பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜன்மபூமி கோயிலுக்கு பிரதமர் நவம்பர் 25 அன்று செல்கிறார்

இந்த முக்கியதத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியில், ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயிலின் சிகரத்தில், பிரதமர் சம்பிரதாய ரீதியாக காவி கொடியை ஏற்றி வைக்கிறார்

இந்தக் கொடி பகவான் ஸ்ரீ ராமரின் பிரகாசத்தையும், வீரத்தையும், ராம ராஜ்ஜியத்தின் லட்சியங்களையும் வெளிப்படுத்தும் வகையில், கோவிதார மரம் மற்றும் 'ஓம்' பொறிக்கப்பட்ட ஒளிரும் சூரியனைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது

प्रविष्टि तिथि: 24 NOV 2025 11:45AM by PIB Chennai

நாட்டின் சமூக-கலாச்சார மற்றும் ஆன்மீகத்தில் ஒரு மகத்தான தருணத்தைக் குறிக்கும் வகையில், பிரதமர் திரு நரேந்திர மோடி நவம்பர் 25 அன்று உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜன்மபூமி கோயிலுக்குச் செல்கிறார்.

அன்று காலை 10 மணியளவில், இங்கு மஹரிஷி வசிஷ்டர், மஹரிஷி விஸ்வாமித்திரர், மஹரிஷி அகத்தியர், மஹரிஷி வால்மீகி, தேவி அஹில்யா, நிஷாத்ராஜ் குகன் மற்றும் அன்னை சபரி ஆகியோருக்காக கட்டப்பட்டுள்ள ஏழு கோயில்களுக்குச் சென்று பிரதமர் தரிசனம் செய்கிறார். இதைத் தொடர்ந்து, அவர் சேஷாவதார் கோயிலுக்குச் செல்கிறார்.

காலை 11 மணியளவில், பிரதமர் அன்னை அன்னபூர்ணா தேவி கோயிலுக்குச் செல்கிறார். இதனையடுத்து, அவர் ராம் தர்பார் கர்ப்பக் கிரஹத்தில் தரிசனம் செய்து, பூஜையிலும் ஈடுபடுகிறார். அதனைத் தொடர்ந்து, ராம் லல்லா கர்ப்பக் கிரஹத்தில் அவர் தரிசனம் செய்கிறார்.

நண்பகல் 12 மணியளவில், அயோத்தியில் உள்ள புனிதமான ஸ்ரீ ராம ஜன்மபூமி கோயிலின் சிகரத்தில் பிரதமர் சம்பிரதாய ரீதியாக காவிக் கொடியை ஏற்றி வைக்கிறார். இது கோயிலின் கட்டுமானம் நிறைவடைவதையும், கலாச்சார கொண்டாட்டம் மற்றும் தேசிய ஒற்றுமையின் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதையும் குறிப்பதாக அமையும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் தருணத்தில் பிரதமர் அங்கு கூடியிருக்கும் மக்களிடையே உரையாற்றுகிறார்.

இறைவனின் செயல்களைக் குறிக்கும் வகையில், ஸ்ரீ ராம் மற்றும் அன்னை சீதா ஆகியோரின் விவாஹ பஞ்சமித் திதியுடன் அபிஜித் முகூர்த்தமும் ஒன்றாக வரும் மார்கழி மாதத்தின் சுக்ல பக்ஷத்தில்  சுபதினமான பஞ்சமி திதியில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. 17-ம் நூற்றாண்டில், 48 மணி நேரம் அயோத்தியில் தியானம் செய்த சீக்கியர்களின் ஒன்பதாவது மத குருவான குரு தேக் பகதூரின் தியாக தினத்தையும் குறிக்கும் வகையில், இத்தினம் அமைந்துள்ளது. இது அன்றைய தினத்தின் ஆன்மீக முக்கியத்துவத்தை மேலும் உயர்த்துவதாக உள்ளது.

பத்து அடி உயரமும், இருபது அடி நீளமும் கொண்ட இந்த செங்கோண அமைப்பிலான முக்கோணக் கொடி, பகவான் ஸ்ரீ ராமரின் பிரகாசத்தையும், வீரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் ஒளிரும் சூரியனின் உருவத்தைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், கோவிதார மரத்தின் படத்துடன் 'ஓம்' என்ற குறியீடும் அதில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த புனிதமான காவி கொடி, ராம ராஜ்யத்தின் லட்சியங்களை உள்ளடக்கிய கண்ணியம், ஒற்றுமை மற்றும் கலாச்சாரத் தொடர்ச்சி போன்ற அம்சங்களை செய்தியாகச் சுமந்து செல்லும்.

பாரம்பரிய வட இந்திய நாகரா கட்டிடக்கலைப் பாணியில் கட்டப்பட்ட இக்கோயில் சிகரத்தின் உச்சியில், இந்தக் கொடி ஏற்றப்படும். கோயிலைச் சுற்றிக் கட்டப்பட்டுள்ள, தென்னிந்தியக் கட்டிடக்கலைப் பாரம்பரியத்தில் வடிவமைக்கப்பட்ட, 800 மீட்டர் சுற்றளவு கொண்ட சுற்றுச் சுவர், கோயிலின் கட்டிடக்கலை பன்முகத்தன்மையை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

கோயிலின் பிரதான வெளிப்புறச் சுவர்களில், வால்மீகி ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட பகவான் ஸ்ரீ ராமரின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து எடுக்கப்பட்ட 87 நிகழ்வுகள், கற்களில் நுணுக்கமாகச் செதுக்கப்பட்டுள்ளன. மேலும், சுற்றுச் சுவர்களின் அருகே இந்தியக் கலாச்சாரத்திலிருந்து எடுக்கப்பட்ட 79 வெண்கல வார்ப்பினாலான காட்சி அமைப்புக்களும் கோயில் வளாகத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த அம்சங்கள் அனைத்தும் இணைந்து, பார்வையாளர்கள் அனைவருக்கும் பகவான் ஸ்ரீ ராமரின் வாழ்க்கை வரலாறு மற்றும் இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம் குறித்த ஆழமான நுண்ணறிவை அளிப்பதுடன், ஒரு பயனுள்ள மற்றும் கல்வி சார்ந்த அனுபவத்தையும் வழங்குகின்றன.

***

(Release ID: 2193399)

SS/SV/RK


(रिलीज़ आईडी: 2193538) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Gujarati , Kannada , Malayalam