PIB Backgrounder
சோமநாதர் ஆலயம்: பாரதத்தின் அழியாத சுடர்
இடுகை இடப்பட்ட நாள்:
08 MAY 2026 6:14PM by PIB Chennai
குஜராத்தின் சௌராஷ்டிரா கடற்கரையில் பிரபாஸ் பாடனில் அமைந்துள்ள சோமநாதர் ஆலயம், பாரதத்தின் மிகப்புனிதமான ஆன்மீகத் தலங்களில் ஒன்றாகும். சிவபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் முதன்மையானதாக இது போற்றப்படுகிறது. சிவன், விஷ்ணு (கிருஷ்ணர்) மற்றும் சக்தி ஆகிய மூன்று சக்திகளின் சங்கமமாகத் திகழும் இத்தலம், இந்தியாவின் ஆன்மீக மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் அடையாளமாகும்.
சோமநாதர் ஆலயத்தின் வரலாறு மிகவும் உத்வேகமானது. 11-ஆம் நூற்றாண்டு முதல் 18-ஆம் நூற்றாண்டு வரை பலமுறை அந்நியப் படையெடுப்பாளர்களால் இந்த ஆலயம் சூறையாடப்பட்டுத் தகர்க்கப்பட்டது. குறிப்பாக, கி.பி. 1026-இல் இக்கோவில் முதல் பெரும் தாக்குதலைச் சந்தித்தது. இருப்பினும், ஒவ்வொரு முறை அழிக்கப்பட்ட போதும், பக்தர்களும் மன்னர்களும் இணைந்து இதனை மீண்டும் கட்டி எழுப்பினர். 12-ஆம் நூற்றாண்டில் மன்னர் குமாரபாலர், 13-ஆம் நூற்றாண்டில் ஜூனாகத் மன்னர் மற்றும் 18-ஆம் நூற்றாண்டில் இந்தூர் ராணி அஹில்யாபாய் ஹோல்கர் ஆகியோர் இக்கோவிலைப் புனரமைப்பதில் முக்கியப் பங்காற்றினர்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, 1947-இல் சிதைந்த நிலையில் இருந்த ஆலயத்தைப் பார்வையிட்ட சர்தார் வல்லப்பாய் படேல், அதனை மீண்டும் கட்ட உறுதி பூண்டார். இந்தியாவின் கலாச்சார தன்னம்பிக்கையை மீட்டெடுக்க இக்கோவில் மறுசீரமைப்பு அவசியம் என்று அவர் நம்பினார். மக்களின் பங்களிப்புடன், 'கைலாச மஹா மேரு பிரசாத்' கட்டிடக்கலை பாணியில் தற்போதைய ஆலயம் கம்பீரமாக உருவாக்கப்பட்டது.
1951 மே 11 அன்று அன்றைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்களால் இக்கோவில் முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டது. பல நூற்றாண்டுகளாக நடந்த தாக்குதல்களைக் கடந்து, இன்று 75 ஆண்டுகளைக் கடந்த நிலையில், சோமநாதர் ஆலயம் இந்தியாவின் அசைக்க முடியாத நம்பிக்கை, சகிப்புத்தன்மை மற்றும் தேசியப் பெருமையின் சின்னமாய் உயர்ந்து நிற்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2259131®=3&lang=1
****
TV/VK/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2259221)
வருகையாளர் எண்ணிக்கை : 16