நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து நிதிச் சேவைகள் துறை செயலாளர் ஆய்வு

प्रविष्टि तिथि: 13 JAN 2026 8:23PM by PIB Chennai

மத்திய நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறை செயலாளர் திரு. எம். நாகராஜு தலைமையில், பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களின்  2024-25 மற்றும் 2025-26 நிதியாண்டின் முதல் பாதியிலான நிதி மற்றும் வணிகச் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் புது தில்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எல்.ஐ.சி, ஜி.ஐ.சி, நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் உள்ளிட்ட முக்கிய பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தின் போது, காப்பீட்டு நிறுவனங்கள் லாபகரமான வணிகத்தை அதிகரிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று செயலாளர் வலியுறுத்தினார். சந்தைப் பங்கைத் தக்கவைத்துக்கொள்வதோடு, இழப்பு விகிதங்களைக் குறைப்பதற்கான உத்திகளை வகுக்க வேண்டும் என்றும், சில்லறை விற்பனைப் பிரிவுகளைத் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். குறிப்பாக, இளைய தலைமுறையினரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும், வளர்ந்து வரும் புதிய அபாயங்களை எதிர்கொள்ளும் வகையிலும் புதுமையான காப்பீட்டுத் திட்டங்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார்.

முழுமையான டிஜிட்டல் மயமாக்கலை நோக்கி நகர வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய செயலாளர், அனைத்து சில்லறை விற்பனைப் பொருட்களையும் டிஜிட்டல் தளங்கள் மூலமாகவே வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் நிலையை எட்ட வேண்டும் என்றார். வாடிக்கையாளர் சேவையைப் பொறுத்தவரை, பொதுமக்களின் குறைகளை உரிய காலத்தில் தீர்ப்பதற்கும், காப்பீட்டு கோரிக்கைகளை  எவ்வித தடையுமின்றி விரைவாகச் செயல்படுத்துவதற்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும், எல்.ஐ.சி-யின் லாபகரமான பயணம் மற்றும் கிராமப்புறங்களில் விரிவுபடுத்தப்பட்டுள்ள மகளிர் காப்பீட்டு முகவர்கள் திட்டத்திற்கும், இந்திய விவசாய காப்பீட்டு நிறுவனம் இந்த ஆண்டு 10,000 கோடி ரூபாய் பிரீமியம் மைல்கல்லைக் கடந்ததற்கும் அவர் பாராட்டு தெரிவித்தார். சமூக ஊடகங்கள் மற்றும் பல்வேறு தளங்கள் வாயிலாக நிறுவனத்தின் நற்பெயரையும் விழிப்புணர்வையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது அவசியம் என்றும் இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:

 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2214310&reg=3&lang=1

(செய்தி வெளியீட்டு அடையாள எண் :2214310)

****

TV/VK/SH


(रिलीज़ आईडी: 2214350) आगंतुक पटल : 21
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी