சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ சித்ர திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில், மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்றினார்
இடுகை இடப்பட்ட நாள்:
16 MAY 2026 1:59PM by PIB Chennai
கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ சித்திர திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் 42 -வது தொகுதி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவில், மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு ஜிதேந்திர சிங் அவர்கள் இன்று காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்றினார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் திருமதி புண்ய சலிலா ஸ்ரீவஸ்தவா பங்கேற்றார். இந்நிறுவனம் மத்திய அரசின் அறிவியல், தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனமாகத் திகழ்கிறது.
திரு ஜிதேந்திர சிங் தமது உரையில், பட்டம் பெறும் மாணவர்களுக்கும், நிறுவனத்தின் பொன்விழாக் கொண்டாட்டங்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார். நிறுவனத்தின் சாதனைகளைப் பாராட்டிய அவர், புதிய பேராசிரியர்களின் நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பது, அதன் செயல்பாட்டுத் திறனை ஏறக்குறைய இருமடங்காக்கும் என்று கூறினார்.
உள்நாட்டு மருத்துவ சாதன மேம்பாட்டிற்கு இந்த நிறுவனம் ஆற்றும் பங்களிப்பை எடுத்துரைத்த திரு ஜிதேந்திர சிங், உலகத் தரம் வாய்ந்த, அதிக செயல்திறன் மிக்க, அதே சமயம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, செலவு குறைந்த மருத்துவ சாதனங்களை உருவாக்குவதே இந்த நிறுவனத்தின் தனித்துவமான நோக்கமாகும் என்று கூறினார்.
மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் திருமதி புண்ய சலிலா ஸ்ரீவஸ்தவா பேசுகையில், பொறியாளர்களும் மருத்துவ நிபுணர்களும் இணைந்து சுகாதாரத் துறையில் புதுமைகளை முன்னெடுத்துச் செல்லவும், புதிய மருத்துவக் கருவிகளை உருவாக்கவும், அதிநவீன ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் வேண்டும் என்று மாணவர்களை வாழ்த்தினார்.
நிகழ்ச்சியில் தேசிய, சர்வதேச விருதுகளை வென்ற இந்நிறுவனத்தின் தலைசிறந்த பேராசிரியர்களுக்கு தகுதிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பட்டமளிப்பு விழாவில், நிறுவனத்தின் பொன்விழா சின்னமும், இந்நிகழ்வை நினைவுகூரும் சிறப்புப் பாடலும் வெளியிடப்பட்டன. நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் சஞ்சய் பிஹாரி, சிறப்பு விருந்தினர்கள், பேராசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2261698®=3&lang=1
(Release ID : 2261698)
****
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2261720)
வருகையாளர் எண்ணிக்கை : 13