PIB Backgrounder
நடுத்தர வர்க்கத்தின் பயணம்: கொள்கை சீர்திருத்தங்கள் மூலம் வளர்ச்சி
प्रविष्टि तिथि:
03 JUN 2026 11:05AM by PIB Chennai
இந்தியாவின் சமூக-பொருளாதார வளர்ச்சிப் பாதையில் நடுத்தர வர்க்கத்தினர் முக்கியப் பங்காற்றி வருகின்றனர். கடந்த 12 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட வரி சீர்திருத்தங்கள், சுகாதாரம், வீட்டுவசதி, டிஜிட்டல் சேவைகள், கட்டமைப்பு, கல்வித்துறை சீர்திருத்தங்கள் ஆகியவை இவர்களின் அன்றாட வாழ்க்கையை எளிமையாக்கியுள்ளதோடு, அவர்களின் நம்பிக்கையையும் அதிகரித்துள்ளன. உலக வங்கியின் வருமான வகைப்பாட்டின்படி நடுத்தர வர்க்கத்தினர் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளனர். நடுத்தர வர்க்கத்தினரின் நுகர்வு, தேவைகள் காரணமாக, 2036-ம் ஆண்டிற்குள் இந்தியாவின் ஒட்டுமொத்த நுகர்வுச் செலவினத்தில் இவர்களின் பங்கு 93 சதவீதமாக உயரும் என உலக பொருளாதார மன்றம் கணித்துள்ளது.
மத்திய அரசின் விரிவான வரிச் சீர்திருத்தங்கள் நடுத்தர குடும்பங்களின் நிதிச் சுமையைக் கணிசமாகக் குறைத்துள்ளன. 2014-ல் ரூ.2.5 லட்சம் வரை மட்டுமே வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்த நிலையில், புதிய வரி முறையின் கீழ் தற்போது ரூ.12 லட்சம் வரை (சம்பளம் பெறுவோருக்கு நிலையான கழிவுடன் ரூ.12.75 லட்சம்) வருமானம் ஈட்டுபவர்கள் எவ்வித வரியும் செலுத்தத் தேவையில்லை. இதேபோல், 2017-ல் அறிமுகப்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சீர்திருத்தங்கள் மூலம் அத்தியாவசியப் பொருட்களின் மீதான வரிக் குறைப்பு நுகர்வுக்கான செலவைக் குறைத்துள்ளது. இதனால் ஜிஎஸ்டி செலுத்துவோர் எண்ணிக்கை 2017-ல் 66.5 லட்சத்திலிருந்து ஏப்ரல் 2026-ல் 1.64 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும், ஏப்ரல் 2025 முதல் நடைமுறைக்கு வந்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000 தடையற்ற பணவீக்கக் கூட்டு ஓய்வூதியத்திற்கான உத்தரவாதத்தை அளிக்கிறது.
நடுத்தர வர்க்கத்தினரின் உள்கட்டமைப்பு, வீட்டுவசதித் தேவைகளை நிறைவு செய்வதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நகர்ப்புற ஏழைகள், நடுத்தர பிரிவினருக்காக 'அனைவருக்கும் வீடு' கொள்கையின் அடிப்படையில் தொடங்கப்பட்ட பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டம் மூலம் இதுவரை 98.1 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. நடுத்தர மக்களுக்கான வீட்டுத் திட்டங்களை நிறைவு செய்ய 2019-ல் கொண்டுவரப்பட்ட 'சுவாமி' நிதியத்தின் கீழ், சென்னை 'எலைட் ஏக்கர்ஸ்' உள்ளிட்ட 146 திட்டங்களில் 58,000-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்துத் துறையில், இந்தியாவின் மெட்ரோ ரயில் கட்டமைப்பு உலக அளவில் மூன்றாவது பெரிய வலையமைப்பாக உருவெடுத்துள்ளது. மெட்ரோ சேவை வழங்கும் நகரங்களின் எண்ணிக்கை 2014-ல் 5 ஆக இருந்த நிலையில், தற்போது 26 ஆக அதிகரித்தது. விமானப் போக்குவரத்துக்கான 'உடான்' திட்டம் மூலம் விமான நிலையங்களின் எண்ணிக்கை 2014-ல் 74-லிருந்து 2026-ல் 165 ஆக உயர்ந்து, எளிய மக்களுக்கும் விமானப் பயணம் சாத்தியமாக்கப்பட்டுள்ளது.
அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் சுகாதாரத்திலும் கல்வியிலும் புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மக்கள் மருந்தக மையங்கள் மூலம் 18,000-க்கும் மேற்பட்ட மருந்துக் கடைகளில் 50 முதல் 80 சதவீதம் வரை மலிவான விலையில் தரமான பொதுப்பெயரிலான (ஜெனரிக்) மருந்துகள் வழங்கப்பட்டு, நடுத்தர மக்களின் மருத்துவத்திற்கான செலவில் ரூ.40,000 கோடி வரை சேமிக்கப்பட்டுள்ளது. 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கு இலவச மருத்துவ காப்பீட்டுக்கான 'ஆயுஷ்மான் வய வந்தனா' அட்டைகள் வழங்கப்படுகின்றன. உயர்கல்வியில் ஐஐடி-க்களின் எண்ணிக்கை 2014-ல் 16-லிருந்து 2025-ல் 23 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், மாணவர்களின் உயர்கல்விக்காக பிணையில்லா 'வித்யா லட்சுமி' கடன் திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது. மேலும், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் வளாகங்கள் இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளன. ஜன் தன் கணக்கு, ஆதார், மொபைல் இணைப்பு ஆகியவை இணைந்த 'ஜாம்' கட்டமைப்பு, டிஜிலாக்கர் போன்ற டிஜிட்டல் ஆளுமை சீர்திருத்தங்கள் நடுத்தர குடும்பங்களின் வளர்ச்சியை உறுதி செய்துள்ளதோடு, வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தியுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2268223®=3&lang=1
***
SS/PD/KR
(रिलीज़ आईडी: 2268297)
आगंतुक पटल : 10