பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குஜராத்தில் நடைபெற்ற சோமநாத் சுயமரியாதை பெருவிழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 11 JAN 2026 2:29PM by PIB Chennai

 

ஜெய் சோமநாத்! ஜெய் சோமநாத்!

குஜராத்தின் முதலமைச்சர் திரு. பூபேந்திரபாய் படேல் அவர்களே; துணை முதலமைச்சர் திரு.ஹர்ஷ் சங்கவி அவர்களே; குஜராத் அரசு அமைச்சர்கள் திரு.ஜிட்டுபாய் வகானி, திரு.அர்ஜுன்பாய் மோத்வாடியா, டாக்டர் பிரத்யும்ன வாஜா, திரு.கௌசிக்பாய் வேகாரியா அவர்களே; நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ராஜேஷ்பாய் அவர்களே; புகழ்பெற்ற பிரமுகர்களே, பெரியோர்களே, தாய்மார்களே! இன்று நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் நம்முடன் இணைந்துள்ளனர், அவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் - சோமநாத்திற்கு வெற்றி உண்டாகட்டும்.

நண்பர்களே,

இந்தத் தருணம் அசாதாரணமானது, இந்தச் சூழல் அசாதாரணமானது, இந்தக் கொண்டாட்டம் அசாதாரணமானது. ஒருபுறம், தேவாதி தேவன் மகாதேவர்; மறுபுறம், கடலின் பரந்த அலைகள்; சூரியனின் கதிர்கள், புனித மந்திரங்களின் முழக்கம், பக்தியின் எழுச்சி - இந்த தெய்வீகச் சூழலில், சோமநாத் பெருமானின் பக்தர்கள் அனைவரும் முன்னிலையில் இருப்பது இந்த நிகழ்வைத் தெய்வீகமாகவும் பிரம்மாண்டமாகவும் மாற்றுகிறது. சோமநாத் கோயில் அறக்கட்டளையின் தலைவராக, சோமநாத் சுயமரியாதை பெருவிழாவில் தீவிரமாகப் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளதை எனது பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.

72 மணி நேரமாகத் தொடர்ச்சியான ஓங்கார முழக்கம், 72 மணி நேரமாகத் தடையற்ற மந்திர உச்சாடனம். நேற்று மாலை, ஆயிரம் ட்ரோன்கள்) மற்றும் வேத குருகுலத்தைச் சேர்ந்த ஆயிரம் மாணவர்கள் இணைந்து சோமநாத்தின் ஆயிரம் கால வரலாற்றை வழங்கியதை நான் கண்டேன். இன்று, 108 குதிரைகள் அணிவகுத்து வந்து கோயிலைச் சென்றடைந்த அந்த வீரமிக்க ஊர்வலம், மந்திரங்கள் மற்றும் பாடல்களின் வசீகரிக்கும் வழங்கல் என அனைத்தும் மெய்சிலிர்க்க வைக்கின்றன. இந்த அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது; காலம் மட்டுமே இதைப் பாதுகாக்கும். இந்தக் கொண்டாட்டம் பெருமிதம், கண்ணியம், மகிமை மற்றும் ஞானத்தின் உருவகமாகும். இது பிரம்மாண்டத்தின் பாரம்பரியம், ஆன்மீகத்தின் சாரம், அனுபவத்தின் மகிழ்ச்சி, ஒற்றுமையின் கதகதப்பு மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக மகாதேவரின் ஆசீர்வாதங்களைக் கொண்டுள்ளது. வாருங்கள், என்னுடன் இணைந்து முழங்குங்கள்: நம பார்வதி பதயே… ஹர ஹர மகாதேவ்!

நண்பர்களே,

இன்று நான் உங்களிடையே பேசும்போது, எனது மனம் மீண்டும் மீண்டும் ஒரு கேள்வியைக் கேட்கிறது: சரியாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, நீங்கள் அமர்ந்திருக்கும் இதே இடத்தில், அன்றைய சூழல் எப்படி இருந்திருக்கும்? இன்று இங்கே கூடியிருக்கும் உங்கள் முன்னோர்கள், நமது முன்னோர்கள், தங்கள் உயிரையே பணயம் வைத்தார்கள். தங்கள் நம்பிக்கைக்காக, தங்கள் பக்திக்காக, தங்கள் மகாதேவருக்காக அவர்கள் அனைத்தையும் தியாகம் செய்தார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, அந்தப் படையெடுப்பாளர்கள் தாங்கள் வெற்றி பெற்றுவிட்டதாக நினைத்தார்கள். ஆனால், இதோ ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, சோமநாத் கோயிலின் உச்சியில் பறக்கும் கொடி, இந்தியாவின் உண்மையான பலத்தையும் சக்தியையும் இந்த அகிலத்திற்கே பறைசாற்றுகிறது. பிரபாஸ் பட்டினத்தின் இந்த புனித பூமியின் ஒவ்வொரு துகளும் வீரம், துணிச்சல் மற்றும் தியாகத்திற்கு சாட்சியாகத் திகழ்கிறது. சோமநாத்தின் இந்த வடிவத்திற்காக, எண்ணற்ற சிவபக்தர்கள், கலாச்சாரத்தை ஆராதிப்பவர்கள் மற்றும் பாரம்பரியத்தைக் காப்பவர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்தனர். இந்தச் சோமநாத் சுவாபிமான் பர்வ் (சோமநாத் சுயமரியாதை பெருவிழா) தருணத்தில், சோமநாத்தைப் பாதுகாக்கவும், கோயிலைப் புனரமைக்கவும் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து, மகாதேவருக்காக அனைத்தையும் தியாகம் செய்த ஒவ்வொரு வீரமகன் மற்றும் வீரமகள்களை நான் வணங்குகிறேன்.

சகோதர சகோதரிகளே,

இந்த பிரபாஸ் பட்டினத் திருத்தலம் சிவபெருமானின் தளம் மட்டுமல்ல, இதன் புனிதமானது பகவான் ஸ்ரீகிருஷ்ணருடனும் தொடர்புடையது. மகாபாரதக் காலத்தில், பாண்டவர்களும் இந்த புனிதத் தலத்தில் தவம் செய்துள்ளனர். எனவே, இந்தத் தருணம் இந்தியாவின் எண்ணற்ற பரிமாணங்களை வணங்குவதற்கான ஒரு வாய்ப்பாகும். சோமநாத்தின் ஆயிரம் ஆண்டு காலப் பெருமிதப் பயணம் நினைவு கூரப்படும் இதே வேளையில், 1081-ல் (1951-ல்) அதன் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதும் ஒரு மகிழ்ச்சியான தற்செயல் நிகழ்வாகும். இந்தச் சோமநாத் சுயமரியாதை பெருவிழாவில் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான பக்தர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

சோமநாத் சுயமரியாதை பெருவிழா என்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அழிவை நினைவு கூர்வது மட்டுமல்ல. இது ஆயிரம் ஆண்டு காலப் பயணத்தைக் கொண்டாடும் நிகழ்வாகும். இது இந்தியாவின் இருப்பு மற்றும் பெருமிதத்தின் திருவிழா. ஏனெனில் ஒவ்வொரு அடியிலும், ஒவ்வொரு மைல்கல்லிலும், சோமநாத்திற்கும் இந்தியாவிற்கும் இடையே தனித்துவமான ஒற்றுமைகளை நாம் காண்கிறோம். சோமநாத்தை அழிக்க எப்படி மீண்டும் மீண்டும் முயற்சிகளும், சதிகளும் நடந்தனவோ, அதேபோல் பல நூற்றாண்டுகளாக இந்தியாவை அழிக்கவும் அந்நியப் படையெடுப்பாளர்கள் முயன்றனர். இருப்பினும், சோமநாத்தும் அழியவில்லை, இந்தியாவும் அழியவில்லை! ஏனெனில் இந்தியாவும், இந்தியாவின் நம்பிக்கையின் மையங்களும் பிரிக்க முடியாத வகையில் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளன.

நண்பர்களே,

சரியாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அந்த வரலாற்றைக் கற்பனை செய்து பாருங்கள் — கி.பி. 1026-ல், கஜினியின் முகமது முதன்முதலில் சோமநாத் கோயிலைத் தாக்கித் தகர்த்தார். சோமநாத்தின் அடையாளத்தையே அழித்துவிட்டதாக அவர் நினைத்தார். ஆனால், ஒரு சில ஆண்டுகளிலேயே சோமநாத் மீண்டும் எழுப்பப்பட்டது. 12-ம் நூற்றாண்டில், அரசர் குமாரபாலர் கோயிலைப் பிரம்மாண்டமாகப் புனரமைத்தார். 13-ம் நூற்றாண்டின் இறுதியில், அலாவுதீன் கில்ஜி மீண்டும் சோமநாத் மீது தாக்குதல் நடத்தும் துணிச்சலைப் பெற்றார். கில்ஜியின் படைகளுக்கு எதிராக ஜலூர் ஆட்சியாளர் வீரத்துடன் போரிட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு, 14-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஜூனாகத் மன்னர் மீண்டும் சோமநாத்தின் புனிதத்தை நிலைநாட்டினார். 14-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், முசாபர் கான் சோமநாத்தைத் தாக்கினார், ஆனால் அந்தத் தாக்குதலும் தோல்வியடைந்தது.

15-ம் நூற்றாண்டில், சுல்தான் அகமது ஷா கோயிலை அவமதிக்க முயன்றார், பின்னர் அவரது பேரன் சுல்தான் முகமது பெகடா சோமநாத்தை ஒரு மசூதியாக மாற்ற முயன்றார். இருப்பினும், மகாதேவரின் பக்தர்களின் முயற்சியால், கோயில் மீண்டும் உயிர் பெற்றது. 17 மற்றும் 18-ம் நூற்றாண்டுகளில் அவுரங்கசீப்பின் காலம் வந்தது. அவர் கோயிலை அவமதித்து, மீண்டும் மசூதியாக மாற்ற முயன்றார். அதற்குப் பிறகும், அஹில்யாபாய் ஹோல்கர் ஒரு புதிய கோயிலை நிறுவினார், அதன் மூலம் சோமநாத் மீண்டும் ஒருமுறை பொலிவுற்றது.

எனவே, சோமநாத்தின் வரலாறு என்பது அழிவு மற்றும் தோல்வியின் வரலாறு அல்ல. இது வெற்றி மற்றும் புனரமைப்பின் வரலாறு. இது நமது முன்னோர்களின் வீரம், தியாகம் மற்றும் அர்ப்பணிப்பின் வரலாறு. படையெடுப்பாளர்கள் வந்துகொண்டே இருந்தனர், மதவெறியின் புதிய அலைகள் தாக்கிக்கொண்டே இருந்தன, ஆனால் ஒவ்வொரு யுகத்திலும் சோமநாத் மீண்டும் மீண்டும் நிறுவப்பட்டது. இத்தகைய பல நூற்றாண்டுகாலப் போராட்டம், நீண்டகால எதிர்ப்பு, அளப்பரிய பொறுமை, புனரமைப்பில் காட்டிய படைப்பாற்றல் மற்றும் உறுதி — இத்தகைய பலம், கலாச்சாரத்தின் மீதான இத்தகைய நம்பிக்கை மற்றும் பக்தி — இதற்கான உதாரணங்கள் உலக வரலாற்றிலேயே மிக அரிதானவை. சொல்லுங்கள், நமது முன்னோர்களின் வீரத்தை நாம் நினைவு கூர வேண்டாமா? அவர்களின் வீரச் செயல்களிலிருந்து நாம் உத்வேகம் பெற வேண்டாமா? எந்த மகன்தான், எந்த சந்ததியினர்தான் தனது முன்னோர்களின் வீரத்தை மறப்பது போல் பாசாங்கு செய்வார்கள்?

சகோதர சகோதரிகளே,

கஜினி முதல் அவுரங்கசீப் வரை எண்ணற்ற படையெடுப்பாளர்கள் சோமநாத்தைத் தாக்கினார்கள். தங்கள் வாள்கள் நித்தியமான சோமநாத்தை வென்றுவிட்டதாக அவர்கள் நம்பினார்கள். ஆனால் அந்த மதவெறியர்கள் ஒரு உண்மையை உணர்ந்திருக்கவில்லை; சோமநாத் என்ற பெயரிலேயே 'சோம்' (Som) உள்ளது - அது அழியாத அமிர்தத்தைக் குறிக்கிறது. நஞ்சைப் பருகினாலும் மரணமில்லாமல் இருப்பதையே அது உணர்த்துகிறது. அதற்குள் சதாசிவ மகாதேவரின் விழிப்புணர்வு ஆற்றல் குடியிருக்கிறது, அவரே நன்மைகளை வழங்குபவர் மற்றும் "பிரசண்ட தாண்டவ சிவ:" (Prachanda Tandava Shiva) என்பதில் வெளிப்படும் பேராற்றலின் பிறப்பிடமும் அவரே ஆவார்.

சகோதர சகோதரிகளே,

சோமநாத்தில் வீற்றிருக்கும் மகாதேவர் 'மிருத்யுஞ்ஜயர்' என்றும் அழைக்கப்படுகிறார் — அவர் மரணத்தை வென்றவர், காலத்தின் வடிவமாகத் திகழ்பவர். யதோ ஜாயதே பால்யதே யேன விஷ்வம், தமிஷம் பஜே லீயதே யத்ர விஷ்வம்! அதாவது, பிரபஞ்சம் அவரிடமிருந்து பிறக்கிறது, அவரால் காக்கப்படுகிறது, மீண்டும் அவருள்ளேயே லயிக்கிறது. நாம் நம்புவது: த்வமேகோ ஜகத் வியாபகோ விஸ்வ ரூப்! அதாவது, சிவபெருமான் அகிலம் முழுவதும் வியாபித்திருக்கிறார்.

அதனால்தான் ஒவ்வொரு துகளிலும், ஒவ்வொரு கல்லிலும் நாம் சங்கரனைக் காண்கிறோம். அப்படியிருக்கையில், சங்கரனின் எண்ணற்ற வடிவங்களை எவரால் அழிக்க முடியும்? உயிரினங்களுக்குள்ளும் சிவத்தைக் காண்பவர்கள் நாம்! நம் நம்பிக்கையை யாரால் அசைக்க முடியும்?

நண்பர்களே,

இது காலச் சக்கரம் — சோமநாத்தை அழிக்கும் எண்ணத்துடன் வந்த மதவெறியர்கள் இன்று வரலாற்றின் ஒரு சில பக்கங்களுக்குள் ஒடுங்கிப் போய்விட்டனர். ஆனால், இன்றும் சோமநாத் தலம் அந்தப் பரந்த கடலோரத்தில் தர்மத்தின் கொடியை உயர்த்திப் பிடித்தபடி கம்பீரமாக நிற்கிறது. சோமநாத்தின் கோபுரம் இவ்வாறு பிரகடனம் செய்வது போல் தோன்றுகிறது: சந்திரசேகரம் ஆஷ்ரயே மம கிம் கரிஷ்யதி வை யம:! — "நான் சந்திரசேகர சிவனைச் சரணடைந்துள்ளேன்; காலத்தினால் கூட எனக்கு எதையும் செய்ய முடியாது."

நண்பர்களே,

சோமநாத் சுயமரியாதை பெருவிழா என்பது வரலாற்றுப் பெருமையைக் கொண்டாடுவது மட்டுமல்ல, அது ஒரு நித்தியப் பயணத்தை வருங்காலத்திற்காக உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஊடகமுமாகும். நமது அடையாளத்தையும் இருப்பையும் வலுப்படுத்த இந்தத் தருணத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பாருங்கள், ஏதேனும் ஒரு நாட்டிற்குச் சில நூறு ஆண்டுகள் பழமையான பாரம்பரியம் இருந்தால், அதைத் தனது அடையாளமாக உலகிற்கு முன் வைக்கிறது. ஆனால், இந்தியாவிடம் சோமநாத் போன்ற ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான புனிதத் தலங்கள் உள்ளன. இந்த இடங்கள் நமது வலிமை, உறுதி மற்றும் பாரம்பரியத்தின் அடையாளங்களாக இருந்து வருகின்றன. துரதிர்ஷ்டவசமாக, சுதந்திரத்திற்குப் பிறகு, அடிமை மனப்பான்மை கொண்டவர்கள் இந்தப் பாரம்பரியத்திலிருந்து தங்களைத் தூர விலக்கி வைக்க முயன்றனர். இந்த வரலாற்றை அழிப்பதற்கான தீய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

சோமநாத்தைப் பாதுகாக்க இந்த தேசம் எவ்வளவு தியாகம் செய்தது என்பதை நாம் அறிவோம். ராவல் கன்ஹாத்தேவ் போன்ற ஆட்சியாளர்களின் முயற்சிகள், வீர் ஹமிர்ஜி கோஹிலின் வீரம், வேக்டா பில்லின் துணிச்சல் என எத்தனையோ வீரர்கள் சோமநாத் கோயில் வரலாற்றோடு பிணைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால், அவர்களுக்கு உரிய அங்கீகாரம் ஒருபோதும் வழங்கப்படவில்லை. மாறாக, சில வரலாற்றாசிரியர்களும் அரசியல்வாதிகளும் படையெடுப்புகளின் வரலாற்றைத் திசைதிருப்ப முயன்றனர். மதவெறியை வெறும் கொள்ளைச் செயலாகச் சித்தரித்துப் புத்தகங்கள் எழுதப்பட்டன. ஆனால் சோமநாத் ஒருமுறை மட்டும் தாக்கப்படவில்லை — அது மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டது. தாக்குதல்கள் வெறும் கொள்ளைக்காக மட்டுமே இருந்திருந்தால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்த முதல் பெரிய கொள்ளையோடு அவை நின்றிருக்கும். ஆனால் அதுவல்ல உண்மை. சோமநாத்தின் புனிதச் சிலை அவமதிக்கப்பட்டது, கோயிலின் வடிவம் மீண்டும் மீண்டும் மாற்றப்பட்டது. ஆனால் சோமநாத் கொள்ளைக்காக மட்டுமே அழிக்கப்பட்டது என்று நமக்குக் கற்பிக்கப்பட்டது. வெறுப்பு, ஒடுக்குமுறை மற்றும் பயங்கரவாதத்தின் கொடூர வரலாறு நம்மிடமிருந்து மறைக்கப்பட்டது.

நண்பர்களே,

தங்கள் மதத்தின் மீது உண்மையான பக்தி கொண்ட எவரும் இத்தகைய மதவெறியை ஆதரிக்க மாட்டார்கள். இருப்பினும், திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபடுபவர்கள் எப்போதும் இந்த மனநிலைக்கு முன்னால் பணிந்தே நின்றனர். இந்தியா அடிமைச் சங்கிலிகளிலிருந்து விடுபட்டபோது, சர்தார் படேல் சோமநாத்தை மீண்டும் கட்டியெழுப்பும் சபதத்தை ஏற்றபோது கூட, அதைத் தடுக்கும் முயற்சிகள் நடந்தன. 1951-ல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்கள் இங்கு வந்தபோது கூடத் தார்மீக எதிர்ப்புகள் கிளப்பப்பட்டன. அந்த நேரத்தில், சௌராஷ்டிராவின் மிகவும் புகழ்பெற்ற ஆட்சியாளரான நமது ஜாம் சாஹேப் மகாராஜா திக்விஜய் சிங் அவர்கள் முன்வந்தார். நிலம் கையகப்படுத்துவது முதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் வரை அனைத்திலும் தேசியப் பெருமிதத்திற்கே அவர் முதலிடம் அளித்தார். அந்த காலகட்டத்தில், ஜாம் சாஹேப் சோமநாத் கோயிலுக்காக ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியதுடன், அறக்கட்டளையின் முதல் தலைவராகப் பெரும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.

சகோதர சகோதரிகளே,

வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், சோமநாத் புனரமைப்பை எதிர்த்த அதே சக்திகள் இன்றும் நம் நாட்டில் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. இன்று வாள்களுக்குப் பதிலாக, இந்தியாவிற்கு எதிரான சதித்திட்டங்கள் வேறு பல தீய வடிவங்களை எடுக்கின்றன. அதனால்தான் நாம் இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும், நம்மை நாமே வலிமையாக்கிக் கொள்ள வேண்டும். நம்மைப் பிரிக்க நினைக்கும் ஒவ்வொரு சக்தியையும் தோற்கடிக்க நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும், ஒன்றிணைந்து நிற்க வேண்டும்.

நண்பர்களே,

நமது நம்பிக்கையுடனும், நமது வேர்களுடனும் நாம் இணைந்திருக்கும்போது, நமது பாரம்பரியத்தை விழிப்புணர்வுடனும் பெருமையுடனும் பாதுகாக்கும்போது, நமது நாகரிகத்தின் வேர்கள் மேலும் வலுவடைகின்றன. அதனால்தான் இந்த ஆயிரம் ஆண்டு காலப் பயணம், அடுத்த ஆயிரம் ஆண்டுகளை எதிர்கொள்ளத் தயாராக நமக்கு உத்வேகம் அளிக்கிறது.

நண்பர்களே,

ராமர் கோயில் பிரதிஷ்டை செய்யப்பட்ட அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கான இந்தியாவின் பிரம்மாண்டமான தொலைநோக்குப் பார்வையை நான் முன்வைத்தேன். "தெய்வீகத்திலிருந்து தேசத்திற்கு" என்ற பார்வையுடன் முன்னேறுவது குறித்து நான் பேசினேன். இன்று, இந்தியாவின் கலாச்சார மறுமலர்ச்சி கோடிக்கணக்கான குடிமக்களிடையே புதிய நம்பிக்கையை விதைத்து வருகிறது. இன்று ஒவ்வொரு இந்தியரும் வளர்ச்சியடைந்த இந்தியா  மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். இன்று 140 கோடி இந்தியர்களும் எதிர்கால இலக்குகளை நோக்கி உறுதியுடன் உள்ளனர். இந்தியா தனது புகழை புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்லும். வறுமைக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெறுவோம். வளர்ச்சியின் புதிய சிகரங்களை எட்டுவோம். முதலில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறுவது, அதன் பிறகு அதைத் தாண்டிய பயணம் — அதற்கான பாதை இப்போது தயாராக உள்ளது. சோமநாத் கோயிலின் ஆற்றல் இந்த லட்சியங்களுக்கு ஆசி வழங்குகிறது.

நண்பர்களே,

இன்றைய இந்தியா பாரம்பரியத்திலிருந்து வளர்ச்சியை நோக்கிய உத்வேகத்துடன் முன்னோக்கிச் செல்கிறது. சோமநாத்தில் வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் நனவாகி வருகின்றன. ஒருபுறம் சோமநாத் கோயிலின் கலாச்சார விரிவாக்கம், சோமநாத் சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்தின் நிறுவுதல், மாதவ்பூர் திருவிழாவின் துடிப்பு என இவை அனைத்தும் நமது பாரம்பரியத்தை வலுப்படுத்துகின்றன. கிர் சிங்கங்களின் பாதுகாப்பு இந்தப் பிராந்தியத்தின் இயற்கை ஈர்ப்பை அதிகப்படுத்துகிறது. மறுபுறம், பிரபாஸ் பட்டினத்தில் வளர்ச்சியின் புதிய பரிமாணங்கள் உருவாக்கப்படுகின்றன. கேஷோட் விமான நிலைய விரிவாக்கத்தின் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வரும் பக்தர்கள் நேரடியாகச் சோமநாத்தை அடைய முடியும். அகமதாபாத் - வேராவல் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டதன் மூலம் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பயண நேரம் குறைந்துள்ளது. இந்தப் பிராந்தியத்தில் புனிதப் பயணச் சுற்றமைப்பு மேம்பாட்டுப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு, இன்றைய இந்தியா நம்பிக்கையை நினைவுகூர்வது மட்டுமல்லாமல், உள்கட்டமைப்பு, இணைப்பு வசதி மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் மூலம் எதிர்காலத்திற்காக அதனை வலுப்படுத்துகிறது.

