PIB Backgrounder
azadi ka amrit mahotsav

இந்தியாவின் ட்ரோன் சூழல் அமைப்பு – கொள்கையில் இருந்து பொதுச் சேவைக்கான மாற்றம்

இடுகை இடப்பட்ட நாள்: 17 FEB 2026 10:09AM by PIB Chennai

இந்தியாவில் ட்ரோன் தொழில்நுட்பம் பொதுமக்களுக்கு சேவை வழங்குவதில் திறன் மிக்கதாக மாறியுள்ளது. கிராமப் பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கிராமங்களை அளவிடுதல் மற்றும் வரைபட மாற்றுதலுக்கான (ஸ்வமிதா) திட்டம், பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் போன்றவற்றை வேகமாகவும், துல்லியமாகவும், வெளிப்படைத்தன்மையோடும் விரிவுபடுத்துவதற்கும், ஒருங்கிணைப்பதற்கும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

நவீன வேளாண் நடைமுறைகளுக்கு ஆதரவு அளிக்க மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ட்ரோன்கள் வழங்கும் நமோ ட்ரோன் சகோதரி திட்டம் நவம்பர் 2023-ல் தொடங்கப்பட்டது. பயிர்களின் உற்பத்தி திறனை அதிகரிப்பது, இடுபொருட்களின் செலவைக் குறைப்பது, பெண்களுக்கு நீடித்த வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குவது ஆகியவை இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும். இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது முதல் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நமோ ட்ரோன் சகோதரி முன்முயற்சி மூலம் 500 ட்ரோன்களும், முன்னணி உர நிறுவனங்கள் மூலம் 594 ட்ரோன்களும் வழங்கப்பட்டுள்ளன.  

ஏப்ரல் 2020-ல் தொடங்கப்பட்ட ஸ்வமிதா திட்டம் மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், மாநில அரசுகள், இந்திய நில அளவை நிறுவனம் ஆகியவற்றின் மூலம் அமல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் 3.44 லட்சம் கிராமங்களை அளவிட்டு வரைபடமாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் டிசம்பர் 2025 நிலவரப்படி 3.28 லட்சம் கிராமங்களில் பணிகள் நிறைவடைந்துள்ளன. இது இலக்கில் 95 சதவீதமாகும். 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 1.82 லட்சம் கிராமங்களுக்கு டிசம்பர் 2025 வரை 2.76 கோடி சொத்து அட்டைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.  மார்ச் 2025 நிலவரப்படி, 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மத்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ட்ரோன்களைப் பயன்படுத்தி அனைத்து நெடுஞ்சாலைத் திட்டங்களையும் மாதந்தோறும் வீடியோவில் பதிவு செய்கிறது. இந்த வீடியோக்கள் பணி நிலவரத்தை அறிய பயன்படுவதோடு, பிரச்சனைகள் ஏற்பட்டால் தீர்வு காண்பதற்கான நிரந்தர ஆவணமாகவும் பாதுகாக்கப்படுகின்றன. பேரிடர் நிர்வாகம் மற்றும் அவசரகால நடவடிக்கைகளுக்கும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. ரயில்வேத் துறையும் வழித்தடங்கள் பராமரிப்பு, ரயில்வே பாலங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை கண்காணிக்கவும், பராமரிக்கவும் ட்ரோன்களைப் பயன்படுத்துகின்றன.

பாதுகாப்புத்துறையில் ட்ரோன் பயன்பாடு முக்கியமானதாக விளங்குகிறது. ஆபரேஷன் சிந்தூரின் போது, இந்திய ட்ரோன்கள் எதிரிகளின் இலக்குகளைப் பாதுகாப்பாகவும், துல்லியமாகவும் அழித்தன. விமானப்படை, ரேடார் வலையமைப்பு, கட்டளை மையங்கள் ஆகியவற்றின் மூலம் ட்ரோன்கள் இயக்கப்படுகின்றன.

ட்ரோன்கள் தயாரிப்பில் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டத்திற்கு ரூ.120 கோடி ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் புத்தொழில் நிறுவனங்களும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களும் உற்பத்தித் திறனை அதிகரிப்பதோடு, உள்நாட்டு ட்ரோன் உற்பத்தி சூழல் அமைப்பை வலுப்படுத்துகின்றன.

செப்டம்பர் 2025-ல் மேற்கொள்ளப்பட்ட ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மூலம் ட்ரோன்களுக்கான ஜிஎஸ்டி ஒரே சீராக 5 சதவீதம் என குறைக்கப்பட்டது. இது ஏற்கனவே, 18 சதவீதம் முதல் 28 சதவீதம் வரை இருந்தது. இந்த வரிக்குறைப்பு வணிக ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் ட்ரோன்களின் பயன்பாடு விரிவடைய உதவியாக உள்ளது.

மத்திய அரசின் பட்ஜெட் ஒதுக்கீடு, புதிய கண்டுபிடிப்புக்கான மானியம் உள்ளிட்ட ஆதரவு காரணமாக ட்ரோன்கள் உற்பத்தியில் இந்தியா உலகின் தலைவராக மாறி வருகிறது. சமச்சீரான வர்த்தக வளர்ச்சி, தொழில்நுட்ப ரீதியான தற்சார்பு, அனைவரையும் உள்ளடக்கிய மேம்பாடு என்ற சூழல் அமைப்பையும் இது வளர்க்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2228954&reg=3&lang=1

***

AD/SMB/RJ/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2229070) வருகையாளர் எண்ணிக்கை : 109
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati