தேசிய மனித உரிமைகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில், ஒடிசா பழங்குடியினப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வந்த செய்தியை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது

प्रविष्टि तिथि: 03 JUN 2026 4:37PM by PIB Chennai

ஒடிசா மாநிலம் தேன்கனால் மாவட்டத்தின் கன்கடஹடா பகுதியைச் சேர்ந்த 17 வயது பழங்குடியினப் பெண் ஒருவர், உத்தரப்பிரதேச மாநிலம்  ஜான்சி நகருக்குக் கடத்திச் செல்லப்பட்டு, விற்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளாகத் தொடர் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளானதாக ஊடகங்களில் வெளியான செய்தியை, இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு அளிப்பதாகக் கூறி, பாதிக்கப்பட்ட அப்பெண்ணும் அவருடன் மேலும் மூன்று பெண்களும் உத்தரப்பிரதேச மாநிலத்திற்குக் கடத்திச் செல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்பெண் உள்ளூர் வழக்கறிஞர் ஒருவரின் உதவியுடன் அங்கிருந்து தப்பித்து, ஜான்சி காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டபோதிலும், அவருக்கு ஒடிசா மாநிலம் திரும்புவதற்கான ரயில் பயணச்சீட்டை ஏற்பாடு செய்து கொடுத்ததைத் தவிர, காவல்துறை தரப்பில் வேறு எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஒடிசா திரும்பியதும், அம்மாநிலக் காவல்துறையினர் அப்பெண்ணின் வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர். தற்போது இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், அவை மனித உரிமைகள் மீறல் தொடர்பான மிகத் தீவிரமான பிரச்சினைகளை எழுப்புவதாக ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது. எனவே, இதுகுறித்து விரிவான அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு ஒடிசா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களின் காவல்துறைத் தலைவர்களுக்கும், தேன்கனால் மாவட்ட ஆட்சியருக்கும் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த அறிக்கையில், நடைபெற்று வரும் விசாரணையின் தற்போதைய நிலை குறித்தும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அளிப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விவரங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2268410&reg=3&lang=1

(Release ID: 2268410)

****

TV/SV/SH


(रिलीज़ आईडी: 2268682) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Odia