சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு நுரையீரல் புற்றுநோய் சிகிச்சை மற்றும் நோய்த்தடுப்பு வழிகாட்டுதல்களை மத்திய அமைச்சர் திரு ஜே.பி. நட்டா வெளியிட்டார்
இடுகை இடப்பட்ட நாள்:
03 FEB 2026 8:18PM by PIB Chennai
உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, புதுதில்லியில் உள்ள கடமை மாளிகையில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா "நுரையீரல் புற்றுநோய் சிகிச்சை மற்றும் நோய்த்தடுப்பு: ஆதாரங்கள் அடிப்படையிலான வழிகாட்டுதல்கள்" என்ற ஆவணத்தை வெளியிட்டார்.
சுகாதார ஆராய்ச்சித் துறை (DHR), சுகாதார சேவைகள் இயக்குநரகம் (DGHS) மற்றும் இதர பங்குதார நிறுவனங்களைப் பாராட்டிய அமைச்சர், தேசிய அளவில் உருவாக்கப்பட்ட ஆதாரங்கள் அடிப்படையிலான இந்தியாவின் முதல் புற்றுநோய் வழிகாட்டுதலை உருவாக்குவதில் அவற்றின் கூட்டு முயற்சிகளைப் பாராட்டினார். நாடு முழுவதும் மருத்துவ நடைமுறைகளை தரப்படுத்துதல், முடிவெடுப்பதை வலுப்படுத்துதல் மற்றும் உயர்தரமான, நோயாளிகளை மையமாகக் கொண்ட புற்றுநோய் பராமரிப்பை உறுதி செய்வதில் இந்த வழிகாட்டுதல்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
நுரையீரல் புற்றுநோய் மேலாண்மையில் முன்கூட்டிய கண்டறிதல் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக உள்ளது என்று குறிப்பிட்ட அமைச்சர், குறிப்பாக அதிக ஆபத்துள்ள மக்களிடையே தடுப்பு மற்றும் பரிசோதனை உத்திகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். ஆரம்பகால நோயறிதல், சிகிச்சை விளைவுகள் மற்றும் நீண்டகால உயிர்வாழ்வை மேம்படுத்த ஆராய்ச்சி, புதுமை மற்றும் அறிவியல் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான அரசின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் சிகிச்சை மற்றும் நோய்த்தடுப்பு சிகிச்சை ஆகிய இரண்டிற்கும் ஆதார அடிப்படையிலான பரிந்துரைகளை வழங்குகின்றன என்றும், இதனால் நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் இந்திய சூழலுக்கு ஏற்ற தரப்படுத்தப்பட்ட, உயர்தர பராமரிப்பை வழங்க முடியும் என்றும் அவர் கூறினார். இதன் மூலம் மருத்துவ நடைமுறையில் உள்ள மாறுபாடுகளைக் குறைத்து நோயாளியின் உடல்நலத்தை மேம்படுத்த முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2222810®=3&lang=1
***
TV/BR/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2222983)
வருகையாளர் எண்ணிக்கை : 7