PIB Headquarters
azadi ka amrit mahotsav

தற்சார்பிலும் ஏற்றுமதி மீள்தன்மையிலும் முன்னேற்றம்

இடுகை இடப்பட்ட நாள்: 02 MAR 2026 12:38PM by PIB Chennai

உத்திசார்ந்த, தொழிலாளர் அதிகம் ஈடுபடுகின்ற துறைகளில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதிலும் இதன் மூலம் ஏற்றுமதி போட்டித்தன்மையை வலுப்படுத்தி முக்கியமான துறைகளில் இறக்குமதி சார்பைக் குறைப்பதில் மத்திய பட்ஜெட் 2026-27 கூர்மையான கவனம் செலுத்தியது. இந்த வகையில், 2030-31 வாக்கில் உள்நாட்டு மின்னணுப் பொருட்கள் உற்பத்தி மதிப்பை 500 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2014-15-ல் 1.9 லட்சம் கோடி ரூபாயாக இருந்த மின்னணு பொருட்களின் உற்பத்தி மதிப்பு 2024-25-ல் சுமார் 6 மடங்கு அதிகரித்து 11.3 லட்சம் கோடி ரூபாய் ஆகியுள்ளது. 2020-21-க்குப் பின் மின்னணு பொருட்கள் உற்பத்தித் துறையில் நான்கு பில்லியன் அமெரி்க்க டாலர் முதலீட்டை இந்தியா ஈர்த்துள்ளது. இது உலகளாவிய உள்ளீட்டாளர் நம்பிக்கை உயர்ந்திருப்பதைப் பிரதிபலிக்கிறது.  இந்தத் துறை கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 25 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இதே போல் செமிகண்டக்டர் துறையும் மிக முக்கியமானதாக உள்ளது. இதற்கேற்ப 40,000  கோடி ரூபாய் ஒதுக்கீட்டுடன் 2026-27 பட்ஜெட்டில் இந்திய செமிகண்டக்டர் இயக்கம் 2.0 அறிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய செமிகண்டக்டர் மதிப்புத் தொடரில் இந்தியாவின் நிலையை மேலும் வலுப்படுத்த 1.6 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டுடன் 6 மாநிலங்களில் 10 செமிகண்டக்டர் தொழிற்சாலைகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்யும் போக்குவரத்து வாகன உற்பத்தித் தொழில் இந்தியாவில் வளர்ச்சியடைந்து வருகிறது. பயணிகள் மற்றும் வணிக வாகனங்கள் உற்பத்தியில் உலகிலேயே 3-வது பெரிய நாடாகவும், இருசக்கர, மூன்று சக்கர வாகனங்கள் உற்பத்தியில் உலகின் மிகப் பெரிய சந்தையாகவும் இந்தியா விளங்குகிறது. இந்தத் துறை நேரடியாகவும் மறைமுகமாகவும் 3 கோடிக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது.

ஏற்றுமதியைப் பொருத்தவரை 2025-26 நிதியாண்டின் முதல் 5 மாதங்களில் திறனறி செல்பேசி  ஏற்றுமதி மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தைவிட 55 சதவீதம் அதிகமாகும். மருந்து பொருட்கள் மற்றும் ரசாயனப் பொருட்களின் ஏற்றுமதி அளவு நிதியாண்டு 2025-ல் 4.1 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. ஜவுளிகள், ஆயத்த ஆடை ஏற்றுமதியில் உலகின் 6-வது பெரிய நாடாக இந்தியா உள்ளது. 

பாதுகாப்புத் தளவாடங்கள் ஏற்றுமதியைப் பொருத்தவரை சாதனை அளவாக நிதியாண்டு 2024-25-ல் இது 23,622 கோடி ரூபாய்க்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு தளவாடங்கள் தற்போது 100-க்கும் அதிகமான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 2029 வாக்கில் இந்தத் துறையில் 50,000 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2234442&reg=3&lang=1  

----

TV/SMB/KPG/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2234607) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Gujarati