சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
மத்திய சட்டத்துறை அமைச்சகம் திஷா திட்டத்தின் கீழ் தொலைதூர சட்ட சேவை வழங்கல் குறித்த மண்டலப் பயிலரங்கை சென்னையில் நடத்தியது
ஆளுநர் திரு ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, மத்திய சட்டத்துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் பங்கேற்பு
இடுகை இடப்பட்ட நாள்:
14 MAR 2026 4:30PM by PIB Chennai
மத்திய சட்ட அமைச்சகத்தின் திட்டமான 'நீதிக்கான முழுமையான அணுகலுக்கான புதுமையான தீர்வுகளை வடிவமைத்தல் (DISHA) என்ற திட்டத்தின் கீழ் தொலை தூர சட்ட சேவைகள் திட்ட செயல்பாடுகள் குறித்த மண்டலப் பயிலரங்கு இன்று (14.03.2026) சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. தொழில்நுட்பம் சார்ந்த நீதி வழங்கலை வலுப்படுத்துவதையும், நீதிக்கான கடைசி நிலை அணுகலை உறுதி செய்வதில் அனைத்துத் தரப்பினரின் ஈடுபாட்டை ஆழப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்தப் பயிலரங்கு நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநர் திரு ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, மத்திய சட்டத்துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால், சட்ட அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், வழக்கறிஞர்கள், பொது சேவை மையங்களின் (CSC) பிரதிநிதிகள், சட்டக் கல்லூரி மாணவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆளுநர் திரு ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், நீதி வழங்கலில் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். மக்கள் சட்டத்தைப் புரிந்துகொண்டு மதிக்க வேண்டும் என்றும், தொலைதூர கிராமங்களில் உள்ளவர்களையும் நீதி சென்றடைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நீதித்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவது, வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்கு இலக்கை அடைவதற்கு அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

சென்னை உயரநீதிமன்றத் தலைமை நீதிபதி திரு தர்மாதிகாரி பேசுகையில், அனைவருக்கும் நீதி என்பது அரசியலமைப்பு கடமை என்று கூறினார். தொலைதூர சட்ட உதவி, சட்ட விழிப்புணர்வு திட்டங்கள் போன்ற முயற்சிகளை அவர் பாராட்டினார்.

அந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால், தொழில்நுட்பம் சார்ந்த தளங்கள் சட்ட அமைப்புகளுடனான மக்களின் ஈடுபாட்டை கணிசமாக வலுப்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார். நீதியை மேலும் எளிதில் அணுகக்கூடியதாகவும், மக்களை மையமாகக் கொண்டதாகவும் மாற்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக் காட்டினார். இணையவழி சட்ட உதவி, சட்ட விழிப்புணர்வுத் திட்டங்கள் போன்றவை, நீதி வழங்கும் கட்டமைப்பை வலுப்படுத்துவதோடு, அடித்தள அளவில் சட்ட சேவைகளை விரிவுபடுத்தி வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
முன்னதாக, நீதித் துறைச் செயலாளர், 'திஷா' கட்டமைப்பின் நோக்கங்களைச் சுருக்கமாக எடுத்துரைத்ததுடன், அனைவரையும் உள்ளடக்கிய நீதி வழங்கலுக்கு விழிப்புணர்வே முதல் படி என்பதையும் வலியுறுத்தினார்.
தமிழ்நாட்டில் இணையவழி சட்ட சேவை (Tele-Law) திட்டத்தின் முன்னேற்றம் குறித்த ஒரு விளக்கமும் நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.
மாநிலத்தில் 12,560-க்கும் மேற்பட்ட பொதுச் சேவை மையங்கள் வாயிலாகவும், கட்டணமில்லா உதவி எண் 14454 மூலமாகவும், டெலி லா ('Tele-Law') செயலி வாயிலாகவும் சட்ட சேவைகள் வழங்கப்பட்டு வருவதாக எடுத்துரைகை்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் போது, புதுச்சேரியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி வாயிலாகச் செயல்படுத்தப்படும் நியாய ஒளி திட்டம் குறித்தும், இலவச சட்ட சேவைகள் திட்டம் குறித்தும் தயாரிக்கப்பட்ட காணொலிகள் திரையிடப்பட்டன.
***
AD/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2240202)
வருகையாளர் எண்ணிக்கை : 20