சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மருந்து தரக் கண்காணிப்பு தீவிரம்: கடந்த 5 ஆண்டுகளில் 4.9 லட்சம் மாதிரிகள் பரிசோதனை - மத்திய அரசு தகவல்
இடுகை இடப்பட்ட நாள்:
10 MAR 2026 6:16PM by PIB Chennai
இந்தியாவில் மருந்துகளின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல் இன்று மாநிலங்களவையில் விளக்கமளித்தார்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் சுமார் 4,92,904 மருந்து மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதில் 2024-25 நிதியாண்டில் மட்டும் அதிகபட்சமாக 1,16,323 மாதிரிகள் சோதிக்கப்பட்டதில், 3,104 மாதிரிகள் தரமற்றவை என்றும், 245 மாதிரிகள் போலி அல்லது கலப்படம் என்றும் கண்டறியப்பட்டுள்ளன. மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தின் கீழ் இந்தச் சோதனைகள் முறையாக நடத்தப்படுகின்றன.
தரக் கட்டுப்பாட்டை மேம்படுத்த மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு , மாநில அதிகாரிகளுடன் இணைந்து 2022 டிசம்பர் முதல் 960-க்கும் மேற்பட்ட உற்பத்தி நிலையங்களில் நேரடி ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. இதன் விளைவாக, விதிகளை மீறிய 860-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது உரிமம் ரத்து, உற்பத்தி நிறுத்தம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, 1,100-க்கும் மேற்பட்ட இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் தீவிர தணிக்கை நடத்தப்பட்டுள்ளது.
மேலும், மாநிலங்களின் மருந்து ஒழுங்குமுறை அமைப்பை வலுப்படுத்தும் திட்டத்தின் கீழ் மத்திய அரசு 756 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் 19 புதிய மருந்துப் பரிசோதனை ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு, 28 ஆய்வகங்கள் நவீனப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்தச் சோதனைகள் வரும் காலங்களிலும் தீவிரப்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2237744®=3&lang=1
செய்தி வெளியீட்டு எண்:2237744
****
TV/VK/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2237939)
வருகையாளர் எண்ணிக்கை : 13