விவசாயத்துறை அமைச்சகம்
மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் சென்னையில் பட்ஜெட்டுக்குப் பிந்தைய கருத்தரங்கில் தென்னை விவசாயிகளுடன் கலந்துரையாடினார்
தென்னை விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க உற்பத்தி, பதப்படுத்துதல், ஊடுபயிர் சாகுபடி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அவசியம்: திரு சிவராஜ் சிங் சௌகான்
இடுகை இடப்பட்ட நாள்:
07 MAR 2026 6:11PM by PIB Chennai
மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலத் துறை மற்றும் ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் இன்று (07.03.2026) சென்னையில் தென்னை விவசாயிகள், விஞ்ஞானிகள், விவசாய நிபுணர்கள், தென்னை விவசாயத்துடன் தொடர்புடைய முக்கிய தரப்பினர் ஆகியோருடன் நடைபெற்ற பட்ஜெட்டுக்குப் பிந்தைய முக்கியமான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்வில், தென்னை விவசாயத்தின் வளர்ச்சி, உற்பத்தியை அதிகரித்தல், தென்னை விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து அவர் விவரித்தார்.

தமிழ்நாட்டின் புனித பூமிக்கு வருகை தரும் போதெல்லாம், தமது இதயம் மகிழ்ச்சியாலும், உற்சாகத்தாலும் நிரம்பி வழிவதாக திரு சிவராஜ் சிங் சௌகான் தமது உரையில் கூறினார். தமிழ்நாட்டின் சிறந்த மக்கள், வளமான கலாச்சாரம், மரபுகள், தேசத்தின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய சிறந்த ஆளுமைகள் ஆகிய அனைத்துக்கும் மரியாதை செலுத்துவதாக அவர் கூறினார்.

நாட்டில் தேங்காய் உற்பத்தி செய்யும் முன்னோடி மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்கிறது என்று மத்திய வேளாண் அமைச்சர் கூறினார். இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 1.25 கோடி விவசாயிகள் தேங்காய் சாகுபடியுடன் தொடர்புடையவர்கள் என்றும், சுமார் 3 கோடி மக்களின் வாழ்வாதாரம் தென்னை விவசாயத்தைச் சார்ந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். தென்னை விவசாயிகள் தற்போது இதில் உற்பத்தித்திறன், நிலைத்தன்மை ஆகியவற்றைப் பாதிக்கும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் உள்ள பல தென்னை தோட்டங்கள் கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் பழமையானவை என்றும், இதனால் மகசூல் குறைந்து வருவதாகவும் அவர் விளக்கம் அளித்தார். இதுதவிர, வேர் வாடல், வெள்ளை ஈ போன்ற நோய்களும் தென்னை விவசாயத்தை மோசமாக பாதிக்கின்றன என்று அவர் குறிப்பிட்டார். விவசாயிகள் தென்னையின் உற்பத்தித்திறனைப் அதிகரிக்கவும், வருமானத்தை அதிகரிக்கவும் ஒருங்கிணைந்த முயற்சிகளையும் புதுமையான தீர்வுகளையும் நாடி, இந்த சவால்களுக்குத் தீர்வு காண வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த சவால்களை எதிர்கொள்ள, புதிய, மேம்பட்ட, நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட தென்னை வகைகளை உருவாக்குவதில் அரசு சிறப்பு கவனம் செலுத்தும் என்று திரு சிவராஜ் சிங் சௌகான் கூறினார். உலக தேங்காய் ஏற்றுமதி சந்தையில் இந்தியா தனது நிலையை மேலும் வலுப்படுத்தும் வகையில் தேங்காய் உற்பத்தி, தரம் இரண்டையும் அதிகரிப்பதே இதன் நோக்கமாகும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

விவசாயிகள், விஞ்ஞானிகள், நிபுணர்கள் ஆகியோருடன் விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், இதனால் நடைமுறைக்கு ஏற்ற பயனுள்ள தீர்வுகளை கூட்டாக உருவாக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். விவசாயிகளின் உண்மையான அனுபவங்கள், அவர்களது தேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் அரசின் கொள்கைகளும் நடவடிக்கைகளும் இருப்பதை உறுதி செய்வதற்கு இதுபோன்ற ஆலோசனைகள் அவசியம் என்று அவர் கூறினார். தென்னை ஊக்குவிப்புத் திட்டம் தில்லி அலுவலகங்களில் மட்டுமல்லாமல் வயல்களிலும் வடிவம் பெறுவதாக அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்த தென்னை விவசாய ஊக்குவிப்புத் திட்டத்தின் மூலம், தென்னை விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க உதவும் வகையில், உற்பத்தி, பதப்படுத்துதல், ஊடுபயிர் சாகுபடி ஆகியவற்றை அரசு ஊக்குவிக்கும் என்று மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் கூறினார். தென்னை சாகுபடியுடன் ஊடுபயிர் சாகுபடியை ஊக்குவிப்பது தென்னை விவசாயிகளின் பொருளாதார நிலைத்தன்மையை கணிசமாக மேம்படுத்துவதோடு, விவசாயிகளுக்கு கூடுதல் வருமான ஆதாரங்களையும் வழங்கும் என்று அவர் தெரிவித்தார்.
தென்னை விவசாயிகள் சிறந்த வசதிகளையும் வலுவான நிறுவன ஆதரவையும் பெறுவதை உறுதி செய்வதில் அரசு உறுதியுடன் செயல்படுவதாக திரு சிவராஜ் சிங் சௌகான் மேலும் கூறினார். பழைய மற்றும் மகசூல் இல்லாத தோட்டங்களுக்குப் பதிலாக புதிய தோட்டங்களை ஏற்படுத்துதல், உயர்தர நாற்றங்கால்களை உருவாக்குதல், நவீன பதப்படுத்தும் வசதிகளை ஏற்படுத்துவது, தேங்காய் சார்ந்த பொருட்களில் மதிப்பு கூட்டலுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தல் ஆகியவை இதில் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
தென்னை ஊக்குவிப்புத் திட்டத்தை இறுதி செய்வதற்காக விவசாயிகளுடனும் மாநில அரசுகளுடனும் ஆலோசனைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். இந்த விவாதங்கள் முடிந்ததும், தென்னை ஊக்குவிப்பு வாரியம் தொடர்பான விரிவான கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். வரும் ஆண்டுகளில் தென்னை விவசாய வளர்ச்சிக்கு வழிகாட்டவும் ஆதரவளிக்கவும், வலுவான சூழலை உருவாக்குவதே இந்த கட்டமைப்பின் நோக்கமாக இருக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார். நாடு முழுவதும் உள்ள தென்னை விவசாயிகளுக்கு இந்த முயற்சி குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்கும் என்று திரு சௌகான் நம்பிக்கை தெரிவித்தார். குறிப்பாக தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 28 சதவீத விவசாயிகள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியின் போது, தென்னை வளர்ச்சி வாரியம் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியை அமைச்சர் திறந்துவைத்தார். தென்னை மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான நன்கு நூல்களையும் நிகழ்ச்சியில் அமைச்சர் வெளியிட்டார். தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடும் இயக்கத்தின் ஒரு பகுதியாக ஒரு தென்னங்கன்றை அமைச்சர் நாட்டுவைத்தார்.
திரு சிவராஜ் சிங் சௌகான் இந்தியாவின் மொழியியல் பன்முகத்தன்மை குறித்தும் குறிப்பிட்டார். இந்தியாவின் பிராந்திய மொழிகள் மிகவும் வளமானவை எனவும் அழகானவை என்றும், அவை நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தையும் பன்முகத்தன்மையையும் பிரதிபலிக்கின்றன என்றும் அவர் கூறினார். இதுபோன்ற கலந்துரையாடலில் பங்கேற்பாளர்கள் தங்கள் தாய்மொழிகளில் தொடர்பு கொள்ளலாம் என்றும், தேவைப்பட்டால் மொழிபெயர்ப்பாளர்களின் உதவியைப் பெறலாம் என்றும் அவர் தெரிவித்தார். தம்மைப் பொறுத்தவரை, இத்தகைய அணுகுமுறை பங்கேற்பாளர்களுக்கு தகவல் தொடர்பை எளிதாகவும் வசதியாகவும் மாற்றுவதோடு மட்டுமல்லாமல், நாட்டின் தனித்துவமான கலாச்சார பன்முகத்தன்மையையும் தேசிய ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் என்று வேளாண் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் கூறினார்.
நிகழ்ச்சியில் வேளாண்மை மற்றும் விவசாயத்துறை இணைச் செயலாளர் திருமதி தெபோரா இனிதா, தமிழ்நாடு அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறையின் செயலாளர் வி. தட்சிணாமூர்த்தி, கர்நாடக அரசின் தோட்டக்கலைத்துறை செயலாளர் திரு. ஆர் கிரீஷ், ஆந்திர பிரதேச அரசின், தோட்டக்கலைத்துறையின் கூடுதல் இயக்குநர் டாக்டர். சி.பி. ஹரிநாத ரெட்டி, புதுச்சேரி வேளாண் துறையின் கூடுதல் இயக்குநர் திரு ஜெயசங்கர் மற்றும் தென்னை வளர்ச்சி வாரியத்தின் தலைமை செயல் அலுவலர் டாக்டர். பிரபாத் குமார் உள்ளிட்டோரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தென்னை விவசாயிகளும் கலந்துகொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்தி குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2236410®=3&lang=1
***
AD/PLM/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2236446)
வருகையாளர் எண்ணிக்கை : 46