உள்துறை அமைச்சகம்
சைபர் குற்றங்களைத் தடுக்க ‘I4C’ மூலம் ரூ. 8,189 கோடி சேமிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
04 FEB 2026 3:58PM by PIB Chennai
இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின்படி 'காவல்துறை' மற்றும் 'பொது ஒழுங்கு' ஆகியவை மாநிலப் பட்டியலின் கீழ் வருகின்றன. இருப்பினும், சைபர் குற்றங்களைத் தடுக்கவும், புலனாய்வு அமைப்புகளுக்கு உதவவும் மத்திய உள்துறை அமைச்சகம் 2018-ல் இந்தியச் சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தை (I4C) நிறுவியது. இது குறித்து மாநிலங்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு. பண்டி சஞ்சய் குமார் இன்று எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தார்.
இத்திட்டத்தின் கீழ் 2021-ல் தொடங்கப்பட்ட ‘நிதிசார் இணைய மோசடி அறிக்கை மற்றும் மேலாண்மை அமைப்பு’ மூலம், 2025 டிசம்பர் 31 வரை சுமார் 23.61 லட்சம் புகார்கள் பெறப்பட்டு, அதன் மூலம் ரூ. 8,189 கோடிக்கும் அதிகமான நிதி மோசடியாளர்களிடம் செல்வது தடுக்கப்பட்டுள்ளது. சைபர் புகார்களைப் பதிவு செய்ய '1930' என்ற இலவச உதவி எண் செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலம் இதுவரை 12.21 லட்சம் சிம் கார்டுகளும், 3.03 லட்சம் ஐ.எம்.இ.ஐ எண்களும் முடக்கப்பட்டுள்ளன.
மேலும், வங்கிகளுடன் இணைந்து ‘சந்தேகத்திற்குரியவர்கள் பதிவேடு’ உருவாக்கப்பட்டு, அதன் மூலம் ரூ. 9,055 கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் மறுக்கப்பட்டுள்ளன. ‘சமன்வயா’ மற்றும் ‘பிரதிபிம்பம்’ போன்ற தொழில்நுட்பத் தளங்கள் மூலம் மாநிலங்களுக்கு இடையிலான சைபர் குற்றவாளிகளைக் கண்டறிந்து இதுவரை 20,853 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லி, ராஜஸ்தான், சண்டிகர், மத்தியப் பிரதேசம் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் ஆன்லைன் வழியாகவே எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
***
(Release ID: 2223095)
TV/VK/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2223516)
வருகையாளர் எண்ணிக்கை : 14