ஊரக வளர்ச்சி அமைச்சகம்
தீன்தயாள் ஏழைகள் நலத்திட்டம் - தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 90.91 லட்சம் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
03 FEB 2026 6:02PM by PIB Chennai
மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் தீன்தயாள் ஏழைகள் நலத்திட்டம் - தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், 2025 டிசம்பர் நிலவரப்படி நாடு முழுவதும் உள்ள 10.05 கோடி கிராமப்புற மகளிர் குழுமங்களை 90.9 லட்சத்திற்கும் அதிகமான சுய உதவிக் குழுக்களாக இத்திட்டம் ஒருங்கிணைந்துள்ளது. கிராமப்புறப் பெண்களின் பொருளாதார மேம்பாடு மற்றும் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதில் இத்திட்டம் முக்கியப் பங்காற்றி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழுக்களுக்கும் வங்கிகளுக்கும் இடையிலான நிதித் தொடர்புகளை உறுதிப்படுத்துவதில் "வங்கித் தோழிகள்" ஆற்றி வரும் பணி குறிப்பிடத்தக்கது. தகுதியான சுய உதவிக்குழுக்களைக் கண்டறிந்து, கடன் விண்ணப்பங்களைத் தயார் செய்து சமர்ப்பித்தல் மற்றும் கடன் நிலுவை குறித்து முறையாகப் பின்தொடர்தல் போன்ற பணிகளை இவர்கள் மேற்கொள்கின்றனர். தற்போது பணியமர்த்தப்பட்டுள்ள 50,548 வங்கித் தோழிகளின் முயற்சியால், 2013-14 ஆம் ஆண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை சுய உதவிக்குழுக்கள் ரூ. 12.18 லட்சம் கோடி அளவிலான வங்கிச் சேவைகளைப் பெற்றுள்ளன.
மேலும், வங்கிக் கடன்களைத் தவணை தவறாமல் திருப்பிச் செலுத்துவதை உறுதி செய்ய ஒவ்வொரு வங்கிக் கிளையிலும் சமூகம் சார்ந்த மீட்பு வழிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் ஒரு அங்கமான ஸ்டார்ட்-அப் கிராமத் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ், 2025 டிசம்பர் வரை சுமார் 5.88 லட்சம் சிறு குறு நிறுவனங்களுக்குத் தேவையான ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.
மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் டாக்டர் சந்திரசேகர் பெம்மாசானி இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இத்தகவலை தெரிவித்தார்.
****
TV/SE/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2222862)
வருகையாளர் எண்ணிக்கை : 9