புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் 2,361 மெகாவாட் உயிரி எரிசக்தித் திறன், 228 மெகாவாட் கழிவிலிருந்து எரிசக்தி உற்பத்தி மற்றும் 2.88 லட்சம் உயிரிவாயு உற்பத்தி ஆலைகள்
प्रविष्टि तिथि:
17 DEC 2025 12:45PM by PIB Chennai
மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், 02.11.2022 அன்று அறிவித்துள்ள தேசிய உயிரி எரிசக்தித் திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், நாட்டில் உயிரி எரிசக்தித் திட்டங்களை செயல்படுத்துவதற்கான கட்டமைப்புக்களை நிறுவுவதற்கு ஆதரவளிக்கிறது. இத்திட்டத்திற்காக 2022-23 முதல் 2025-26 வரையிலான காலத்தில், 998 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில், மத்திய அரசு பல்வேறு திட்டங்கள் மூலம் உயிரி எரிசக்தித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. 12- வது ஐந்தாண்டுத் திட்டத்தின் போது, தேசிய உயிரிவாயு மற்றும் உர மேலாண்மைத் திட்டம், 2018-19 முதல் 2020-21-ம் ஆண்டு வரை புதிய தேசிய உயிரிஎரிவாயு மற்றும் அங்கக உரத் திட்டம், சர்க்கரை உற்பத்தி ஆலைகளுடன் இணைக்கப்பட்ட உயிரி எரிசக்தி மற்றும் கரும்புச் சக்கை இணை மின் உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டம், நகர்ப்புற, தொழில்துறை மற்றும் விவசாயக் கழிவுகள் / எஞ்சியுள்ள பொருட்களிலிருந்து எரிசக்தி உற்பத்தித் திட்டம் போன்றவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த பத்து ஆண்டுகளில், தமிழ்நாட்டில் உயிரி எரிசக்தித் திட்டத்தின் கீழ் 112.55 மெகாவாட் உற்பத்தித் திறன், கழிவுகளிலிருந்து மின் உற்பத்தி செய்யும் திட்டத்தின் கீழ் 8.68 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் மற்றும் 1,740 உயிரி எரிவாயு உற்பத்தி ஆலைகள் அமைப்பதற்கு மத்திய அரசு நிதியுதவி செய்துள்ளது.
மக்களவையில் இன்று மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணை அமைச்சர் திரு ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் இந்தத் தகவலை தெரிவித்துள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2205039®=3&lang=1
***
SS/SV/SE
(रिलीज़ आईडी: 2205504)
आगंतुक पटल : 11