பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடு முழுவதும் 723 ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட பள்ளிகளுக்கு அனுமதி

இடுகை இடப்பட்ட நாள்: 04 FEB 2026 1:50PM by PIB Chennai

நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய பழங்குடியினர் விவகாரத் துறை இணை அமைச்சர் திரு. துர்காதாஸ் உய்கி எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தார்.

அதில், 2025 டிசம்பர் நிலவரப்படி நாடு முழுவதும் 723 ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 499 பள்ளிகள் தற்போது செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். ராஜஸ்தான் மாநிலத்தில் அனுமதிக்கப்பட்ட 31 பள்ளிகளும் முழுமையாகச் செயல்பட்டு வருகின்றன.

கடந்த 2025 நவம்பர் 15 அன்று நடைபெற்ற பழங்குடியினர் பெருமித தின விழாவின் போது ஆந்திரப் பிரதேசத்தில் இரண்டு மற்றும் தெலங்கானாவில் நான்கு பள்ளிகள் உட்பட மொத்தம் 42 ஏகலைவா பள்ளிகள் திறந்து வைக்கப்பட்டன. மேலும், 50 புதிய பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

பழங்குடியின மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த நவீன போதனை உபகரணங்களுடன் கூடிய வகுப்பறைகள், அறிவியல் மற்றும் கணினி ஆய்வகங்கள், நூலகங்கள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, 'அமேசான் ஃபியூச்சர் இன்ஜினியர்' திட்டத்தின் மூலம் 298 ஏகலைவா பள்ளிகளில் கணினி அறிவியல் கல்வி மற்றும் மென்பொருள் குறித்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இது மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறனை அதிகரிக்கவும், டிஜிட்டல் உலகில் அவர்கள் சிறந்து விளங்கவும் வழிவகுக்கும் என அமைச்சர் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

***

(Release ID: 2223008)

TV/VK/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2223518) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Telugu