பிரதமர் அலுவலகம்
ஸ்ரீ ராமஜன்மபூமி ஆலயத்தில் தர்ம கொடியேற்றும் உற்சவத்தின் போது பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
25 NOV 2025 3:16PM by PIB Chennai
சியாவர் ராம் சந்தர் கி ஜெய்! சியாவர் ராம் சந்தர் கி ஜெய்! ஜெய் சியாராம்!
உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் அவர்களே, ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் மிகவும் மதிப்பிற்குரிய டாக்டர் மோகன் பகவத் அவர்களே, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் மதிப்பிற்குரிய மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் அவர்களே, இங்கு கூடியுள்ள மதிப்பிற்குரிய துறவிகள் சமூகமே, அனைத்து பக்தர்களே, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தைக் கண்டுகொண்டிருக்கும் நாட்டின் பல்வேறு பகுகளில் இருந்தும் உலக நாடுகளிலிருந்தும் வந்துள்ள கோடிக்கணக்கான ராம பக்தர்களே, பெரியோர்களே, தாய்மார்களே!
இன்று, அயோத்தி நகரம், இந்தியாவின் கலாச்சார உணர்வில் மற்றொரு திருப்புமுனையாகத் திகழ்கிறது. இன்று, ஒட்டுமொத்த இந்தியாவும், உலகம் முழுவதுமே, ராமின் தெய்வீக தோற்றத்தால் நிரம்பியுள்ளது. ஒவ்வொரு ராம பக்தரின் இதயத்திலும் நிகரற்ற மனநிறைவு, எல்லையற்ற நன்றியுணர்வு மற்றும் அளவற்ற அமானுஷ்ய மகிழ்ச்சி நிறைந்துள்ளது. நூற்றாண்டுகளின் காயங்கள் குணமாகின்றன, பல நூற்றாண்டுகளின் வலி இன்று முடிவுக்கு வருகிறது, பல நூற்றாண்டுகளின் தீர்மானம் இன்று வெற்றியை அடைகிறது. இன்று, 500 ஆண்டுகளாக எரிந்து வந்த ஒரு யாகத்தின் இறுதிக் காணிக்கையாக இது அமைகிறது. அந்த யாகமானது, ஒரு கணம் கூட நம்பிக்கையில் தளர்வில்லாமல் இருந்தது, ஒரு கணம் கூட அதன் நம்பிக்கையை முறித்துக் கொள்ளவில்லை. இன்று, பகவான் ஸ்ரீ ராமின் கர்ப்பக்கிரகத்தின் எல்லையற்ற ஆற்றல், ஸ்ரீ ராம் குடும்பத்தின் தெய்வீக மகிமை, இந்தத் தர்மக் கொடியின் வடிவில், இந்த மிகவும் தெய்வீகமான, மிகவும் பிரம்மாண்டமான கோவிலில் நிறுவப்பட்டுள்ளது.
நண்பர்களே,
இந்த தர்மத் துவஜம் (தர்மக் கொடி) ஒரு கொடி மட்டுமல்ல; இது இந்திய நாகரிகத்தின் மறுமலர்ச்சியின் கொடியாகும். அதன் காவி நிறம், அதில் பொறிக்கப்பட்டுள்ள சூர்ய வம்சத்தின் புகழ், அதில் பொறிக்கப்பட்டுள்ள ஓம் என்னும் சொல், மற்றும் அதில் பொறிக்கப்பட்டுள்ள கோவிதார் (Kovidar) மரம் ஆகியவை ராம் ராஜ்யத்தின் பெருமையைப் பிரதிபலிக்கின்றன. இந்தக் கொடி ஒரு தீர்மானம்; இந்தக் கொடி ஒரு வெற்றி. இந்தக் கொடி போராட்டத்தின் மூலம் உருவான ஒரு காவியம்; இந்தக் கொடி பல நூற்றாண்டுகளாகப் போற்றப்பட்ட கனவுகளின் உருவகம். இந்தக் கொடி, துறவிகளின் ஆன்மீகப் பயிற்சி மற்றும் சமூகத்தின் பங்களிப்பு ஆகியவற்றின் அர்த்தமுள்ள உச்சக்கட்டமாகும்.
நண்பர்களே,
இன்னும் பல நூற்றாண்டுகளுக்கும், இனி வரப்போகும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கும், இந்தத் தர்மத் துவஜம் (தர்மக் கொடி) பகவான் ராமரின் இலட்சியங்களையும் கோட்பாடுகளையும் பறைசாற்றும். இந்தத் தர்மக் கொடி உரக்கக் கூவும் - சத்யமேவ ஜயதே நான்றுதம்! அதாவது, வெற்றி எப்போதுமே உண்மைக்கே, பொய்யுக்கல்ல.
இந்தத் தர்மக் கொடி முழக்கமிடும் – சத்யம்-ஏகபதம் பிரம்ம சத்யே தர்ம: ப்ரதிஷ்டித: அதாவது, உண்மையே பிரம்மத்தின் வடிவம், தர்மம் உண்மையில்தான் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தர்மக் கொடி ஒரு உத்வேகமாக மாறும் - பிராண ஜாயே பர் வசன் ந ஜாஹி அதாவது, உயிரே போனாலும், கொடுத்த வார்த்தையைக் காப்பாற்ற வேண்டும். இந்தத் தர்மக் கொடி ஒரு செய்தியைத் தரும் – கர்ம பிரதான் விஷ்வ ரசி ராகா! அதாவது, இந்த உலகில் செயல் மற்றும் கடமைக்கே முதலிடம் கொடுக்கப்பட வேண்டும். இந்தத் தர்மக் கொடி ஒரு நல்லிணக்கத்தை விரும்பும் - பைர ந விக்ரஹ ஆஸ் ந த்ராஸா. சுக்மய தாஹி சதா ஸப ஆஸா அதாவது, சமுதாயத்தில் பாகுபாடு, வலி மற்றும் துன்பம் நீங்கி, அமைதியும் மகிழ்ச்சியும் இருக்க வேண்டும்.
இந்தத் தர்மக் கொடி நம்மைத் தீர்மானம் எடுக்க வைக்கும் – நஹிம் தரித்ர கோவு துகி ந தீனா. அதாவது, வறுமை இல்லாத, யாரும் துயரப்படவோ அல்லது ஆதரவற்றவராகவோ இல்லாத ஒரு சமுதாயத்தை நாம் உருவாக்க வேண்டும்.
நண்பர்களே,
நம் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது – ஆரோபிதம் துவஜம் திருஷ்ட்வா, யே அபிநந்தந்தி தார்மிகா: | தே அபி ஸர்வே ப்ரமுச்யந்தே, மஹா பாதக கோடிபி: || அதாவது, ஏதோ சில காரணங்களால் கோவிலுக்கு வர முடியாமல், கோவிலின் கொடியை தூரத்தில் இருந்தே வணங்குபவர்களும், அதே பலனைப் பெறுகிறார்கள்.
நண்பர்களே,
இந்தத் தர்மத் துவஜம் (தர்மக் கொடி) இந்த ஆலயத்தின் நோக்கத்தையும் குறிக்கிறது. இந்தக் கொடி, ராம் லல்லாவின் பிறந்த இடத்தைப் பற்றிய ஒரு காட்சியை தூரத்தில் இருந்தே நமக்கு அளிக்கும். மேலும், வரவிருக்கும் யுகங்கள் முழுவதும், பகவான் ஸ்ரீ ராமின் கட்டளைகளையும், உத்வேகங்களையும் அனைத்து மனிதர்களுக்கும் இது கொண்டு செல்லும்.
நண்பர்களே,
இந்த மறக்க முடியாத தருணத்தில், இந்த தனித்துவமான சந்தர்ப்பத்தில், உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ராம் பக்தர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று, ராமர் கோவில் கட்டுமானத்திற்கு பங்களித்த அனைத்து பக்தர்களுக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் ஒவ்வொரு கொடையாளருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ராமர் கோவில் கட்டுமானத்தில் ஈடுபட்ட ஒவ்வொரு தொழிலாளிக்கும், ஒவ்வொரு கைவினைஞருக்கும், ஒவ்வொரு திட்டமிடுபவருக்கும், ஒவ்வொரு கட்டிடக் கலைஞருக்கும், அதில் பங்கேற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
அயோத்தி என்பது, இலட்சியங்கள் நடத்தையாக உருமாறும் பூமியாகும். இது ஸ்ரீ ராமர் தனது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கிய நகரம். ஒரு தனிநபர், சமூகத்தின் ஆற்றல் மற்றும் அதன் விழுமியங்கள் மூலம், எவ்வாறு சிறந்த மனிதராக மாறுகிறார் என்பதை இந்த அயோத்தி உலகுக்குக் காட்டியது.
ஸ்ரீ ராமர் அயோத்தியிலிருந்து வனவாசம் சென்றபோது, அவர் இளவரசர் ராமர். ஆனால் அவர் திரும்பி வந்தபோது, மரியாதா புருஷோத்தமனாக (Maryada Purushottam) வந்தார். அவர் மரியாதா புருஷோத்தமனாக மாறுவதில், மகரிஷி வசிஷ்டரின் அறிவு, மகரிஷி விஸ்வாமித்திரரின் உபதேசம், மகரிஷி அகஸ்தியரின் வழிகாட்டுதல், நிஷாதராஜனின் நட்பு, தாய் சபரியின் அன்பு, பக்த ஹனுமானின் அர்ப்பணிப்பு—இவை அனைத்தும், மற்றும் எண்ணற்ற இத்தகைய மனிதர்கள் முக்கியமான பங்கைக் கொண்டிருந்தனர்.
நண்பர்களே,
இதே சமூகத்தின் கூட்டுச் சக்தியே ஒரு வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கத் தேவைப்படுகிறது. ராமர் கோவிலின் இந்தத் தெய்வீக முற்றமானது, இந்தியாவின் கூட்டு பலத்தின் உணர்வுக்கான இடமாகவும் மாறி வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கு ஏழு கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. பழங்குடியினரின் அன்பு மற்றும் விருந்தோம்பல் பாரம்பரியத்தின் உருவமாக விளங்கும் மாதா சபரிக்கான கோவில் இங்கு கட்டப்பட்டுள்ளது. இங்கு நிஷாத ராஜாவின் கோவில் கட்டப்பட்டுள்ளது, இது வழிமுறைகளை அல்ல, மாறாக இலட்சியத்தையும் அதன் உணர்வையும் வணங்கும் அந்த நட்புக்கு சாட்சியாக விளங்குகிறது. இங்கு ஒரே இடத்தில், மாதா அஹல்யா, மகரிஷி வால்மீகி, மகரிஷி வசிஷ்டர், மகரிஷி விஸ்வாமித்திரர், மகரிஷி அகஸ்தியர் மற்றும் துளசிதாசர் ஆகியோர் உள்ளனர். ராம் லல்லாவுடன் சேர்ந்து, இந்த முனிவர்கள் அனைவரையும் இங்கு காணலாம். மேலும், இங்கு ஜடாயு மற்றும் அணில் சிலைகளும் உள்ளன, இவை பெரிய தீர்மானங்களை நிறைவேற்ற ஒவ்வொரு சிறிய முயற்சிக்கும் உள்ள முக்கியத்துவத்தைக் காட்டுகின்றன. தற்போது, நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன், அவர்கள் ராமர் கோவிலுக்கு வரும் போதெல்லாம், இந்த ஏழு கோவில்களை அவசியம் தரிசிக்க வேண்டும். இந்த கோவில்கள் நமது நம்பிக்கையை வலுப்படுத்துவதுடன், நட்பு, கடமை மற்றும் சமூக நல்லிணக்கம் போன்ற விழுமியங்களையும் பலப்படுத்துகின்றன.
நண்பர்களே,
நமது ராமர் வேறுபாடுகளுடன் அல்ல, உணர்வுகளுடன் இணைகிறார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவரைப் பொறுத்தவரை, ஒருவரின் வம்சாவளி முக்கியமல்ல, அவர்களின் பக்திதான் முக்கியம். அவர் விழுமியங்களை நேசிக்கிறார், வம்சாவளியை அல்ல. அவர் அதிகாரத்தை அல்ல, ஒத்துழைப்பைத்தான் மதிக்கிறார். இன்று, நாமும் அதே உணர்வுடன் முன்னேறி வருகிறோம். கடந்த 11 ஆண்டுகளில், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும்—பெண்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர், விளிம்பு நிலையில் உள்ளோர், விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள்—வளர்ச்சியின் மையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். நாட்டின் ஒவ்வொரு தனிநபரும், ஒவ்வொரு பிரிவினரும், ஒவ்வொரு பகுதியும் வலுப்பெறும்போது, அனைவரின் முயற்சிகளும் அந்தத் தீர்மானத்தை அடைவதற்குப் பயன்படுத்தப்படும். மேலும், அனைவரின் முயற்சியுடன், நாடு சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகளைக் கொண்டாடும் 2047-ஆம் ஆண்டிற்குள் நாம் ஒரு வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க வேண்டும்.
நண்பர்களே,
குழந்தை ராமரின் சிலை பிரதிஷ்டையின் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், தேசத்தின் தீர்மானம் குறித்து நான் ராமரிடம் விவாதித்திருந்தேன். அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கான இந்தியாவின் அடித்தளத்தை நாம் வலுப்படுத்த வேண்டும் என்று நான் அப்போது கூறியிருந்தேன். நிகழ்காலத்தைப் பற்றி மட்டுமே சிந்திப்பவர்கள் எதிர்கால சந்ததியினருக்கு அநீதி இழைக்கிறார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாம் நிகழ்காலத்தைப் பற்றியும், அதே போல் எதிர்கால சந்ததியினரைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். ஏனென்றால், நாம் இல்லாதபோதும் இந்த நாடு இருந்தது; நாம் இல்லாதபோதும் இந்த நாடு நிலைத்திருக்கும். நாம் ஒரு துடிப்புள்ள சமூகம், நாம் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட வேண்டும். வரவிருக்கும் தசாப்தங்களையும், வரவிருக்கும் நூற்றாண்டுகளையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.
மேலும் நண்பர்களே, இதற்காகவும் நாம் பகவான் ராமிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். நாம் அவருடைய ஆளுமையைப் புரிந்துகொள்ள வேண்டும், அவருடைய நடத்தையை நாம் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். நாம் நினைவில் கொள்ள வேண்டும், ராமர் என்றால் இலட்சியம், ராமர் என்றால் மரியாதை, ராமர் என்றால் வாழ்க்கையின் உயர்ந்த குணநலன். ராமர் என்றால் உண்மை மற்றும் வீரத்தின் சங்கமம், “திவ்யகுணை: சக்ரஸமோ ராம: சத்யபராக்ரம:”. ராமர் என்றால் தர்மத்தின் பாதையைப் பின்பற்றும் ஆளுமை, “ராம: சத் புருஷோ லோகே சத்ய: சத்யபராயண:”. ராமர் என்றால் மக்களின் மகிழ்ச்சியை முதன்மையாக வைத்தல், “ப்ரஜா சுகத்வே சந்த்ரஸ்ய”. ராமர் என்றால் பொறுமை மற்றும் மன்னிப்பின் ஆறு, “வஸு தாயா: க்ஷமாகுணை:”. ராமர் என்றால் அறிவு மற்றும் ஞானத்தின் சிகரம், “புத்யா பிருஹஸ்பதே: துல்ய:”. ராமர் என்றால் மென்மையில் உறுதியாக இருத்தல், “மிருதுபூர்வம் ச பாஷதே”. ராமர் என்றால் நன்றியுணர்விற்கு உச்சபட்ச உதாரணம், “கதாசன நோபகாரேண, கிருதினைக்கேன துஷ்யதி”. ராமர் என்றால் சிறந்த சகவாசத்தைத் தேர்ந்தெடுத்தல், “சீல விருத்தை: ஞான விருத்தை: வயோ விருத்தை: ச சஜ்ஜனை:”. ராமர் என்றால் பணிவில் மகத்தான பலம், “வீர்யவான்ன ச வீர்யேண, மஹதா ஸ்வேன விஸ்மித:”. ராமர் என்றால் உண்மையின் அசைக்க முடியாத உறுதி, “ந ச அன்ருத கதோ வித்வான்”. ராமர் என்றால் விழிப்புணர்வுள்ள, ஒழுக்கமான மற்றும் நேர்மையான மனம், “நிஸ்தந்த்ரி: அப்ரமத்த: ச, ஸ்வ தோஷ பர தோஷ வித்”.
நண்பர்களே,
ராமர் என்பவர் ஒரு தனிப்பட்ட நபர் மட்டுமல்ல, ராமர் ஒரு மதிப்பு, ஒரு மரியாதை, ஒரு திசை. 2047-ம் ஆண்டிற்குள் இந்தியா வளர்ச்சி அடைய வேண்டும் என்றால், இந்தச் சமூகம் சக்திவாய்ந்ததாக மாற வேண்டும் என்றால், நாம் நம்முன்னே இருக்கும் "ராமரை" எழுப்ப வேண்டும். நாம் நமக்குள்ளே இருக்கும் ராமரை நிலைநிறுத்த வேண்டும், இந்தத் தீர்மானத்தை எடுப்பதற்கு இன்றைய நாளை விட சிறந்த நாள் எதுவாக இருக்க முடியும்?
நண்பர்களே,
நவம்பர் 25-ஆம் தேதி என்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாள், நமது பாரம்பரியத்தில் மற்றொரு அற்புதமான பெருமைமிகு தருணத்தைக் கொண்டு வருகிறது. இதற்குக் காரணம், தர்மக் கொடியில் பொறிக்கப்பட்டுள்ள கோவிதார் (Kovidar) மரமாகும். இந்த கோவிதார் மரமானது, நாம் நமது வேர்களில் இருந்து துண்டிக்கப்படும்போது, நமது பெருமை வரலாற்றின் பக்கங்களில் புதைந்து போகிறது என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
நண்பர்களே,
பரதன் தனது படையுடன் சித்திரகூடத்தை அடைந்தபோது, லக்ஷ்மணன் அயோத்தியின் படையை வெகு தூரத்திலிருந்தே அடையாளம் கண்டுகொண்டார். இது எப்படி நடந்தது என்பதை வால்மீகி விவரித்துள்ளார், மேலும் வால்மீகி விவரித்தது இதுதான்: “விராஜதி உத்தத ஸ்கந்தம், கோவிதார த்வஜ: ரதே.”
லக்ஷ்மணன் கூறுகிறார், "ஓ ராமா, பிரகாசமான ஒளியில் முன்னால் ஒரு பெரிய மரம் போல் தெரியும் கொடி, அயோத்திப் படையின் கொடி ஆகும், மேலும் அதில் கோவிதார் (Kovidar) என்னும் சுபச் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது."
நண்பர்களே,
இன்று, கோவிதார் (Kovidar) மரம் ராமர் கோவிலின் முற்றத்தில் மீண்டும் நிலைநிறுத்தப்படும்போது, இது வெறும் ஒரு மரத்தின் மீள் வருகை மட்டுமல்ல, இது நமது நினைவுகளின் மீள் வருகை, நமது அடையாளத்தின் மறுமலர்ச்சி, நமது சுயமரியாதையுள்ள நாகரிகத்தின் மீள் பிரகடனம் ஆகும். நாம் நமது அடையாளத்தை மறக்கும்போது, நம்மையே இழக்கிறோம் என்பதை கோவிதா மரம் நமக்கு நினைவூட்டுகிறது. மேலும், அடையாளம் திரும்ப வரும்போது, நாட்டின் சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கையும் திரும்ப வருகிறது. எனவேதான் நான் சொல்கிறேன், நாடு முன்னேற வேண்டுமானால், அது தனது பாரம்பரியத்தைப் பற்றிப் பெருமை கொள்ள வேண்டும்.
நண்பர்களே,
நமது பாரம்பரியத்தைப் பற்றிய பெருமையுடன், மற்றொரு முக்கியமான விஷயம் அடிமை மனப்பான்மையிலிருந்து முழுமையான விடுதலை ஆகும். 190 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1835-ஆம் ஆண்டில், மெக்காலே (Macaulay) என்ற ஆங்கிலேயர், இந்தியாவின் வேர்களைப் பிடுங்கி எறியும் விதையை விதைத்தார். மெக்காலே இந்தியாவில் மனரீதியான அடிமைத்தனத்திற்கு அடித்தளம் அமைத்தார். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2035-ம் ஆண்டில், அந்தப் புனிதமற்ற சம்பவம் நடந்து 200 ஆண்டுகள் நிறைவடையும். சில நாட்களுக்கு முன்புதான் ஒரு நிகழ்ச்சியில் நான் வலியுறுத்தியிருந்தேன், அடுத்த பத்து ஆண்டுகளுக்கு, அடிமை மனப்பான்மையிலிருந்து இந்தியாவை விடுவிப்பது என்ற இலக்குடன் நாம் முன்னேற வேண்டும்.
நண்பர்களே,
மெக்காலேவின் பார்வையின் தாக்கம் மிகவும் பரவலாக இருந்தது என்பதுதான் மிகப் பெரிய துரதிர்ஷ்டமாகும். நாம் சுதந்திரம் பெற்றோம், ஆனால் தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுதலை பெறவில்லை. நமது நாட்டில் ஒரு வக்கிரம் (perversion) வந்துவிட்டது—அது என்னவென்றால், வெளிநாடுகளில் உள்ள எல்லாமே, ஒவ்வொரு அமைப்பும் நல்லது, ஆனால் நமது சொந்த விஷயங்களில் குறைபாடுகள் நிறைந்திருக்கின்றன என்பதாகும்.
நண்பர்களே,
இந்த அடிமை மனப்பான்மைதான் நாம் ஜனநாயகத்தை வெளிநாடுகளில் இருந்து எடுத்தோம் என்று தொடர்ந்து நிலைநிறுத்தி வந்தது. நமது அரசியலமைப்பும் வெளிநாட்டிலிருந்து உத்வேகம் பெற்றது என்று கூறப்பட்டது. ஆனால், உண்மை என்னவென்றால், இந்தியா ஜனநாயகத்தின் தாய், ஜனநாயகம் நமது இரத்தத்திலேயே உள்ளது.
நண்பர்களே,
நீங்கள் தமிழ்நாட்டிற்குச் சென்றால், வட தமிழ்நாட்டில் உத்திரமேரூர் என்ற ஒரு கிராமம் உள்ளது. அங்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு ஒன்று உள்ளது. அக்காலகட்டத்திலும்கூட ஜனநாயக ஆட்சி முறை எவ்வாறு செயல்பட்டது, மக்கள் எவ்வாறு அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்தனர் என்பதை அது விளக்குகிறது. ஆனால், நாம் இங்கே எப்போதும் மாக்னா கார்ட்டாவை புகழ்வதில் பிடிவாதமாக இருந்தோம்.
இங்கு பசவண்ணர் மற்றும் அவரது அனுபவ மண்டபம் பற்றிய தகவல்களும் மட்டுப்படுத்தப்பட்டன. அனுபவ மண்டபம் என்பது சமூக, மத மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து பொது விவாதங்கள் நடைபெற்ற, கூட்டு ஒருமித்த கருத்து மூலம் முடிவுகள் எடுக்கப்பட்ட இடமாகும். இருப்பினும், இந்த அடிமை மனப்பான்மையின் காரணமாக, பல தலைமுறை இந்தியர்கள் இந்தக் கல்வியைப் பெறமுடியாமல் இருந்தனர்.
நண்பர்களே,
இந்த அடிமை மனப்பான்மை நமது அமைப்பின் ஒவ்வொரு மூலையிலும் ஆழமாகப் பதிந்திருந்தது. உங்களுக்கு நினைவிருக்கும், இந்தியக் கடற்படையின் கொடியில் பல நூற்றாண்டுகளாக நமது நாகரிகம், நமது வலிமை, நமது பாரம்பரியம் ஆகியவற்றுடன் எந்த தொடர்பும் இல்லாத சின்னங்கள் இருந்தன. தற்போது, கடற்படைக் கொடியிலிருந்து அடிமைத்தனத்தின் ஒவ்வொரு சின்னத்தையும் நாம் அகற்றிவிட்டோம். நாம் சத்ரபதி சிவாஜி மஹாராஜின் பாரம்பரியத்தை நிலைநாட்டியுள்ளோம். இது வெறும் வடிவமைப்பு மாற்றம் மட்டுமல்ல; இது ஒரு மனநிலை மாற்றம் ஆகும். இந்தியா இனி அதன் சொந்த பலம், அதன் சொந்த சின்னங்களால் வரையறுக்கப்படும், வேறொருவரின் பாரம்பரியத்தால் அல்ல என்ற பிரகடனமாகும் இது.
மேலும் நண்பர்களே,
அதே மாற்றம் இன்று அயோத்தியிலும் காணப்படுகிறது.
