அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
மரபியல் மற்றும் ஏஐ தொழில்நுட்பத்தால் துல்லியமான மருத்துவ யுகத்தில் இந்தியா: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்
இடுகை இடப்பட்ட நாள்:
13 MAR 2026 6:19PM by PIB Chennai
இந்தியா மரபியல், செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட உயிரித் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் துல்லியமான மருத்துவ யுகத்திற்குள் நுழைந்துள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஒருவருக்கு நோய் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பே, அதன் அறிகுறிகள் தோன்றும் முன்னரே முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
புதுதில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அவர், இந்தியாவின் பரந்த மரபணு பன்முகத்தன்மை மற்றும் விரிவடைந்து வரும் தரவுத்தளங்கள், முன்கூட்டியே நோயைக் கணிக்கும் சுகாதார முறைக்கும், துல்லியமான நோயறிதலுக்கும் மிகப்பெரிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்தார். ''மரபணு இந்தியா' திட்டத்தின் கீழ் ஏற்கனவே 10,000 இந்தியர்களின் மரபணு வரிசைமுறை வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. ஒரு மில்லியன் மரபணுக்களை வரிசைப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நீண்டகால இலக்காகும்.
எதிர்கால மருத்துவமானது நோயாளியின் மரபணு அமைப்பு, வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளின் அடிப்படையில் தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்படும் என்று அவர் கூறினார். உயிரித் தொழில்நுட்பத் துறையில் புத்தாக்கம் மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கப் பிரதமர் இந்தியா கொண்டு வந்துள்ள 'பயோ-இ3' கொள்கையின் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது உயிரித் தயாரிப்பில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும், ஹீமோபிலியா போன்ற மரபணு நோய்களுக்கான சிகிச்சை சோதனைகளிலும் இந்திய விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர். அணுசக்தித் துறையில் தனியாருக்கு வாய்ப்பளிக்கும் 'சாந்தி' சட்டம், புற்றுநோய் மற்றும் கல்லீரல் நோய்களுக்கான மருத்துவ ஆராய்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்றும் அவர் கூறினார். மேம்பட்ட தொழில்நுட்ப ஆராய்ச்சிகளுக்காக ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதையும் அமைச்சர் ஜிதேந்திர சிங் தனது உரையில் கோடிட்டுக் காட்டினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2239775®=3&lang=1
செய்தி வெளியீட்டு எண்:2239775
****
TV/VK/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2239995)
வருகையாளர் எண்ணிக்கை : 6