 74-லிருந்து 165 ஆக உயர்ந்துள்ளது. உடான் திட்டத்தின் கீழ் 1.64 கோடிக்கும் அதிகமான பயணிகள் பயனடைந்துள்ளனர். நகர்ப்புறப் போக்குவரத்தைப் பொறுத்தவரை, மெட்ரோ இரயில் பாதைகளின் நீளம் 1,155 கிலோமீட்டராக அதிகரித்து, உலகின் மூன்றாவது பெரிய மெட்ரோ ரயில் கட்டமைப்பைக் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. துறைமுகத் திறன் 1,726 மில்லியன் மெட்ரிக் டன்னாக இரட்டிப்பாக்கப்பட்டு, கப்பல்கள் திரும்பும் நேரம் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து மூலம் சரக்குக் கையாளுதல் 218 மில்லியன் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்க 272 நவீனத் தொழிற்பூங்காக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. டிஜிட்டல் உள்கட்டமைப்பில், இணையதளப் பயனர்களின் எண்ணிக்கை 100 கோடியைக் கடந்துள்ளது. ஒட்டுமொத்தமாக, இத்தகைய வலுவான உள்கட்டமைப்பு சீர்திருத்தங்கள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்தி, உலகளாவிய மதிப்புச் சங்கிலியில் நாட்டை மிக முக்கிய இடத்திற்கு உயர்த்தியுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2270740®=3&lang=1
****
TV/PD/SH
(रिलीज़ आईडी: 2270921)
आगंतुक पटल : 6