கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பழங்குடியினரின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாத்தலும் வளர்த்தலும்

இடுகை இடப்பட்ட நாள்: 09 MAR 2026 3:10PM by PIB Chennai

இந்தியாவில் உள்ள பழங்குடியினரின் கலை, கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் வாய்மொழி மரபுகளை பாதுகாக்கவும் வளர்த்தெடுக்கவும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நாட்டின் பல பகுதிகளில் ஏழு மண்டல கலாச்சார மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்கள் நாட்டுப்புற மற்றும் பழங்குடி கலைகளை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் மற்றும் கலாச்சார நிகழ்வுகளை தொடர்ந்து நடத்துகின்றன.

பழங்குடி கலாச்சாரத்தை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்காக ஹான்பில் திருவிழா, பழங்குடியினர் நடனத் திருவிழா, ஆதிவாசி பெருவிழா போன்ற விழாக்கள் நடத்தப்படுகின்றன. மேலும் பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவனங்கள்  மூலம் பழங்குடியினரின் கலாச்சாரம், பழக்கவழக்கம் மற்றும் பாரம்பரியங்களை ஆய்வு செய்து புத்தகங்கள், ஆவணப்படங்கள் மற்றும் பிற ஆவணங்களாக பதிவு செய்கின்றனர்.

சாகித்ய அகாடமி  பழங்குடி மொழிகளுக்கும் வாய்மொழி இலக்கியங்களுக்கும் முக்கியத்துவம் அளித்து பாஷா சம்மான்  என்ற விருதை ஆண்டுதோறும் வழங்குகிறது. பழங்குடி மற்றும் வாய்மொழி இலக்கியங்களை சேகரித்துப் பாதுகாக்கச் சிறப்பு மையங்களையும் உருவாக்கியுள்ளது. பல பழங்குடி மொழிகளில் மொழி மாநாடுகளும் நடத்தப்படுகின்றன. ஆண்டுதோறும் ஆகஸ்ட் 9 அன்று உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு பழங்குடி எழுத்தாளர்கள் சந்திப்பும் நடைபெறுகிறது.

பழங்குடி கலைஞர்கள் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகின்றது. அவர்களுக்கு கௌரவத் தொகை மற்றும் பிற செலவுகளும் வழங்கப்படுகின்றன. 2025 ஆம் ஆண்டில் 6476 கலைஞர்கள் மற்றும் கலாச்சார நிபுணர்கள் இந்த உதவியைப் பெற்றுள்ளனர். மேலும் அழிந்து வரும் பழங்குடி கலைகளைப் பாதுகாக்க பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

பழங்குடி உடைகள், இசைக்கருவிகள், தினசரி பயன்பாட்டு பொருட்கள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் அவர்களின் கலாச்சாரம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இவ்வாறு பல்வேறு திட்டங்கள் மூலம் பழங்குடியினரின் கலை, இசை, நடனம் மற்றும் பாரம்பரியங்களை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு பரப்ப அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.

மக்களவையில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2236926&reg=3&lang=1

 

****

TV/PKV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2237258) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी