பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மொரீஷியஸ் பிரதமருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடல்

இடுகை இடப்பட்ட நாள்: 09 FEB 2026 9:05PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, மொரீஷியஸ் குடியரசின் பிரதமர் மாண்புமிகு டாக்டர்  நவீன் சந்திர ராம்கூலம் உடன் இன்று தொலைபேசி வாயிலாக உரையாடினார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வாரணாசியில் தலைவர்கள் இருவரும் சந்தித்ததில் இருந்து பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றங்கள் குறித்து இரு நாடுகளின் பிரதமர்களும் ஆய்வு செய்தனர். வளர்ச்சி சார்ந்த கூட்டு முயற்சி, திறன் கட்டமைப்பு மற்றும் மக்களிடையேயான பரிமாற்றங்கள் போன்ற துறைகளில் கவனம் செலுத்தப்பட்டது.

இரு நாடுகளைச் சேர்ந்த மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்தியாவிற்கும் மொரீஷியசுக்கும் இடையே உள்ள மேம்படுத்தப்பட்ட உத்தி சார்ந்த கூட்டு முயற்சியை மேலும் முன்னேற்றுவதற்கான தங்கள் உறுதிபாட்டை இருவரும் வலியுறுத்தினார்கள்.

மகாசாகர் தொலைநோக்குப் பார்வை, இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கை மற்றும் உலகளாவிய தெற்கின் நலனுக்கான பகிரப்பட்ட உறுதிப்பாடு ஆகியவற்றுக்கு இணங்க, மொரீஷியஸ் நாட்டின் வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்து முன்னுரிமை தந்து ஆதரவளிக்கும் என்று பிரதமர் திரு மோடி உறுதி அளித்தார்.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கான கூட்டு நோக்கங்களை அடைவதற்காக, அங்கு நிலைமையைத் தொடர்ந்து கண்காணிக்க இருவரும் இசைவு தெரிவித்தனர்.

செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்து அடுத்த வாரம் நடைபெற உள்ள உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளும் மொரீஷியஸ் பிரதமரை தில்லியில் வரவேற்க தாம் ஆவலுடன் இருப்பதாக திரு நரேந்திர மோடி மேலும் குறிப்பிட்டார்.

***

(Release ID: 2225625)

TV/RB/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2242566) வருகையாளர் எண்ணிக்கை : 41