குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
வளர்ச்சி சார்ந்த செய்திகளுக்கு ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் அளித்து வெளியிட வேண்டும் : குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன்
प्रविष्टि तिथि:
17 JAN 2026 3:42PM by PIB Chennai
உத்தராகண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் வகையில் தொடங்கப்பட்டுள்ள ஜாக்ரன் மன்றம் என்ற ஊடக உரையாடல் தள நிகழ்வை குடியரசுத் துணைத் தலைவர் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று (17.01.2026) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், உத்தராகண்ட் தியாகம், மீட்சித் தன்மை, தேச சேவை ஆகியவற்றுக்குப் பெயர் பெற்ற பூமி என்றார்.
உத்தராகண்ட் மாநில உருவாக்கத்தை நினைவு கூர்ந்த அவர், இப்பகுதி மக்களின் நீண்டகால விருப்பங்கள் இதன் மூலம் நிறைவேற்றப்பட்டதாக அவர் கூறினார். தாம் மக்களவை உறுப்பினராக இருந்தபோது உத்தரகண்ட் மாநிலத்தை உருவாக்குவதற்கான மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்ததாக தமது தனிப்பட்ட நினைவை அவர் பகிர்ந்து கொண்டார்.
தேவபூமி உத்தராகண்ட் மாநிலம் ஆன்மீக, கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் எடுத்துரைத்தார். இந்தியாவின் நாகரிக உணர்வில் இந்த மாநிலம் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது என்று அவர் கூறினார். மாநிலத்தின் இயற்கை, சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக் காட்டினார். அதன் பனிப்பாறைகள், ஆறுகள், காடுகள் ஆகியவை தனித்துவம் வாய்ந்தவை என்பதை அவர் சுட்டிக்காட்டினார். பிரதமர் திரு நரேந்திர மோடி, உத்தராகண்ட் முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமி ஆகியோரின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், மாநிலம் சாலை, ரயில், விமானம், தகவல் தொடர்பு இணைப்பு ஆகியவற்றில் முன்னெப்போதும் இல்லாத முன்னேற்றத்தைக் கண்டுள்ளது என்று அவர் கூறினார்.
ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகங்களின் முக்கிய பங்கை எடுத்துரைத்த அவர் மக்களுக்கும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் இடையே ஒரு பாலமாக ஊடகங்கள் செயல்படுகின்றன என்றார். ஊடகங்களால் நிர்வாகத்தில் பொறுப்புணர்வு, வெளிப்படைத்தன்மை ஆகியவை வலுப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். வளர்ச்சி சார்ந்த செய்திகளுக்கு குறைந்தபட்சம் இரண்டு பக்கங்களை தவறாமல் ஒதுக்குமாறு ஊடக நிறுவனங்களை அவர் வலியுறுத்தினார். ஆக்கபூர்வமான, ஊக்கமளிக்கும் நேர்மறையான செய்திகளை இளைஞர்களிடையே பரப்ப வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். ஜாக்ரன் மன்றத்தில் நடைபெறும் விவாதங்கள் உத்தரகாண்டின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கு புதிய யோசனைகளை உருவாக்கும் என்று குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் உத்தராகண்ட் ஆளுநர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) திரு குர்மித் சிங், உத்தராகண்ட் முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமி, ஜாக்ரன் செய்தி ஊடகத்தின் மூத்த பிரதிநிதிகள், பிற சிறப்பு விருந்தினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
***
(Release ID: 2215602)
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2215639)
आगंतुक पटल : 13