அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
மருந்துகள், ரசாயனங்கள் உற்பத்தியை ஒளி ஆற்றலால் இயங்கும் நானோ வினையூக்கிகள் எளிதாக்குகின்றன
இடுகை இடப்பட்ட நாள்:
29 MAY 2026 4:11PM by PIB Chennai
மருந்துகள், தொழிற்சாலை ரசாயனங்கள் ஆகியவற்றின் உற்பத்தியில் பயன்படுத்தக்கூடிய ஒரு புதுமையான, ஒளியால் இயங்கும் நானோ-வினையூக்கியை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இது அந்த செயல்முறைகளைத் தூய்மையானதாகவும், வேகமானதாகவும், மேலும் அதிக ஆற்றல் திறன் கொண்டதாகவும் மாற்றும்.
உலக அளவில், மாசுபாடு, மின்னாற்றல் நுகர்வு, எரிசக்தி நுகர்வு, தொழிற்சாலை செயல்முறைகளில் நச்சு ரசாயனங்களின் பயன்பாடு ஆகியவற்றைக் குறைக்க வேண்டிய தேவை உள்ளது.
இந்நிலையில் அறிவியல், தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான, மொஹாலியில் உள்ள நானோ அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, தங்கம், பல்லேடியம் ஆகியவற்றின் நானோ துகள்களையும் போடிபை எனப்படும் ஒளியை உறிஞ்சும் மூலக்கூறையும் இணைத்து, ஒளியால் இயக்கப்படும் வினையூக்கியாகச் செயல்படும் ஒரு நானோகூட்டுப் பொருளை உருவாக்கியுள்ளனர். இந்தக் கலப்பினப் பொருள், பாரம்பரிய வினையூக்கிகளை விட மிகவும் திறமையாக வேதி வினைகளை விரைவுபடுத்த ஒளி ஆற்றலைப் பயன்படுத்துகிறது.
நானோஸ்கேல் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி , தங்கம், போடிபை, பல்லேடியம் ஆகியவற்றை இணைத்து இந்த நானோபொருள் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. இது, தங்க நானோ துகள்கள் ஒளி ஆற்றலை உறிஞ்ச அனுமதிப்பதன் மூலம் செயல்படுகிறது. அந்த ஆற்றல் பின்னர் போடிபை மூலக்கூறுக்கும், இறுதியாகச் செயல்படும் வினையூக்கியான பல்லேடியத்திற்கும் மாற்றப்படுகிறது. பல்லேடியம், இவ்வாறு மாற்றப்பட்ட ஆற்றலைப் பயன்படுத்தி வேதி வினைகளை மிகவும் திறமையாக இயக்குகிறது. இதனால், முழு செயல்முறையும் வேகமாகவும், குறைந்த ஆற்றல் தேவைப்படக்கூடியதாகவும் அமைகிறது.
இந்தத் தொழில்நுட்பம், மருந்துகள், ரசாயனங்களின் உற்பத்தியை தூய்மையாகவும் செலவு குறைந்ததாகவும் மாற்றும். சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கவும், எரிசக்தி நுகர்வைக் குறைக்கவும் இது வழிவகுக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2266607®=3&lang=1
***
SS/PLM/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2266777)
வருகையாளர் எண்ணிக்கை : 6