புவி அறிவியல் அமைச்சகம்
தமிழ்நாட்டில் 800-க்கும் அதிகமான சுயஉதவி குழுக்கள் கடற்பாசி சாகுபடியை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளன
இடுகை இடப்பட்ட நாள்:
05 FEB 2026 11:49AM by PIB Chennai
சிஎஸ்ஐஆர் நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்ட கடற்பாசி திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 800-க்கும் அதிகமான சுயஉதவி குழுக்கள் கடற்பாசி சாகுபடியை தங்களின் வாழ்வாதாரமாக ஏற்றுக்கொண்டுள்ளன. கடற்பாசி ஆராய்ச்சி என்பது கூடுதல் வேலைவாய்ப்புகளையும் வருவாயையும் உருவாக்கும் ஒரு புதிய தொழிலை உருவாக்க வழிவகுத்துள்ளது. வணிகமயமாக்கலுக்காக கடற்பாசி தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு 12 நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. பல்வேறு திட்டங்களின் கீழ், குறிப்பாக தமிழ்நாடு, குஜராத், ஆந்திரப் பிரதேசத்தில் சுமார் 5000 மீனவர்களுக்கு இதுவரை பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பெண்கள் சுயஉதவி குழுக்கள் மூலம் கடற்பாசி சாகுபடியை ஊக்குவிக்க இலக்கு நிர்ணயித்து நிதி மற்றும் நிறுவன நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் மத்திய நிதியும், ஆதரவும் கடலோர சமூகங்களுக்குப் பயிற்சி, செயல்விளக்கங்கள் மற்றும் நேரடி உதவிக்காகப் பயன்படுத்தப்படுகிறது. மதிப்பு கூட்டல், உள்ளூர் பதப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றிற்கான ஆதரவும் இதில் அடங்கும்.
2030-க்குள் 1.12 மில்லியன் டன் கடற்பாசி உற்பத்தி இலக்கை அடைய, அரசு குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளது, முதன்மையாக பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ். கடற்பாசி துறையை மேம்படுத்துவதற்காக அரசு குறிப்பிடத்தக்க முதலீடுகளைச் செய்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் பல்நோக்குக் கடற்பாசி பூங்கா, டாமன் மற்றும் டையூவில் கடற்பாசி வளர்க்கும் வங்கி போன்ற முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ. 194.09 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சாகுபடி திறனை விரிவுபடுத்துவதற்காக, கடலோரப் பகுதிகளில் 46,095 கடற்பாசி மிதவைகள் மற்றும் 65,330 நீளமான குழாய் வலைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
கடற்பாசி உற்பத்தி, பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி மதிப்புத் தொடர்களை வலுப்படுத்த சிறு மற்றும் பெரிய நிறுவனங்களுக்கிடையே ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கூடுதலாக, மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் மண்டபம் மையம் கடற்பாசி சாகுபடிக்கான சிறந்த மையமாகவும், மத்திய அரசின் மீன்வளத் துறையால் கரு இனப்பெருக்க மையத்தை (NBC) நிறுவுவதற்கான ஒருங்கிணைப்பு நிறுவனமாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இது ஆராய்ச்சி, மேம்பட்ட வேளாண் நடைமுறைகள் மற்றும் விதை வங்கி மேம்பாட்டை ஆதரிப்பதற்காகத் தொடங்கப்பட்டுள்ளது. இது 20,000-க்கும் அதிகமான விவசாயிகளுக்குப் பயனளிக்கும்; 5,000-க்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திறன் கொண்டது.
இந்தத் தகவலை மத்திய புவி அறிவியல் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று (2026, பிப்ரவரி 5) மாநிலங்களவையில் தெரிவித்தார்..
***
(Release ID: 2223594)
TV/SMB/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2223970)
வருகையாளர் எண்ணிக்கை : 11