நண்பர்களே,
இந்த அடிமை மனப்பான்மைதான் இத்தனை ஆண்டுகளாக ராமத்துவத்தை மறுத்து வந்தது. பகவான் ராமர் தானே ஒரு மதிப்பு அமைப்பாக இருக்கிறார். ஓர்ச்சாவின் மன்னர் ராமர் முதல், ராமேஸ்வரத்தின் பக்த ராமர் வரை, சபரியின் பகவான் ராமர் முதல், மிதிலையின் விருந்தினர் ராமர் ஜி வரை, ராமர் இந்தியாவின் ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும், இந்தியாவின் ஒவ்வொரு துகளிலும் இருக்கிறார். ஆனால், அடிமை மனப்பான்மை மிகவும் மேலோங்கியதால், பகவான் ராமரே கற்பனையானவர் என்று அறிவிக்க ஆரம்பித்தார்.
நண்பர்களே,
அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் நாம் மனதளவில் அடிமைத்தனத்திலிருந்து முழுமையான விடுதலை பெறுவதற்குத் தீர்மானித்தால், அத்தகையதொரு சுடர் பற்றிக் கொள்ளும், அத்தகையதொரு நம்பிக்கை வளரும், அது 2047-ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தனது கனவை அடைவதிலிருந்து இந்தியாவை யாராலும் தடுக்க முடியாது. அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் நாம் மெக்காலேவின் அடிமைத்தனத் திட்டத்தை முழுமையாக அழித்தால் மட்டுமே, அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்தியாவின் அடித்தளம் வலிமையாக இருக்கும்.
நண்பர்களே,
அயோத்தி தாமில் உள்ள குழந்தை ராமரின் கோயில் வளாகம் மேலும் பிரம்மாண்டமாக வளர்ந்து வருகிறது, அதே சமயம் அயோத்தியை அழகுபடுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று அயோத்தி மீண்டும் உலகிற்கே உதாரணமாகத் திகழக்கூடிய ஒரு நகரமாக மாறி வருகிறது. திரேதா யுகத்தின் அயோத்தி மனிதகுலத்திற்கு நெறிமுறைகளை அளித்தது, மேலும் 21-ம் நூற்றாண்டின் அயோத்தி மனிதகுலத்திற்கு வளர்ச்சியின் ஒரு புதிய மாதிரியை வழங்குகிறது. அந்தக் காலத்தில், அயோத்தி மரியாதையின் மையமாக இருந்தது, இப்போது அயோத்தி ஒரு வளர்ந்த பாரதத்தின் முதுகெலும்பாக எழுந்து வருகிறது.
நண்பர்களே,
வருங்கால அயோத்தியில் புராணக் கதைகளும் புதுமையும் சங்கமிக்கும். சரயூ நதியின் அமுத நீரோட்டமும் வளர்ச்சியின் நீரோட்டமும் ஒன்றாகப் பாயும். இங்கு ஆன்மீகமும் செயற்கை நுண்ணறிவும் இணைந்த ஒரு கூட்டுச் செயல்பாடு காணப்படும். ராம் பாதை, பக்தியின் பாதை மற்றும் ஜன்மபூமி பாதை ஆகியவை புதிய அயோத்தியின் காட்சிகளை வழங்குகின்றன. அயோத்தியில் பிரம்மாண்டமான விமான நிலையம் உள்ளது, இன்று அயோத்தியில் ஒரு அற்புதமான ரயில் நிலையம் உள்ளது. வந்தே பாரத் மற்றும் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்கள் அயோத்தியை நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைக்கின்றன. அயோத்தி மக்களுக்கு வசதிகள் கிடைப்பதையும், அவர்களின் வாழ்க்கையில் செழிப்பு வருவதையும் உறுதி செய்வதற்காகத் தொடர்ந்து பணிகள் நடந்து வருகின்றன.
நண்பர்களே,
பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டதிலிருந்து இன்றுவரை, கிட்டத்தட்ட நாற்பத்தைந்து கோடி பக்தர்கள் இங்கு தரிசனம் செய்ய வந்துள்ளனர். இது நாற்பத்தைந்து கோடி மக்களின் காலடித்தடங்கள் பதிந்த புண்ணிய பூமி ஆகும். இது அயோத்தி மற்றும் அதைச் சுற்றியுள்ள மக்களின் பொருளாதார மாற்றத்தையும் வருமான அதிகரிப்பையும் கொண்டு வந்துள்ளது. ஒரு காலத்தில் வளர்ச்சி அளவுகோல்களில் அயோத்தி மிகவும் பின்தங்கியிருந்தது, ஆனால் இன்று அயோத்தி நகரம் உத்தரப்பிரதேசத்தின் முன்னணி நகரங்களில் ஒன்றாக மாறி வருகிறது.
நண்பர்களே,
21-ம் நூற்றாண்டின் வரவிருக்கும் காலங்கள் மிகவும் முக்கியமானவை. சுதந்திரம் பெற்ற 70 ஆண்டுகளில், இந்தியா உலகின் 11-வது பெரிய பொருளாதாரமாக மாறியது. ஆனால், கடந்த 11 ஆண்டுகளில் மட்டுமே, இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது. இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாகவும் மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை. வரவிருக்கும் காலம் புதிய வாய்ப்புகளுக்கானது, புதிய சாத்தியக்கூறுகளுக்கானது. இந்த முக்கியமான காலகட்டத்திலும்கூட, பகவான் ராமின் சிந்தனைகள் நமக்கு உத்வேகமாக இருக்கும். ராவணனைத் தோற்கடிப்பது போன்ற ஒரு பெரிய இலக்கு ஸ்ரீ ராமர் முன் இருந்தபோது, அவர் கூறினார்: ஸௌரஜ தீரஜ தேஹி ரத சாகா. சத்ய ஸீல திருட த்வஜா பதாகா. பல விவேக் தம் பரஹித கோரே. க்ஷமா கிருபா சமதா ரஜு ஜோரே. அதாவது, ராவணனை வெல்லத் தேவையான தேருக்கு வீரமும் பொறுமையும் சக்கரங்கள் ஆகும். அதன் கொடி உண்மையும் நல்லொழுக்கமும் ஆகும். வலிமை, விவேகம், கட்டுப்பாடு மற்றும் தொண்டு ஆகியவை இந்தத் தேரின் குதிரைகள். மன்னிப்பு, கருணை மற்றும் சமத்துவம் ஆகியவை தேரைச் சரியான திசையில் வைத்திருக்கும் கடிவாளங்கள் ஆகும்.
நண்பர்களே,
வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய பயணத்தை விரைவுபடுத்த, அத்தகைய ஒரு தேர் நமக்குத் தேவை. அந்தத் தேரின் சக்கரங்கள் வீரமும் பொறுமையும் ஆகும். அதாவது, சவால்களை எதிர்கொள்ளும் துணிவும், முடிவுகள் கிடைக்கும் வரை உறுதியாக நிலைத்திருக்கும் பொறுமையும் ஒருவரிடம் இருக்க வேண்டும். அத்தகைய ஒரு தேரின் கொடி உண்மையும் உயர்ந்த நடத்தையும் ஆகும். அதாவது, கொள்கை, நோக்கம் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றில் ஒருபோதும் சமரசம் இருக்கக் கூடாது.
அத்தகைய ஒரு தேரின் குதிரைகள் வலிமை, விவேகம், கட்டுப்பாடு மற்றும் தொண்டு ஆகும். அதாவது, அது அதிகாரம், அறிவு, ஒழுக்கம் மற்றும் பிறரின் நலனில் அக்கறை கொண்டதாக இருக்க வேண்டும். அத்தகைய ஒரு தேரின் கடிவாளங்கள் மன்னிப்பு, கருணை மற்றும் சமநிலை ஆகும். அதாவது, அங்கு வெற்றியின் அகங்காரம் இருக்கக் கூடாது, தோல்வியிலும் மற்றவர்களுக்கு மரியாதை நீடிக்க வேண்டும்.
எனவே, தாழ்மையுடன் நான் சொல்கிறேன், இது தோளோடு தோள் நிற்கும் தருணம், இது வேகத்தை அதிகரிக்கும் தருணம் ஆகும். நாம் ராம் ராஜ்யத்தால் உத்வேகம் பெறும் ஒரு இந்தியாவை உருவாக்க வேண்டும். நாட்டின் நலன் சுயநலத்திற்குக் கீழே இல்லாமல், தேசிய நலன் முதன்மையாக இருக்கும்போது மட்டுமே இது சாத்தியமாகும்.
மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜெய் ஸ்ரீ ராம்!
ஜெய் ஸ்ரீ ராம்!
ஜெய் ஸ்ரீ ராம்!
-----
(Release ID: 2194074)
AD/VK/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2249288)
வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam