குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
குடியரசுத் துணைத்தலைவர் திரு சி. பி. ராதாகிருஷ்ணன் ஏஇபிசி ஆண்டு விருதுகள் வழங்கும் விழாவில் உரையாற்றினார்
प्रविष्टि तिथि:
20 DEC 2025 4:32PM by PIB Chennai
குடியரசுத் துணைத்தலைவர் திரு சி. பி. ராதாகிருஷ்ணன், இன்று புதுதில்லியில் நடைபெற்ற ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் (ஏஇபிசி) ஆண்டு விருதுகள் வழங்கும் விழாவில் பங்கேற்று, இந்தியாவின் ஆடை ஏற்றுமதித் துறைக்குச் சிறந்த பங்களிப்புகளை வழங்கிய விருது பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் துணைத்தலைவர், ஆடை மற்றும் ஜவுளித் துறை இந்தியாவின் பொருளாதாரத்தின் ஒரு முக்கியத் தூணாகத் திகழ்கிறது என்றும், இது 45 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை வழங்குவதோடு, 100 மில்லியனுக்கு மேற்பட்டோரின் வாழ்வாதாரங்களுக்கு மறைமுகமாக ஆதரவளிக்கிறது என்றும் கூறினார். இந்தத் துறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2 சதவீதமும், உற்பத்தித் துறையின் மொத்த மதிப்பு கூட்டலில் கிட்டத்தட்ட 11 சதவீதமும் பங்களிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு, பிஎம் மித்ரா பூங்காக்கள் மற்றும் சமர்த் திறன் மேம்பாட்டுத் திட்டம் போன்ற முற்போக்கான கொள்கைகள் மற்றும் திட்டங்கள் மூலம் ஜவுளி மற்றும் ஆடைத் தொழிலுக்கு வலுவான மற்றும் பன்முக ஆதரவை வழங்கியுள்ளது என்று குடியரசுத் துணைத்தலைவர் கூறினார். இந்தத் துறையை ஒரு உலகளாவிய வல்லரசாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு விரிவான தொலைநோக்குத் திட்டம் 2030-ஐ பிரதமர் வகுத்துள்ளார் என்றும் அவர் மேலும் கூறினார்.
அரசின் முன்முயற்சிகள், தொழில் பங்குதாரர்கள் புதுமை மற்றும் உறுதியுடன் பதிலளிக்கும்போது மட்டுமே அதன் உண்மையான நோக்கத்தை அடைகின்றன என்று அவர் வலியுறுத்தினார்.
உலகளாவிய சவால்கள் நிறைந்த இந்தக் காலகட்டத்தில், இந்தியாவின் ஆடை ஏற்றுமதியாளர்கள் குறிப்பிடத்தக்க மீள்திறனையும் முன்னேற்றத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர் என்று மகிழ்ச்சி தெரிவித்த குடியரசுத் துணைத்தலைவர், தற்போதைய தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் உட்பட, இந்தத் துறை எதிர்கொள்ளும் சவால்களைத் தீர்ப்பதற்காக அரசு தீவிரமாக விவாதங்களிலும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது என்று கூறினார்.
ஆடைத் தொழில் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா போன்ற புதிய சந்தைகளைத் தீவிரமாக ஆராய வேண்டும் என்று குடியரசுத் துணைத்தலைவர் வலியுறுத்தினார். மேலும், மதிப்பு கூட்டுதல், ஏற்றுமதிப் பன்முகத்தன்மை, இறக்குமதி சார்புநிலையைக் குறைத்தல், புதுமை மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவித்தல், மற்றும் நிலையான ஏற்றுமதியை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தொழில்துறையினரைக் கேட்டுக்கொண்டார்.
ஜவுளித் துறை அதிக உழைப்பு தேவைப்படும் துறை என்றும், விவசாயத்திற்குப் பிறகு நாட்டில் இரண்டாவது பெரிய வேலைவாய்ப்புக்கு ஆதாரமாக உள்ள துறை இந்த ஜவுளித்துறை என்றும் குடியரசுத் துணைத்தலைவர் குறிப்பிட்டார். தொழில்துறை முழுவதும் தொழிலாளர் நலனை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
வரும் ஆண்டுகளில் இந்தத் துறையின் ஏற்றுமதி இருமடங்காக உயரும் என்றும், இது கணிசமாக கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் கூறினார். வளர்ச்சியடைந்த மற்றும் தற்சார்பு இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை அடைவதில் ஆடைத் துறை ஒரு முக்கியப் பங்கை வகிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். ஜவுளித் தொழிலுடனான தனது நெருங்கிய தொடர்பை எடுத்துரைத்த குடியரசுத் துணைத்தலைவர், இந்தியாவின் உள்ளாடைகள் மற்றும் பின்னலாடைத் தொழிலின் மையமான திருப்பூரைச் சேர்ந்தவர் தான் என்றும், இந்தத் துறையின் பரிணாம வளர்ச்சியைத் தாம் மிக நெருக்கமாகக் கண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். நாடாளுமன்ற உறுப்பினராகவும், வர்த்தகம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் கீழ் உள்ள ஜவுளித் துணைக்குழுவின் இணைத் தலைவராகவும் தாம் பணியாற்றிய அனுபவத்தையும் அவர் நினைவு கூர்ந்தார். இந்த அனுபவம், அத்துறையின் சவால்களைப் பற்றிப் படிக்கவும், கொள்கைப் பரிந்துரைகளுக்குப் பங்களிக்கவும் தமக்கு உதவியதாக அவர் கூறினார்.
அரசுக்கும் தொழில்துறைக்கும் இடையே ஒரு பாலமாகச் செயல்படும் ஏஇபிசி-யின் பங்களிப்பையும் அவர் பாராட்டினார். மேலும், “காலத்தின் இழைகள்: இந்தியாவின் ஜவுளிகளின் கதை” என்ற தலைப்பிலான அதன் சித்திரங்கள் விளக்கப் புத்தகத்தையும் அவர் வெளியிட்டார்.
தில்லி தேசிய தலைநகர் பிரதேச அரசின் தொழில்துறை அமைச்சர் திரு. மஞ்சிந்தர் சிங் சிர்சா, ஏஇபிசி தலைவர் திரு. சுதிர் சேகரி, துணைத்தலைவர் டாக்டர் ஏ. சக்திவேல் மற்றும் ஜவுளி மற்றும் ஆடைத் தொழில்துறையைச் சேர்ந்த பிற முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்வில் உடனிருந்தனர்.
***
(Release ID: 2206976)
AD/PKV/RJ
(रिलीज़ आईडी: 2206997)
आगंतुक पटल : 16