சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
யுனானி சிகிச்சைக்காக சென்னைக்கு வரும் மருத்துவ சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்
प्रविष्टि तिथि:
09 DEC 2025 8:35PM by PIB Chennai

யுனானி சிகிச்சைக்காக சென்னைக்கு வரும் மருத்துவ சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என சென்னை ராயபுரத்தில் செயல்படும் வட்டார யுனானி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி மருத்துவர் அத்தர் பர்வேஷ் அன்சாரி தெரிவித்துள்ளார்.
இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் மற்றும் உலக சுகாதார நிறுவனம் இணைந்து புதுதில்லி பாரத மண்டபத்தில் வரும் டிசம்பர் 17 முதல் 19 வரை நடத்தும் பாரம்பரிய மருத்துவத்தின் இரண்டாவது சர்வதேச உச்சி மாநாடு 2025 தொடர்பாக, இன்று (09/12/2025) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் நம் நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறைகளான யுனானி, சித்தா ஆயுர்வேதா, ஹோமியோபதி, யோகா உள்ளிட்ட மருத்துவ துறைகளில் ஆய்வுகள் குறித்தான பல்வேறு நாடுகளிலிருந்து கலந்து கொள்ளும் மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் கட்டுரைகளை வெளியிட இருப்பதாகவும் இதன் மூலம் உலக அளவில் இந்திய மருத்துவத்தின் மகத்துவம் சென்றடையும் என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் தற்போது ராயபுரத்தில் இயங்கி வரும் இந்த யுனானி மருத்துவமனையில் நாள்தோறும் 400- க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாகவும், 49 படுக்கைகள் கொண்ட உள் நோயாளிகள் பிரிவும் இருப்பதாகவும் ஆண்கள், மற்றும் பெண்கள் குழந்தைகள் என அனைவருக்கும் உயர்தரமான சிகிச்சைகள் அளிக்கப்படுவதாகவும், இந்த மருத்துவமனையில் மூட்டு வலி உள்ளிட்ட வழி நிவாரணங்களுக்கு சிறந்த சிகிச்சைகள் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவத்துறையில் கண்டுபிடிப்புகளுக்காக தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருப்பதாகவும், இதன் மூலம் ஆய்வுகள் நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
கொரோனா பாதிப்புக்கு பிறகு இந்திய மருத்துவத்தின் தேவை மக்களிடையே அதிகரித்து இருப்பதாகவும் இதனால் யுனானி போன்ற மருத்துவ சிகிச்சைகளுக்கு அதிக வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் இந்த மாநாட்டின் மூலம் பாரம்பரிய மருத்துவத்தின் தேவையை உலக நாடுகள் புரிந்து கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் வரும் காலங்களில் வெளிநாட்டினர் இந்தியாவுக்கு வந்து யுனானி மருத்துவ சிகிச்சைபெறும் வகையில் மருத்துவ சுற்றுலா அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் இந்நிறுவனத்தின் துணை இயக்குநர் மருத்துவ கபீருதீன், மற்றும் மருத்துவர் முஸ்தகீம் கான் உள்ளிட்ட மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.
****
AD/SH
(रिलीज़ आईडी: 2201126)
आगंतुक पटल : 67