பிரதமர் அலுவலகம்
வாரணாசியில் நடைபெற்ற 72-வது தேசிய வாலிபால் போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்:
प्रविष्टि तिथि:
04 JAN 2026 3:00PM by PIB Chennai
ஹர் ஹர் மகாதேவ்!
உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யநாத் அவர்களே, துணை முதலமைச்சர் திரு. பிரஜேஷ் பதக் அவர்களே, உத்தரப் பிரதேச அரசின் அமைச்சர்களான சகோதரர் திரு. ரவீந்திர ஜெய்ஸ்வால் அவர்களே, திரு.தயாசங்கர், திரு கிரீஷ் யாதவ் அவர்களே, பனாரஸ் மேயர் சகோதரர் திரு.அசோக் திவாரி அவர்களே, ஏனைய மக்கள் பிரதிநிதிகளே, வாலிபால் சங்கத்தின் அனைத்துப் பொறுப்பாளர்களே, நாடு முழுவதிலும் இருந்து வந்துள்ள வீரர்களே மற்றும் காசியைச் சேர்ந்த எனது குடும்ப உறுப்பினர்களே—வணக்கம்.
காசியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், அனைத்து விளையாட்டு வீரர்களையும் வரவேற்பதிலும் வாழ்த்துவதிலும் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இன்று காசியில் தேசிய வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியின் தொடக்க விழா நடைபெறுகிறது. நீங்கள் ஒவ்வொருவரும் மிகுந்த கடின உழைப்பிற்குப் பிறகு இந்தத் தேசியப் போட்டியை எட்டியுள்ளீர்கள். வரும் நாட்களில், உங்கள் உழைப்பு காசியின் மைதானங்களில் சோதிக்கப்படும். நாட்டின் 28 மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் இங்குத் திரண்டுள்ளதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்பதன் அழகான படத்தைக் கண்முன்னே நிறுத்துகிறது. இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் அனைத்து வீரர்களுக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
பனாரஸில் ஒரு பேச்சு உண்டு: "நீங்கள் பனாரஸை உண்மையாகத் தெரிந்து கொள்ள விரும்பினால், நீங்கள் பனாரஸிற்கு வர வேண்டும்." நீங்கள் அனைவரும் இங்கு வந்துள்ளீர்கள், இப்போது நீங்கள் பனாரஸைப் பற்றியும் தெரிந்து கொள்வீர்கள். நமது பனாரஸ் விளையாட்டு ஆர்வலர்கள் நிறைந்த நகரம். மல்யுத்தம், மல்யுத்த மைதானங்கள், குத்துச்சண்டை, படகுப் போட்டிகள், கபடி எனப் பல விளையாட்டுகள் இங்கு மிகவும் பிரபலம். பனாரஸ் பல தேசிய அளவிலான வீரர்களை உருவாக்கியுள்ளது. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், யுபி கல்லூரி மற்றும் காசி வித்யாபீடம் ஆகியவற்றின் விளையாட்டு வீரர்கள் மாநில மற்றும் தேசிய அளவில் ஜொலித்துள்ளனர். மேலும் காசி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அறிவு மற்றும் கலையைத் தேடி இங்கு வருபவர்கள் அனைவரையும் வரவேற்று வருகிறது. அதனால்தான், இந்தத் தேசிய வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியின் போது, பனாரஸின் உற்சாகம் உயரிய அளவில் இருக்கும் என்று நான் நம்புகிறேன். உங்களை உற்சாகப்படுத்தும் பார்வையாளர்களை நீங்கள் இங்கு காண்பீர்கள், மேலும் காசியின் விருந்தோம்பல் மரபுகளையும் நீங்கள் அனுபவிப்பீர்கள்.
நண்பர்களே,
வாலிபால் என்பது வெறும் சாதாரண விளையாட்டு மட்டுமல்ல. வலையின் இருபுறமும், இது சமநிலையின் விளையாட்டு, ஒத்துழைப்பின் விளையாட்டு மற்றும் இது உறுதியை பிரதிபலிக்கிறது. வாலிபால் விளையாட்டின் சாராம்சம் என்னவென்றால், என்ன நடந்தாலும் பந்து எப்போதும் மேல்நோக்கி உயர்த்தப்பட வேண்டும் என்பதாகும். வாலிபால் நம்மை அணி குழுஉணர்வுடன் இணைக்கிறது. ஒவ்வொரு வாலிபால் வீரரின் மந்திரமும் 'அணிக்கு முதலிடம்' என்பதாகும். ஒவ்வொரு வீரருக்கும் வெவ்வேறு திறமைகள் இருக்கலாம், ஆனால் அனைவரும் தங்கள் அணியின் வெற்றிக்காக விளையாடுகிறார்கள். இந்தியாவின் வளர்ச்சிக் கதைக்கும் வாலிபால் விளையாட்டுக்கும் இடையே நான் பல ஒற்றுமைகளைக் காண்கிறேன். எந்தவொரு வெற்றியும் ஒருபோதும் தனியாகப் பெறப்படுவதில்லை என்பதை வாலிபால் நமக்குக் கற்பிக்கிறது. நமது வெற்றி என்பது நமது ஒருங்கிணைப்பு, நமது நம்பிக்கை மற்றும் நமது அணியின் தயார்நிலை ஆகியவற்றைப் பொறுத்தே அமைகிறது. ஒவ்வொருவருக்கும் அவரவர் பங்கு உண்டு, அவரவர் பொறுப்பு உண்டு. ஒவ்வொரு நபரும் தனது பொறுப்பை நேர்மையாகவும் தீவிரமாகவும் நிறைவேற்றும்போது மட்டுமே நாம் வெற்றி பெறுகிறோம்.
நமது தேசமும் இதே வழியில்தான் முன்னேறி வருகிறது. தூய்மை இந்தியா முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வரை, ஒரு தாயின் பெயரில் ஒரு மரக்கன“று நடுவது முதல் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்கு வரை — ஒவ்வொரு குடிமகனும், ஒவ்வொரு சமூகமும், ஒவ்வொரு மாநிலமும் கூட்டு உணர்வுடனும், தேசத்திற்காக 'இந்தியா முதலில்' என்ற உணர்வுடனும் இணைந்து செயல்படுவதால்தான் நாம் முன்னேறி வருகிறோம்.
நண்பர்களே,
இன்று இந்தியாவின் வளர்ச்சியும் நமது பொருளாதாரமும் உலகம் முழுவதும் பரவலாகப் பாராட்டப்பட்டு வருகின்றன. ஆனால், ஒரு நாடு வளர்ச்சி அடையும் போது, அந்த முன்னேற்றம் பொருளாதார முனையுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. அந்தத் தன்னம்பிக்கை விளையாட்டு மைதானங்களிலும் பிரகாசிக்கிறது. ஒவ்வொரு விளையாட்டுத் துறையிலும் சமீபத்திய ஆண்டுகளில் நாம் இதையேதான் கண்டு வருகிறோம். 2014-ம் ஆண்டு முதல், பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் இந்தியாவின் செயல்பாடு சீராக மேம்பட்டுள்ளது. விளையாட்டு மைதானங்களில் நமது ஜென்-இசட் தடகள வீரர்கள் மூவண்ணக் கொடியை ஏந்துவதைக் காணும்போது நாம் மட்டற்ற பெருமை கொள்கிறோம்.
நண்பர்களே,
அரசாங்கமும் சமூகமும் விளையாட்டின் மீது அலட்சியமாக இருந்த ஒரு காலம் இருந்தது. இதன் காரணமாக, வீரர்கள் பெரும்பாலும் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி நிச்சயமற்ற உணர்வைக் கொண்டிருந்தனர், மேலும் மிகக் குறைவான இளைஞர்களே விளையாட்டை ஒரு வாழ்க்கைத் தொழிலாகத் தேர்ந்தெடுத்தனர். ஆனால் கடந்த பத்தாண்டுகளில், அரசு மற்றும் சமூகம் ஆகிய இரண்டின் மனநிலையிலும் ஒரு மாற்றத்தைக் கண்டுள்ளோம். அரசாங்கம் விளையாட்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை கணிசமாக அதிகரித்துள்ளது. இன்று இந்தியாவின் விளையாட்டு மாதிரி, 'வீரர்களை மையமாகக் கொண்டதாக' மாறியுள்ளது. திறமைகளைக் கண்டறிதல், அறிவியல் ரீதியான பயிற்சி, ஊட்டச்சத்து முதல் வெளிப்படையானத் தேர்வு வரை—ஒவ்வொரு நிலையிலும், விளையாட்டு வீரர்களின் நலன்களுக்கே முதலிடம் அளிக்கப்படுகிறது.
நண்பர்களே,
இன்று தேசம் 'சீர்திருத்த எக்ஸ்பிரஸ்' பயணத்தில் உள்ளது. ஒவ்வொரு துறையும், ஒவ்வொரு வளர்ச்சி இலக்கும் இந்தச் சீர்திருத்த எக்ஸ்பிரஸ்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது, அதில் விளையாட்டும் ஒன்றாகும். விளையாட்டுத் துறையிலும் முக்கிய சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 'தேசிய விளையாட்டு ஆளுமைச் சட்டம்' மற்றும் 'கேலோ பாரத் கொள்கை 2025' போன்ற விதிகள், உண்மையான திறமையாளர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதையும், விளையாட்டு அமைப்புகளில் வெளிப்படைத்தன்மை அதிகரிப்பதையும், நாட்டின் இளைஞர்கள் விளையாட்டு மற்றும் கல்வி ஆகிய இரண்டிலும் ஒரே நேரத்தில் முன்னேறுவதையும் உறுதி செய்யும்.
நண்பர்களே,
டாப்ஸ் போன்ற முன்முயற்சிகள் மூலம், இந்தியாவின் விளையாட்டுச் சூழல் மாறி வருகிறது. ஒருபுறம், நாம் வலுவான உள்கட்டமைப்பு மற்றும் நிதி உதவி முறைகளை உருவாக்கி வருகிறோம், மறுபுறம், நமது இளைஞர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த வாய்ப்புகளை வழங்கப் பணியாற்றி வருகிறோம். கடந்த பத்தாண்டுகளில், 17-வயதுக்குட்பட்டோருக்கான ஃபிபா உலகக் கோப்பை, ஹாக்கி உலகக் கோப்பை மற்றும் முக்கிய சதுரங்கப் போட்டிகள் என 20-க்கும் மேற்பட்ட பெரிய சர்வதேச நிகழ்வுகளை இந்தியா நடத்தியிருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். 2030-ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளும் இந்தியாவில் நடைபெற உள்ளன, மேலும் 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்குத் தேசம் முழு வலிமையுடன் தயாராகி வருகிறது. இவை அனைத்திற்கும் பின்னால் உள்ள முயற்சி என்னவென்றால், அதிகப்படியான வீரர்கள் விளையாடுவதற்கு மேன்மேலும் வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்வதுதான்.
நண்பர்களே,
பள்ளி அளவிலான வீரர்களுக்கு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் வாய்ப்புகளை வழங்கவும் நாம் பணியாற்றி வருகிறோம். 'கேலோ இந்தியா' முன்முயற்சிக்கு நன்றி, நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தேசிய மேடைக்கு உயர வாய்ப்பு கிடைத்துள்ளது. சில நாட்களுக்கு முன்புதான் 'நாடாளுமன்ற விளையாட்டுத் திருவிழா நிறைவடைந்தது, இதில் சுமார் ஒரு கோடி இளைஞர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். காசியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், இந்த மஹோத்சவத்தின் போது, எனது காசியைச் சேர்ந்த கிட்டத்தட்ட 3 லட்சம் இளைஞர்கள் மைதானத்தில் தங்களது வலிமையையும் திறமையையும் வெளிப்படுத்தினர் என்பதை நான் பெருமையுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நண்பர்களே,
விளையாட்டு உள்கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காசிக்கும் பயனளித்து வருகின்றன. இங்கு நவீன விளையாட்டு வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன, பல்வேறு விளையாட்டுகளுக்கான மைதானங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன, மேலும் புதிய விளையாட்டு வளாகங்கள் அருகிலுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்களுக்குப் பயிற்சி வாய்ப்புகளை வழங்கி வருகின்றன. நீங்கள் இன்று நின்று கொண்டிருக்கும் சிக்ரா மைதானம் இப்போது பல நவீன வசதிகளுடன் கூடியதாக உள்ளது.
நண்பர்களே,
பெரிய நிகழ்வுகளுக்குக் காசி தன்னைத் தயார்படுத்தி வருவது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்தத் தேசிய வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியின் மூலம் இந்தியாவின் விளையாட்டு களத்தில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிப்பது காசிக்கு மிகவும் முக்கியமானது. இதற்கு முன்பே, இங்கு பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, இது உள்ளூர் மக்களுக்கும் உள்ளூர் பொருளாதாரத்திற்கும் சிறப்பாகச் செயல்படப் பெரிய வாய்ப்புகளை வழ ங்கியுள்ளது. உதாரணமாக, பனாரஸ் முக்கியமான ஜி-20 கூட்டங்கள், காசி தமிழ்ச் சங்கமம் மற்றும் காசி தெலுங்குச் சங்கமம் போன்ற கலாச்சாரத் திருவிழாக்கள், இந்திய வம்சாவளியினரின் மாநாடுகள் ஆகியவற்றை நடத்தியுள்ளது, மேலும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கலாச்சாரத் தலைநகராகவும் காசி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இன்று, இந்தச் சாம்பியன்ஷிப் போட்டி இந்தச் சாதனைகளில் மற்றொரு மகுடமாகச் சேர்க்கப்படுகிறது. இந்த அனைத்து நிகழ்வுகளின் மூலமாகவும், இத்தகைய பிரம்மாண்டமான தளங்களுக்கான ஒரு முக்கிய இடமாகக் காசி உருவெடுத்து வருகிறது.
நண்பர்களே,
பனாரஸில் இப்போது இதமான குளிர்காலம் நிலவுகிறது. இந்த பருவத்தில், நீங்கள் மிகச்சிறந்த சுவையான உணவுகளைக் காணலாம். நேரம் கிடைத்தால், 'மலையோ' உணவை உண்டு மகிழுங்கள். பாபா விஸ்வநாதரின் ஆசிகளைப் பெறுங்கள், கங்கை நதியில் படகு சவாரி செய்யுங்கள்—இந்த அனுபவங்களை உங்களுடன் சுமந்து செல்லுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தத் தொடரில் உங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள். காசியின் மண்ணிலிருந்து, நீங்கள் அடிக்கும் ஒவ்வொரு 'ஸ்பைக்', ஒவ்வொரு 'பிளாக்' மற்றும் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு புள்ளியும் இந்தியாவின் விளையாட்டு மீதான விருப்பங்களை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லட்டும். இந்த எதிர்பார்ப்புடன், உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி. வந்தே மாதரம்!
***
AD/VK/PD
(रिलीज़ आईडी: 2256871)
आगंतुक पटल : 33
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Gujarati
,
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam