தேசிய மனித உரிமைகள் ஆணையம்
பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தில், மதிய உணவு உட்கொண்ட 60 மாணவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக வெளியான ஊடகச் செய்தி: தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது தேசிய மனித உரிமைகள் ஆணையம்
இடுகை இடப்பட்ட நாள்:
26 MAY 2026 8:28PM by PIB Chennai
பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில், மே 21, 2026 அன்று, மதிய உணவு உட்கொண்ட 60 மாணவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டதாக வெளியான ஊடகச் செய்தியையடுத்து, இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. இந்த தகவல்களின்படி, மாணவர்கள் வாந்தி, வயிற்று வலி, குமட்டல், வயிற்றுப்போக்கு போன்ற உடல்நலக் குறைபாடுகளைத் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர்கள் அருகிலுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அந்த ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், அது மாணவர்களின் மனித உரிமைகள் மீறல் தொடர்பான பிரச்சினையை எழுப்புவதாக ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது. எனவே, இது தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு, பீகார் மாநிலம் நாலந்தா மாவட்ட ஆட்சியருக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மே 21, 2026 அன்று வெளியான அந்த ஊடகச் செய்தியின்படி, விதிமுறைகளின்படி ஆசிரியர்கள் உணவைச் சுவைத்துப் பார்த்த பின்னரே மாணவர்களுக்குப் பரிமாறப்பட வேண்டும் என்ற நிலையில், அவ்வாறு சுவைத்துப் பார்க்கப்படாமலேயே, மதிய உணவு மாணவர்களுக்குப் பரிமாறப்பட்டுள்ளது. பல மாணவர்கள் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது குறித்துப் புகார் அளித்த பிறகு, ஆசிரியர் ஒருவர் அந்த உணவைச் சுவைத்துப் பார்த்ததாகவும், அவரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு, அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அச்செய்தி தெரிவிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265621®=3&lang=1
***
TV/SV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2265667)
வருகையாளர் எண்ணிக்கை : 11