பாதுகாப்பு அமைச்சகம்
மலையேற்ற மீட்பு அமைப்பின் 10 ஆண்டுகால சேவையை நினைவுகூரும் 'திரங்கா மவுண்டன் ரெஸ்க்யூ' புகைப்படக் கண்காட்சி
இடுகை இடப்பட்ட நாள்:
08 MAY 2026 5:44PM by PIB Chennai
இந்தியாவின் உயரமான மலைப்பகுதிகளில் மீட்பு அமைப்பான 'திரங்கா மவுண்டன் ரெஸ்க்யூ', நாட்டிற்கு ஆற்றிய 10 ஆண்டுகால அர்ப்பணிப்புமிக்க சேவையை நினைவுகூரும் வகையில், புது தில்லியிலுள்ள 'மானேக்ஷா மையத்தில்' புகைப்படக் கண்காட்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. 'நாட்டிற்கு ஆற்றிய பத்தாண்டு கால அமைதிச் சேவை' என்ற தலைப்பில் நடைபெறும் இந்தக் கண்காட்சியை, 2026 மே 8 அன்று பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பார்வையிட்டார். நாட்டின் உயரமான மலைப்பகுதிகளில், மீட்பு நடவடிக்கைகளைச் சித்தரிக்கும், மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் புகைப்படங்கள் இக்கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. இவை தன்னார்வலர்களின் மன உறுதியையும், அவர்களது முயற்சிகளால் காப்பாற்றப்பட்ட உயிர்களையும் சிறப்பான முறையில் பறைசாற்றின.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், மிகவும் சவாலான பகுதிகளில், மீட்பு நடவடிக்கைகளின்போது வெளிப்படுத்திய துணிச்சல், ஒழுக்கம் மற்றும் தன்னலமற்ற சேவையைப் பெரிதும் பாராட்டினார். "எல்லைகளைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினர், பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு ஈடுஇணையற்ற வகையில் திறம்பட மேற்கொள்கின்றனர். சில சந்தர்ப்பங்களில், இயற்கைச் சூழலே அவர்களுக்கு எதிராக இருந்த போதிலும், இத்தகைய இக்கட்டான சூழ்நிலைகளில், தங்களது இன்னுயிரைப் பணயம் வைத்து, மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இது வீரர்களின் மன உறுதியை அதிகரிப்பதுடன், மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்களும், தாங்கள் தனித்துவிடப்படவில்லை என்ற நம்பிக்கை கொண்டுள்ளனர். இவர்களின் அமைதியான, அதே சமயம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் பணி, இந்தியாவின் உண்மையான உணர்வைப் பிரதிபலிப்பதாக உள்ளது," என்று அவர் கூறினார்.
இயந்திரங்கள் உதவிகளையும், அமைப்புகள் ஆதரவையும் வழங்கினாலும், கடமை உணர்வு கொண்ட தனிமனிதனே ஒரு உயிரைக் காப்பாற்ற முன்வருவதாக திரு ராஜ்நாத் சிங் மேலும் குறிப்பிட்டார். இந்த உணர்வின் உண்மையான பாதுகாவலர்கள் என்பதை 'திரங்கா மவுண்டன் ரெஸ்க்யூ' படை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2259112®=3&lang=1
(Release ID: 2259112)
****
TV/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2259183)
வருகையாளர் எண்ணிக்கை : 5