வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்தியாவின் இளைஞர்களிடையே தன்னம்பிக்கை அதிகரித்து வருவதை புத்தொழில் நிறுவனம் குறித்த விவாத நிகழ்வில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் எடுத்துரைத்தார்
प्रविष्टि तिथि:
16 JAN 2026 4:47PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற புத்தொழில் நிறுவனம் குறித்த விவாத நிகழ்வில் உரையாற்றிய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், இந்திய இளைஞர்களிடையே தன்னம்பிக்கை அதிகரித்து வருவதை எடுத்துரைத்தார். இன்றைய இந்திய இளைஞர்கள் கடுமையான முயற்சிகளை மேற்கொள்ளவும், தொழில்முனைவைத் தொடரவும், புதிய சிந்தனைகளுடன் பரீட்சித்துப் பார்க்கவும் விரும்புவது அதிகரித்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், ஏற்கனவே தொழில் தேர்வுகளில் இருந்த தயக்கங்களில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றார். இந்தத் தன்னம்பிக்கை, புத்தாக்கம் மற்றும் எதிர்காலத்திற்குத் தயாரான வளர்ச்சியை நோக்கி இந்திய மனநிலையின் அடிப்படை மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது என்று அமைச்சர் கூறினார்.
வளர்ச்சியடைந்த நாடுகளுடனான இந்தியாவின் அண்மைக்கால தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்கள் புத்தொழில் நிறுவனங்களுக்கும் பிற தொழில் நிறுவனங்களுக்கும் குறிப்பிடத்தக்க வாய்ப்புகளை வழங்கியிருப்பதாக அவர் தெரிவித்தார். இந்த ஒப்பந்தங்கள் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி இருப்பதையும் இந்தியப் பொருட்களுக்கும் சேவைகளுக்கும் புதிய சந்தைகளைத் திறந்திருப்பதையும் அவர் விவரித்தார்.
அண்மைக்கால கொள்கை விவாதங்கள் ஆழமான தொழில்நுட்ப மேம்பாட்டின் மீது அதிக கவனம் செலுத்தியுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். அரசால் அறிவிக்கப்பட்ட இரண்டாவது 10,000 கோடி ரூபாய் ஸ்டார்ட்அப் நிதி, குறிப்பாக வளர்ச்சியின் ஆரம்ப மற்றும் முக்கியமான கட்டங்களில் உள்ள நவீன தொழில்நுட்பப் புத்தொழில் நிறுவனங்களுக்கு கணிசமான ஆதரவை வழங்கும் என்றும் அவர் கூறினார்.
இந்தியாவின் விண்வெளி ஸ்டார்ட்அப் சூழல் பற்றி குறிப்பிட்ட திரு கோயல், தற்போது இந்தத் துறையில் 350-க்கும் அதிகமான புத்தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகவும், நவீன தொழில்நுட்பப் புத்தாக்கமே அவற்றின் மையமாக இருப்பதாகவும் தெரிவித்தார். இந்தத் துறை 2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டைக் கடந்துவிட்டதாகவும், வரும் ஆண்டுகளில் பல யூனிகார்ன் நிறுவனங்கள் உருவாவதற்கு அரசு ஆதரவளிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2215333®=3&lang=1
***
TV/SMB/SE
(रिलीज़ आईडी: 2215460)
आगंतुक पटल : 11