குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

அங்கோலா நாடாளுமன்றத்தில் இந்திய குடியரசுத்தலைவர் உரையாற்றினார்

Posted On: 10 NOV 2025 8:23PM by PIB Chennai

இந்திய குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (நவம்பர் 10, 2025) லுவாண்டாவில் உள்ள அங்கோலா நாடாளுமன்றத்தில்  உரையாற்றினார்.

நாடாளுமன்றத்தில் அவருக்கு அன்பான வரவேற்பு அளித்த அங்கோலா நாடாளுமன்றத் தலைவர் மேதகு கரோலினா செர்குவேரா, அந்நாட்டின் 50-வது சுதந்திர ஆண்டு நிறைவை முன்னிட்டு குடியரசுத்தலைவர் திருமதி  திரௌபதி முர்மு மேற்கொண்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம், இருதரப்பு உறவுகளில் ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கிறது என்று கூறினார். இந்தியாவின் மாற்றத்தை ஏற்படுத்தும் வளர்ச்சிப் பயணம் அங்கோலாவிற்கு உத்வேகம் அளிப்பதாக அவர் தெரிவித்தார்.

அங்கோலா நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே உரையாற்றிய குடியரசுத்தலைவர், காலனித்துவ எதிர்ப்புப் போராட்டத்தின் வரலாறும் ஜனநாயக மாண்புகளும் இந்தியாவிற்கும் அங்கோலாவிற்கும் இடையே பகிரப்பட்ட இணைப்புகள் என்பதை எடுத்துரைத்தார். இந்தியா, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும், அங்கோலா ஆப்பிரிக்காவின் மிகவும் துடிப்பான ஜனநாயக நாடுகளில் ஒன்றாகவும் விளங்குகின்றன என்று குறிப்பிட்டார்.

அங்கோலா நாடாளுமன்றத்தில் பெண்களின் குறிப்பிடத்தக்க பிரதிநிதித்துவத்தை குடியரசுத்தலைவர் பாராட்டினார். 39 சதவீதத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் பெண்களாக இருப்பதால், அந்நாட்டு நாடாளுமன்றம் உள்ளடக்கிய நிர்வாகத்திற்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது என்று அவர் கூறினார். சட்டமன்ற அமைப்புகளில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்துவதற்காக சமீபத்தில் இந்தியாவில் இயற்றப்பட்ட சட்டம் குறித்தும் அவர் பேசினார்.

 

இருதரப்பு உறவுகள் குறித்து பேசிய குடியரசுத்தலைவர், வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு, கூட்டாண்மையின் ஒரு முக்கிய தூணாக அமைகிறது என்று கூறினார். எரிசக்தி துறையில் ஏற்பட்டுள்ள ஒத்துழைப்பு, பொருளாதார உறவுகளை வலுப்படுத்துகிறது. டிஜிட்டல் தொழில்நுட்பம், பாதுகாப்பு, விவசாயம் மற்றும் உணவு பதப்படுத்துதல் போன்ற வளர்ந்து வரும் துறைகளில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளையும் அவர் எடுத்துரைத்தார்.

மோதல்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மைகள் நிறைந்த ஒரு காலகட்டத்தை  உலகம் கடந்து செல்லும் போது, ​​உலகளாவிய தெற்கு நாடுகள் பெரும்பாலும் மோசமாகப் பாதிக்கப்படுகின்றன என்று குடியரசுத்தலைவர் கூறினார். ஆப்பிரிக்காவில் அமைதி மற்றும் வளர்ச்சியை ஏற்படுத்துவதில் இந்தியாவின் ஸ்திரமான உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார். இந்தியா-அங்கோலா கூட்டாண்மையின் முழு திறனையும் வெளிக்கொணர கூட்டாளிகளாக கைகோர்க்குமாறு அங்கோலா நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2188537

(Release ID: 2188537)

***

SS/BR/SH


(Release ID: 2188565) Visitor Counter : 9