நண்பர்களே,

நமது நாகரிகத்தின் செய்தி ஒருபோதும் மற்றவர்களைத் தோற்கடிப்பது அல்ல, மாறாக வாழ்க்கையைச் சமநிலையில் வைத்திருப்பதே ஆகும். நமது பாரம்பரியத்தில், நம்பிக்கையின் பாதை ஒருபோதும் வெறுப்பிற்கு இட்டுச் செல்வதில்லை. நமது பலம் நமக்கு அழிவின் அகந்தையைக் கொடுப்பதில்லை. படைப்பின் பாதை நீண்டது, ஆனால் அது நிலையானது, நித்தியமானது என்பதை சோமநாத் நமக்குக் கற்பித்துள்ளது. வாளின் நுனியால் ஒருபோதும் இதயங்களை வெல்ல முடியாது. மற்றவர்களை அழிப்பதன் மூலம் முன்னேறத் துடிக்கும் நாகரிகங்கள் காலப்போக்கில் தாங்களே காணாமல் போய்விடுகின்றன. அதனால்தான் இந்தியா உலகிற்கு மற்றவர்களைத் தோற்கடிப்பதன் மூலம் எப்படி வெற்றி பெறுவது என்பதைக் கற்றுக்கொடுக்கவில்லை, மாறாக இதயங்களை வெல்வதன் மூலம் எப்படி வாழ்வது என்பதைக் கற்றுக்கொடுத்துள்ளது. இந்தச் சிந்தனைதான் இன்று உலகிற்குத் தேவை. சோமநாத்தின் ஆயிரம் ஆண்டு கால காவியம் இந்தப்பாடத்தை ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் வழங்குகிறது.

எனவே, நாம் ஒரு சபதத்தை ஏற்போம் — வளர்ச்சியை நோக்கி முன்னேறுவோம், நமது இலக்குகளைக் கண் இமைக்காமல் கவனித்தபடி, நமது கடந்த காலத்துடனும் பாரம்பரியத்துடனும் இணைந்திருந்து, தோளோடு தோள் நின்று, இதயத்தோடு இதயம் பிணைந்து, அடியெடுத்து வைத்து ஒன்றிணைந்து நடப்போம். நமது விழிப்புணர்வைக் காத்துக்கொண்டே நவீனத்தை அரவணைப்போம். சோமநாத் சுயமரியாதை பெருவிழா போன்ற திருவிழாக்களில் இருந்து உத்வேகம் பெற்று, முன்னேற்றப் பாதையில் விரைந்து நடப்போம். ஒவ்வொரு சவாலையும் கடந்து நமது இலக்குகளை எட்டுவோம். இந்தத் திட்டம் இன்று தொடங்குகிறது, ஆனால் இந்த ஆயிரம் ஆண்டு காலப் பயணத்தை நாடு முழுவதும் நாம் நினைவு கூர வேண்டும். நமது பாரம்பரியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டும். இந்த 75 ஆண்டு காலப் புதிய மைல்கல்லைக் கொண்டாடி, 2027 மே மாதம் வரை இக்கொண்டாட்டத்தைத் தொடர வேண்டும். ஒவ்வொரு குடிமகனையும் விழிப்படையச் செய்வோம், விழிப்படைந்த தேசம் தனது கனவுகளை நனவாக்க முன்னோக்கிச் செல்லட்டும். இந்த விருப்பத்துடன், எனது சக நாட்டு மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஹர ஹர மகாதேவ்!

ஜெய் சோமநாத்!

ஜெய் சோமநாத்!

ஜெய் சோமநாத்!

 

***

AD/VK/PD


(வெளியீட்டு அடையாள எண்: 2256892) வருகையாளர் எண்ணிக்கை : 11