இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
அசாமில் உள்ள 'கேலோ இந்தியா மாநில சிறப்புத்திறன் மையத்தை' மத்திய இணையமைச்சர் திருமதி ரக்ஷா கட்சே பார்வையிட்டார்
இடுகை இடப்பட்ட நாள்:
24 MAY 2026 3:06PM by PIB Chennai
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை இணையமைச்சர் திருமதி ரக்ஷா கட்சே, அசாம் மாநிலம் குவாஹத்தியில் உள்ள ‘கேலோ இந்தியா மாநில சிறப்பு மையத்திற்கும், உயர் செயல்திறன் மையத்திற்கும் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு பயிற்சி பெறும் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், விளையாட்டு அறிவியல் துறை நிபுணர்கள், துறை சார்ந்த அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடினார். வடகிழக்கு பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் விளையாட்டு உள்கட்டமைப்புகள், வீரர்களின் நலன் சார்ந்த மேம்பாட்டுப் பணிகள் குறித்து அவர் விரிவாகக் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது, உயர் செயல்திறன் மையத்தில் உள்ள நவீன விளையாட்டு அறிவியல் ஆய்வகங்கள், காயங்களிலிருந்து மீள்வதற்கான மறுவாழ்வுப் பிரிவுகள், உடலியல்-இயக்கவியல் பகுப்பாய்வுக் கூடங்கள் உள்ளிட்ட அதிநவீன வசதிகளை அமைச்சர் பார்வையிட்டார். இந்நிகழ்வின்போது, பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், நாட்டின் விளையாட்டு உள்கட்டமைப்பு, வீரர்களுக்கான ஆதரவு அமைப்புகள் மற்றும் அறிவியல் ரீதியிலான பயிற்சி முறைகளில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு வருவதையும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சர்வதேச அளவில் இந்திய வீரர்கள் சாதனை படைக்க இத்தகைய சிறப்பு மையங்கள் முக்கியப் பங்காற்றுவதாக அமைச்சர் பாராட்டினார். அடிமட்ட அளவிலான உள்கட்டமைப்புகளை வலுப்படுத்தவும், உலகத்தரம் வாய்ந்த பயிற்சிச் சூழலை உருவாக்கவும் அரசு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருவதாகவும் 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் உட்பட இந்தியாவின் நீண்டகால விளையாட்டு இலக்குகளை அடைவதற்கு, விளையாட்டு அறிவியல், தரவு அடிப்படையிலான பயிற்சி முறைகளை ஒருங்கிணைப்பது இன்றியமையாதது என்றும் மத்திய இணையமைச்சர் திருமதி ரக்ஷா கட்சே தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2264751®=3&lang=1
***
TV/PD/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2264776)
வருகையாளர் எண்ணிக்கை : 9