பிரதமர் அலுவலகம்
புதிய இந்தியாவின் வருங்காலத் தூண்கள்: என்.சி.சி பேரணியில் பிரதமரின் எழுச்சி உரை
प्रविष्टि तिथि:
28 JAN 2026 6:05PM by PIB Chennai
தில்லியில் நடைபெற்ற வருடாந்திர என். சி. சி. பிரதமர் பேரணியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, தேசத்தை வடிவமைப்பதில் இளைஞர்களின் பங்கினைப் பாராட்டினார். புதிய இந்தியாவின் வருங்கால தூண்களாக அவர்கள் திகழ்வதாகவும் அவர் தெரிவித்தார்.
உரையின் தொடக்கத்தில், இன்று காலை மகாராஷ்டிராவில் நிகழ்ந்த துயரமான விமான விபத்தில் உயிரிழந்த திரு. அஜித் பவார் மற்றும் அவரது சகாக்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையே எட்டப்பட்டுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இளைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றார். "இதுவே சரியான நேரம், இதுவே மிகச்சிறந்த நேரம்" என்று குறிப்பிட்ட பிரதமர், 27 ஐரோப்பிய நாடுகளின் சந்தைகளில் வாய்ப்புகளை வழங்குவதால், புத்தொழில்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். இது இந்தியாவின் 'சுயசார்பு' இலக்கை வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
"இந்தியா ஐரோப்பிய சமூகத்திற்கு இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் அனைத்து ஒப்பந்தங்களின் தாய்" என்றும் அவர் வர்ணித்தார். ஓமன், ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளுடன் ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்கள் கோடிக்கணக்கான இளைஞர்களுக்குப் புதிய கதவுகளைத் திறந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
'ஆபரேஷன் சிந்து' மூலம் இந்தியாவின் ராணுவ வலிமை நிலைநாட்டப்பட்டதை நினைவு கூர்ந்த பிரதமர், நவீனப் போர்கள் இப்போது டாங்கிகளால் மட்டுமல்ல, 'கோட்' (Code) மற்றும் 'கிளவுட்' (Cloud) தொழில்நுட்பங்கள் மூலமும் நடத்தப்படுகின்றன என்றார். எனவே, தொழில்நுட்ப அறிவு கொண்ட இளைஞர்கள் பாதுகாப்புத் துறையில் நுழைய வேண்டும் என்றும், 'மேட் இன் இந்தியா' ட்ரோன்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் நமது படைகளை நவீனப்படுத்தி வருவதையும் சுட்டிக்காட்டினார். உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் பின்தங்கியிருக்கும் நாடுகள் பாதுகாப்பிலும் பலவீனமானவை என்று அவர் எச்சரித்தார்.
"வளர்ச்சியடைந்த இந்தியா என்பது பொருளாதார வளர்ச்சியில் மட்டுமல்ல, குடிமக்களின் கடமையுணர்விலும் உள்ளது" என்று பிரதமர் வலியுறுத்தினார். 'தூய்மை பாரத இயக்கம்' மற்றும் ' தாயின் பெயரில் ஒரு மரம்' போன்ற திட்டங்களில் இளைஞர்களின் பங்களிப்பைப் பாராட்டிய அவர், வாரத்திற்கு ஒரு மணி நேரம் தூய்மைப் பணிக்காக ஒதுக்க வேண்டுகோள் விடுத்தார். மேலும், 'பிட் இந்தியா' இயக்கத்தின் அவசியத்தைக் குறிப்பிட்ட அவர், இளைஞர்களிடையே அதிகரித்து வரும் உடல் பருமனைத் தவிர்க்க உணவில் 10 சதவீதம் எண்ணெய் பயன்பாட்டைக் குறைக்க அறிவுறுத்தினார்.
ஜனவரி 25-ஆம் தேதி கொண்டாடப்பட்ட தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, 18 வயதை எட்டிய முதல்முறை வாக்காளர்களைக் கௌரவிக்கும் புதிய பாரம்பரியத்தை தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் போன்ற அமைப்புகள் உருவாக்க வேண்டும் எனப் பிரதமர் முன்மொழிந்தார். இதன் மூலம் இளைஞர்களிடையே ஜனநாயகப் பொறுப்புணர்வு அதிகரிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். தேசிய மாணவர் படை என்பது வெறும் அணிவகுப்பு மட்டுமல்ல, அது சிறந்த குடிமக்களை உருவாக்கும் தளம் என்று கூறிய பிரதமர், தேசிய மாணவர் படையினர் 'தேசமே முதன்மை' என்ற உணர்வுடன் செயல்பட வாழ்த்தி உரையை நிறைவு செய்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2219704®=3&lang=1
***
TV/VK/SE
(रिलीज़ आईडी: 2219792)
आगंतुक पटल : 10