புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

“இந்தியப் பொருளாதாரத்திற்கு அறிவு மற்றும் அறிவுசார் தயாரிப்புகளின் பங்களிப்பை அளவிடுவதற்கான கட்டமைப்பு” குறித்த அடிப்படை ஆவணம் மீதான கருத்துகள் வரவேற்க்கப்படுகின்றன

प्रविष्टि तिथि: 16 MAY 2026 9:46AM by PIB Chennai

வேகமான தொழில்நுட்ப மாற்றங்கள், சிக்கலான திறன் சார்ந்த தேவைகள், போட்டி நிறைந்த சூழலில் ஏற்படும் நிறுவன ரீதியான புதுமைகள் ஆகியவை, பொருளாதாரத்தில் அறிவின் முக்கியத்துவம் பெருகி வருவதை அதிகளவில் பிரதிபலிக்கின்றன. இச்சூழலில், பொருளாதாரத்திற்கு அறிவின் பங்களிப்பை மதிப்பிடுவதும், அதன் மாறிவரும் இயங்கியல்களை உள்வாங்கும் வகையிலான கொள்கை நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பதும் இன்றியமையாததாக மாறியுள்ளது.

 

இத்தேவையை நிவர்த்தி செய்யும் வகையில், இந்தியப் பொருளாதாரத்திற்கு அறிவு மற்றும் அறிவுசார் தயாரிப்புகளின் பங்களிப்பை அளவிடுவதற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்கும் பணியை, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம்  மேற்கொண்டு வருகிறது. இதற்கு இணையான முன்மாதிரி ஏதும் இல்லாத நிலையில், இப்பணியானது இத்துறையில் மேற்கொள்ளப்படும் ஒரு புதுமையான முயற்சியாகத் திகழ்கிறது; மேலும், இதற்கு நிபுணர்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் ஈடுபாடும் ஒத்துழைப்பும் அவசியமாகிறது.

 

கடந்த ஆண்டு பிப்ரவரியில், மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் குமார் சூட் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், இப்பணிக்காக ஒரு ‘தொழில்நுட்ப ஆலோசனைக் குழு’ அமைக்கப்பட்டது. இக்குழுவிற்கு, அக்காலகட்டத்தில் ‘திறன் மேம்பாட்டுக் குழுவின்’ உறுப்பினராக இருந்த டாக்டர் ஆர். பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். இக்குழுவில் சிந்தனைக் குழுக்கள் , தொழில் அமைப்புகள், கல்வித்துறையினர் மற்றும் மத்திய அரசு அமைச்சகங்களின் பிரதிநிதிகள் உறுப்பினர்களாக இடம்பெற்றிருந்தனர். செப்டம்பர் மாதத்தில் ஒரு ‘கருத்துருவாக்கப் பயிலரங்கம்’ ஏற்பாடு செய்யப்பட்டது; அறிவுசார் தயாரிப்புகளுக்கான ஒரு வகைப்பாட்டை உருவாக்குவதிலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில்  அவற்றின் பங்களிப்பை அளவிடுவதற்குத் தேவையான சாத்தியமான அளவீட்டுக் குறியீடுகளையும் தரவு மூலங்களையும் கண்டறிவதிலும் இப்பயிலரங்கம் கவனம் செலுத்தியது. தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் உள்ளீடுகள், கருத்துருவாக்கப் பயிலரங்கில் பெறப்பட்ட பரிந்துரைகள் மற்றும் பல்வேறு துறைசார் நிபுணர்களுடனான தொடர் கலந்தாய்வுகளின் அடிப்படையில், “இந்தியப் பொருளாதாரத்திற்கு அறிவு மற்றும் அறிவுசார் தயாரிப்புகளின் பங்களிப்பை அளவிடுவதற்கான கட்டமைப்பு” குறித்த ஓர் அடிப்படை ஆவணம்  அமைச்சகத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படை ஆவணத்தை https://mospi.gov.in/announcements என்ற இணையதள முகவரியில் அணுகலாம்.

 

இம்முயற்சியின் தொடர்ச்சியாக, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், 'பொருளாதாரத்திற்கு அறிவும் அறிவுசார் தயாரிப்புகளும் அளிக்கும் பங்களிப்பை அளவிடுவதற்கான கட்டமைப்பு' குறித்து, நடைமுறைப்படுத்தத்தக்க ஒரு கொள்கை ஆவணத்தைத் தயாரிக்கும் பொறுப்புடன் கூடிய 'அறிவுசார் அமைப்புகள் குறித்த குழு' ஒன்றை தற்போது அமைத்துள்ளது. இக்குழுவிற்கு, பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முன்னாள் உறுப்பினர் செயலாளரான திரு. ரத்தன் பி. வதால்  தலைமை தாங்குகிறார். முன்னரே குறிப்பிடப்பட்ட 'அடிப்படை ஆவணம்'  இக்கொள்கை ஆவணத்தைத் தயாரிப்பதற்கான அடித்தளமாக அமையும்.

 

இக்கலந்துரையாடல் செயல்முறையின் ஒரு பகுதியாக, இந்த 'அடிப்படை ஆவணம்' குறித்த கருத்துகளும் ஆலோசனைகளும் அனைத்துத் தொடர்புடைய தரப்பினரிடமிருந்தும் மற்றும் பொதுமக்களிடமிருந்தும் வரவேற்கப்படுகின்றன. உங்கள் கருத்துகளையும் பின்னூட்டங்களையும், 2026 ஜூன் 15-க்குள் maneesh.jindal@mospi.gov.in மற்றும் neeraj.kumar007[at]nic[dot]in ஆகிய மின்னஞ்சல் முகவரிகள் வாயிலாக இவ்வமைச்சகத்துடன் பகிர்ந்துகொள்ளலாம்; இது, இக்கட்டமைப்பை விரைந்து இறுதி செய்வதற்கு உதவும்.

(Release ID: 2261671)

****

TV/PKV/SH


(रिलीज़ आईडी: 2261686) आगंतुक पटल : 32
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , Marathi , हिन्दी , English