ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் அந்தமான் - நிக்கோபார் மற்றும் மேற்கு வங்கத்துடன் சீர்திருத்தம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் மத்திய அரசு கையெழுத்திட்டது

இடுகை இடப்பட்ட நாள்: 18 MAY 2026 7:44PM by PIB Chennai

இரண்டாம் கட்ட ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ், சீர்திருத்தத்துடன் இணைந்த செயலாக்கத்தை நாடு தழுவிய அளவில் செயல்படுத்தும் விதமாக, அந்தமான் - நிக்கோபார் தீவுகள் யூனியன் பிரதேசமும், மேற்கு வங்க மாநிலமும் இன்று (18.05.2026) மத்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், சமூகத்தை மையமாகக் கொண்ட கிராமப்புற நீர் வழங்கல் மேலாண்மை மாதிரியை மேம்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்துள்ளன.

சீர்திருத்தத்துடன் இணைந்த இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், ஜல் ஜீவன் இயக்கம் 2.0-ன் நோக்கங்களுக்கு ஏற்ற வகையில், கிராம பஞ்சாயத்துகளின் தலைமையில், சேவை அடிப்படையில், சமூகத்தை மையமாகக் கொண்ட கிராமப்புற நீர் நிர்வாக மாதிரியை கட்டாயமாக்குகிறது.

மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் திரு சி.ஆர். பாட்டீல், ஜல் சக்தி அமைச்சகத்தின் இணையமைச்சர் திரு வி. சோமண்ணா, குடிநீர் விநியோகத் துறைச் செயலாளர் திரு அசோக் கே.கே. மீனா மற்றும் மூத்த அதிகாரிகள் முன்னிலையில், தனித்தனியாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.

அந்தமான் - நிக்கோபார் தீவுகள் யூனியன் பிரதேசத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், நீர்வளத் துறையின் இணைச் செயலாளர் திருமதி சுவாதி மீனா நாயக் மற்றும் அந்தமான் - நிக்கோபார் தீவுகள் யூனியன் பிரதேசத்தின் ஆணையர் மற்றும் செயலாளர் டாக்டர். சச்சின் ஷிண்டே ஆகியோருக்கு இடையே தில்லியில் கையெழுத்தானது.

 

அந்தமான்  நிக்கோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர் அட்மிரல் டி.கே. ஜோஷி, அந்தமான் - நிக்கோபார் தீவுகளின் தலைமைச் செயலாளர் டாக்டர் சந்திர பூஷன் குமார், யூனியன் பிரதேசத்தின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் காணொலிக் காட்சி மூலம் இதில் பங்கேற்றனர்.

மத்திய-மாநில ஒத்துழைப்பில் ஒரு முக்கிய படியாக, மேற்கு வங்க மாநிலத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம், மேற்கு வங்க முதலமைச்சர் திரு சுவேந்து அதிகாரி, மேற்கு வங்க அரசின் தலைமைச் செயலாளர் திரு மனோஜ் குமார் அகர்வால், மாநில அரசின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில், மேற்கு வங்க முதலமைச்சர் அலுவலகத்தில் முறைப்படி கையொப்பமிடப்பட்டது.

நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் திரு சி.ஆர். பாட்டீல் , பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ், ஜல் ஜீவன் இயக்கம் கிராமப்புற அளவில் விரிவாகச் சென்றடைந்துள்ளது என்றும், இந்த இயக்கம் கிராமப்புறங்களில் கண்ணியம், சுகாதாரம், அதிகாரமளித்தலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளது என்றும் கூறினார்.

மேற்கு வங்க முதலமைச்சர் திரு சுவேந்து அதிகாரி, மத்திய அரசு மாநிலத்திற்குத் தொடர்ந்து பெருமளவு நிதி ஆதரவை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டார். தொடர்ச்சியான ஆதரவிற்காக மத்திய அரசுக்குத் தனது நன்றியைத் தெரிவித்த அவர், புதிதாக எட்டப்பட்ட ஜல்ஜீவன் ஒப்பந்தத்தின் மூலம், அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் விநியோகத்தை உறுதிசெய்து, மேற்கு வங்க மக்களுக்காக மாநில அரசு செயலாற்றும் என்று கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2262489&reg=3&lang=1

(Release ID: 2262489)

****

TV/PLM/SH

 


(வெளியீட்டு அடையாள எண்: 2262534) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Kannada