நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அரசு வங்கிப் பரிவர்த்தனைகளை மேம்படுத்த நிகழ்நேரக் கண்காணிப்புத் தளம் மற்றும் கையேடு அறிமுகம்

இடுகை இடப்பட்ட நாள்: 27 FEB 2026 7:06PM by PIB Chennai

அரசுப் பரிவர்த்தனைகளைக் கையாளும் வங்கிகளின் நிர்வாகத் திறனை வலுப்படுத்தவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் இரண்டு முக்கியத் திட்டங்களைப் புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கணக்கு பொதுக் கட்டுப்பாட்டாளர் (CGA) திருமதி டி.சி.ஏ. கல்யாணி தொடங்கி வைத்தார். அதன்படி, 'அரசு வங்கி நிகழ்நேரக் கண்காணிப்புத் தளம்' மற்றும் 'அரசு வங்கி கையேடு'  ஆகிய இரண்டு சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதில் 'அரசு வங்கி கையேடு' என்பது வங்கிகள் அரசு தொடர்பான பணிகளைக் கையாளும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், அறிக்கையளிக்கும் முறைகள் மற்றும் காலக்கெடு குறித்த விரிவான வழிகாட்டுதல்களை வழங்குகிறது. இது செயல்பாடுகளில் நிலவும் குழப்பங்களைக் குறைத்து, வங்கிகளின் பொறுப்புக்கூறலை உறுதி செய்ய உதவும்.

அதேபோல், புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள 'நிகழ்நேரக் கண்காணிப்புத் தளம்' மூலமாக வங்கிகளின் பணப்பரிமாற்ற காலக்கெடு, பரிவர்த்தனைகளின் வெற்றி விகிதம் மற்றும் கணக்கு சமரச நிலை போன்ற முக்கியமான செயல்பாடுகளை உடனுக்குடன் (Real-time) கண்காணிக்க முடியும். இது வழக்கமாகத் தவறுகள் நடந்த பிறகு சரிசெய்யும் முறையை மாற்றி, முன்கூட்டியே கண்காணித்துச் சரிசெய்யும் மேலாண்மை முறைக்கு வழிவகுக்கும்.

இந்நிகழ்வில் பேசிய கணக்கு பொதுக் கட்டுப்பாட்டாளர், இந்தச் சீர்திருத்தங்கள் பொது நிதியைப் பாதுகாப்பதில் வங்கிகளின் கூட்டுப் பொறுப்பை உறுதிப்படுத்துவதாகத் தெரிவித்தார். அடுத்தகட்டமாக, இந்தச் செயல்பாடுகளில் இணையம் சார்ந்த குற்றங்களில் இருந்து  பாதுகாப்பு மற்றும் தரவு பகுப்பாய்வு வசதிகளை மேம்படுத்தி, அரசு வங்கிச் செயல்பாடுகளை முழுமையாக நவீனப்படுத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2233653&reg=3&lang=1      

***

TV/VK/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2233848) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी