குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

வேலூரில் ஸ்ரீ சக்தி அம்மாவின் பொன்விழாக் கொண்டாட்டங்களில் குடியரசுத் துணைத்தலைவர் பங்கேற்பு

உண்மையான ஆன்மீகம் வெறும் வழிபாட்டில் மட்டுமல்லாமல் அன்பு, இரக்கம், சக மனிதர்களுக்கான சேவையிலும் உள்ளது - குடியரசுத் துணைத்தலைவர்

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது தெய்வீக சேவையின் ஒரு வடிவம் - குடியரசுத் துணைத்தலைவர்

प्रविष्टि तिथि: 03 JAN 2026 2:30PM by PIB Chennai

குடியரசுத் துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன், இன்று (03.01.2026) தமிழ்நாட்டின் வேலூரில் உள்ள ஸ்ரீபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீ சக்தி அம்மாவின் பொன்விழா கொண்டாட்டங்களில் பங்கேற்றார். ஸ்ரீ சக்தி அம்மாவின் ஆன்மீகப் பயணத்தின் 50 ஆண்டுகளைக் குறிக்கும் நிகழ்வில் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைவதாக அவர் கூறினார்.

ஸ்ரீபுரம் பொற்கோயிலின் புனிதத்தன்மை, ஆன்மீக மகிமை, இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர்களான டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம், ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் ஆகியோரின் வருகைகளிலும், அண்மையில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கடந்த மாதம் கோயிலுக்கு வருகை தந்ததிலும் பிரதிபலிக்கிறது என்று குடியரசுத் துணைத்தலைவர் கூறினார்.

ஸ்ரீ சக்தி அம்மாவின் தர்மத்தின் மீதான அர்ப்பணிப்பை எடுத்துரைத்த குடியரசுத் துணைத்தலைவர், அவரது வழிகாட்டுதல் ஆன்மீகத்திற்கு அப்பால் விரிவான சமூக சேவை வரை விரிந்துள்ளது என்று கூறினார். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை, தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் குடிநீர் வழங்குதல், மாணவர்களுக்கு மிதிவண்டிகள் விநியோகம் போன்ற நீண்டகால முயற்சிகள், ஆயிரக்கணக்கானோருக்கு உணவு வழங்கும் தினசரி அன்னதானத் திட்டம் உள்ளிட்ட பணிகள் ஸ்ரீபுரத்தில் மேற்கொள்ளப்படும் பரந்த அளவிலான தொண்டு நடவடிக்கைகள் போன்றவற்றை அவர் சுட்டிக்காட்டிப் பாராட்டினார். இந்த முயற்சிகள் உண்மையான பக்தி உணர்வில் செய்யப்படும் உன்னத சேவைகள் என்று அவர் கூறினார்.

ஸ்ரீபுரம் வளாகத்தில் 50,000-க்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டுள்ளதாகவும், அருகிலுள்ள கைலாசகிரி மலைகளில் பல லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாகவும் குடியரசு துணைத்தலைவர் மேலும் குறிப்பிட்டார். இது பூமிக்கும் மனிதகுலத்திற்கும் ஒரு மகத்தான பங்களிப்பாகவும், பிரதமர் திரு நரேந்திர மோடியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளுக்கு வலுவூட்டுவதாகவும் உள்ளது என அவர் குறிப்பிட்டார். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது தெய்வீக சேவையின் ஒரு வடிவம் என்றும் அவர் மேலும் கூறினார்.

உண்மையான ஆன்மீகம் சடங்கு வழிபாட்டில் மட்டுமல்லாமல், அன்பு, இரக்கம், சக மனிதர்களுக்கான சேவை ஆகியவற்றில்தான் உள்ளது என்பதை எடுத்துரைத்த குடியரசுத் துணைத்தலைவர், மகாகவி சுப்பிரமணிய பாரதியின் வார்த்தைகளை மேற்கோள் காட்டிப் பேசினார். அன்பை விட பெரிய தவம் எதுவும் இல்லை என்று அவர் கூறினார். சமூகத்தை நேசிப்பதும் சேவை செய்வதும் ஆன்மீக ஒழுக்கத்தின் மிக உயர்ந்த வடிவம் என்று அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீ சக்தி அம்மாவை தற்போதைய யுகத்தின் சிறந்த ஆன்மீகவாதி என்று குடியரசுத் துணைத்தலைவர் புகழாரம் சூட்டினார். அவர் தனது வாழ்க்கை மூலமும் செயல்கள் மூலமும் அன்பே தெய்வீகம் என்ற கொள்கையை எடுத்துக்காட்டுகிறார் என்றும் சமூகம் முழுவதும் நீதியையும் ஆன்மீக உணர்வையும் வளர்க்கிறார் என்றும் குடியரசுத் துணைத்தலைவர் தெரிவித்தார்.

முன்னதாக, குடியரசுத் துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டின் வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி கோவிலில் வழிபாடு செய்தார். அனைவருக்கும் அமைதி, செழிப்பு, மகிழ்ச்சிக்காக லட்சுமி தேவியை அவர் பிரார்த்தனை செய்தார்.

(Release ID: 2211054)

****

AD/PLM/SH


(रिलीज़ आईडी: 2211099) आगंतुक पटल : 31
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu , Malayalam