சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
திருவாரூர் புறவழிச்சாலை மற்றும் கூடுதல் மேம்பாலங்கள் அமைக்க ரூ 1,427.61 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு மத்திய அமைச்சர் திரு. நிதின் கட்கரி ஒப்புதல்
இடுகை இடப்பட்ட நாள்:
26 MAY 2026 6:17PM by PIB Chennai
தமிழகத்தில், தேசிய நெடுஞ்சாலை எண் 83-ல், நாகப்பட்டினம்–தஞ்சாவூர் பிரிவில், ரூ 1,427.61 கோடி மதிப்பில் நான்கு வழி திருவாரூர் புறவழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சர் திரு. நிதின் கட்கரி ஒப்புதல் அளித்துள்ளார். 14.9 கி.மீ. நீளம் கொண்ட இத்திட்டத்தில், தேசிய நெடுஞ்சாலை எண்-129ஏ, தேசிய நெடுஞ்சாலை எண்-134ஏ ஆகிய நெடுஞ்சாலைகளில், இரண்டு கூடுதல் சாலை மேம்பாலங்களை அமைக்கும் பணிகளும் அடங்கும்.
இது குறித்து சமூக வலைதளத்தில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டுள்ள பதிவில், "தமிழகத்தில், தேசிய நெடுஞ்சாலையின் நாகப்பட்டினம்–தஞ்சாவூர் பிரிவில், 14.9 கி.மீ. நீளத்திற்கு, நான்கு வழி திருவாரூர் புறவழிச்சாலையை அமைப்பதற்கும், அத்துடன் தேசிய நெடுஞ்சாலை-129ஏ, தேசிய நெடுஞ்சாலை-134ஏ நெடுஞ்சாலைகளில், 2 கூடுதல் சாலை மேம்பாலங்களை அமைப்பதற்கும் ரூ 1,427.61 கோடி நிதி ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த முக்கியத்துவம் வாய்ந்த திட்டம், திருச்சி, கோவை போன்ற முக்கிய தொழில் மையங்களுக்கும், காரைக்கால், நாகப்பட்டினம் போன்ற துறைமுக நகரங்களுக்கும் இடையேயான போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்துவதுடன், இப்பகுதியின் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் உத்வேகம் அளிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்."
அடியக்கமங்கலம்–தண்டலை பகுதியில் தொடங்கும் இந்தப் புறவழிச்சாலை, அதிப்புலியூர், ஆண்டிபாளையம், கிடாரம்கொண்டான், பள்ளிவரமங்கலம், பெரும்புகலூர், இளவங்கர்குடி, ஆனைவடபாதி காலனி உள்ளிட்ட முக்கியப் பகுதிகள் வழியாகச் செல்லும்.
இத்திட்டம் முழுமையாக நிறைவடையும்போது, திருவாரூர் நகரில் போக்குவரத்து நெரிசலை பெருமளவில் குறைப்பதுடன், பயண நேரத்தை 15 நிமிடங்கள் வரை மிச்சப்படுத்த உதவிடும். மேலும், அதிக மக்கள்தொகை, வணிகச் செயல்பாடுகள் நிறைந்த பகுதிகளிலிருந்து வாகனப் போக்குவரத்தை திசைதிருப்புவதன் மூலம் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும் உதவிடும்.
இந்தச் சாலை, மாநில நெடுஞ்சாலை-23, மாநில நெடுஞ்சாலை-65 ஆகிய மாநில நெடுஞ்சாலைகளுடனும், புகழ்பெற்ற தியாகராஜ சுவாமி திருக்கோயிலுடனும் உள்ள போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதுடன், இப்பகுதியின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கும், பயண வசதிக்கும் பெரிதும் உறுதுணையாக இருக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265553
***
TV/SV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2265588)
வருகையாளர் எண்ணிக்கை : 34