புவி அறிவியல் அமைச்சகம்
சென்னை, தில்லி, மும்பை மற்றும் புனேவில் இந்த ஆண்டில் தலா 50 தானியங்கி வானிலை நிலையங்கள் நிறுவப்படும் - மத்திய இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங்
प्रविष्टि तिथि:
15 JAN 2026 5:50PM by PIB Chennai
நாட்டில் நகர்ப்புற வானிலை கண்காணிப்பு உள்கட்டமைப்பு விரிவாக்கப்படும் என்றும் இந்த ஆண்டில் (2026) சென்னை உள்ளிட்ட நான்கு முக்கிய பெருநகரங்களில் 200 தானியங்கி வானிலை நிலையங்கள் அமைக்கப்படும் எனவும் மத்திய புவி அறிவியல் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
புதுதில்லியில் இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD) 151-வது நிறுவன தின நிகழ்ச்சியின்போது, வானிலை ஆய்வு மையத்தின் மூத்த அதிகாரிகள், வானிலை நிபுணர்களிடையே இன்று (15.01.2026) உரையாற்றிய அமைச்சர், 2026-ம் ஆண்டில் தில்லி, மும்பை, சென்னை, புனே ஆகிய நகரங்களில் தலா 50 தானியங்கி வானிலை நிலையங்கள் நிறுவப்படும் என்றார். மக்கள் தொகை அதிகம் உள்ள நகர்ப்புறங்களில், உடனடி வானிலை முன்னறிவிப்பு, பேரிடர் தயார்நிலையை வலுப்படுத்துவது ஆகியவற்றில் இது ஒரு முக்கியமான நடவடிக்கை என்று அவர் தெரிவித்தார்.
தானியங்கி வானிலை நிலையங்களின் கட்டமைப்பானது, துல்லியமான, உயர் தெளிவுத்திறன் கொண்ட தரவை வழங்கும் என்று அவர் தெரிவித்தார். திடீர் மழை, இடியுடன் கூடிய மழை, தீவிர வெப்ப நிகழ்வுகள் ஆகியவற்றை மிகவும் துல்லியமாக கணிக்க இவை உதவும் என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். இத்தகைய தரவு சார்ந்த முன்னறிவிப்பு பேரிடர் அபாயத்தைக் குறைப்பதற்கு மட்டுமல்லாமல், விவசாயம், விமானப் போக்குவரத்து, நகர்ப்புற திட்டமிடல், பொதுப் பாதுகாப்பு போன்றவற்றில் சிறந்த முடிவெடுப்பதற்கும் மிக முக்கியமானது என்று அவர் கூறினார்.
இந்திய வானிலை ஆய்வுத் துறை ஒன்றரை நூற்றாண்டுக்கும் மேலாக தேசத்திற்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்யும் ஒரு முக்கிய அமைப்பு என்று அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டு இதே நாளில் பாரத் மண்டபத்தில் பிரதமர் திரு நரேந்திர முன்னிலையில் 150-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டதை அமைச்சர் நினைவு கூர்ந்தார். அந்த நிகழ்வில் பிரதமர் அளித்த ஊக்கமும் பாராட்டும் வானிலை ஆய்வுத் துறையின் மன உறுதியை அதிகரித்தது என அவர் குறிப்பிட்டார். ஏராளமான புதிய முயற்சிகளும், தொழில்நுட்ப முன்னேற்றங்களும் வானிலை ஆய்வுத் துறையில் ஆற்றலையும் வேகத்தையும் அதிகரித்துள்ளது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
151-வது நிறுவன தின நிகழ்வில், புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் எம்.ரவிச்சந்திரன், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குநர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா, மூத்த அதிகாரிகள், விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர்..
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2214967®=3&lang=1
***
TV/PLM/RK
(रिलीज़ आईडी: 2215080)
आगंतुक पटल : 19