ஆயுஷ்
மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில், 2026-ஆம் ஆண்டுக்கான தேசிய ஆரோக்கியத் திருவிழா மகாராஷ்டிர மாநிலம் ஷெகானில் நடைபெற்றது
இடுகை இடப்பட்ட நாள்:
27 FEB 2026 11:55AM by PIB Chennai
மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் உள்ள ஷேகாவ் நகரில் பிப்ரவரி 25 முதல் 28 வரை நடைபெறும் தேசிய ஆரோக்கிய திருவிழா 2026-இல் மத்திய ஆயுஷ் அமைச்சகம் விரிவான கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்தத் திருவிழாவின் இரண்டாம் நாளில் உரையாற்றிய மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் இணை அமைச்சர் திரு. பிரதாப்ராவ் ஜாதவ், தற்போதைய சூழலில் வாழ்க்கை முறை நோய்களைக் கட்டுப்படுத்துவதில் ஆயுஷ் முறைகளின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளைத் தவிர்க்க மக்கள் அதிகாலையில் எழுதல் மற்றும் சரியான நேரத்தில் உறங்குதல் போன்ற ஒழுக்கமான தினசரி நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். மேலும், பாரம்பரிய 'பாட்டி வைத்தியம்' போன்ற எளிய மற்றும் சிக்கனமான வீட்டு மருத்துவ முறைகளை கிராம அளவில் தற்காப்புக்காகப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்தக் கண்காட்சியில் ஆயுஷ் அமைச்சகத்தின் ஆராய்ச்சி கவுன்சில்கள், தேசிய நிறுவனங்கள் மற்றும் தேசிய மருத்துவ தாவரங்கள் வாரியம் (NMPB) ஆகியவை பங்கேற்றுத் தங்களது ஆராய்ச்சி சாதனைகள் மற்றும் பொது சுகாதார முன்னெடுப்புகளைக் காட்சிப்படுத்தியுள்ளன. கண்காட்சிக்கு வரும் பொதுமக்களுக்கு ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, சோவா-ரிக்பா மற்றும் ஹோமியோபதி ஆகிய துறைகளைச் சேர்ந்த தகுதி வாய்ந்த மருத்துவர்களால் இலவச ஆலோசனைகள் வழங்கப்படுவதோடு, அங்கீகரிக்கப்பட்ட ஆயுஷ் மருந்துகள் இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன. யோகா பயிற்சிகள் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும் யோகா சிகிச்சை அமர்வுகள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும், பிராந்திய ரீதியான ஊட்டச்சத்துமிக்க உணவு முறைகளை ஊக்குவிக்கும் வகையில் 'ஆயுஷ் ஆஹார்' என்ற சிறப்புப் பிரிவும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் தேசிய மருத்துவ தாவரங்கள் வாரியத்தின் சார்பில் மருத்துவ தாவரச் சாகுபடி மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்த விரிவான பயிலரங்கு நடத்தப்பட்டது. இதில் சுமார் 2000 விவசாயிகள் பங்கேற்ற நிலையில், மஞ்சள் மற்றும் பிற மூலிகைகளை நேரடி கொள்முதல் செய்வதற்கான 9 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. குறிப்பாக, 100 மெட்ரிக் டன் மஞ்சள் கொள்முதல் செய்வதற்காக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
***
(Release ID: 2233398)
TV/EA/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2233483)
வருகையாளர் எண்ணிக்கை : 12