புவி அறிவியல் அமைச்சகம்
எதிர்வரும் இந்திய சர்வதேச அறிவியல் விழா 2025, முன்னணி உலகளாவிய செயற்பாட்டாளராக இந்தியாவின் சர்வதேச அங்கீகாரத்தைக் கொண்டாடும்: டாக்டர் ஜிதேந்திர சிங்
Posted On:
10 NOV 2025 6:03PM by PIB Chennai
எதிர்வரும் இந்திய சர்வதேச அறிவியல் விழா 2025-ஐ, முன்னணி உலகளாவிய செயற்பாட்டாளராக இந்தியாவின் சர்வதேச அங்கீகாரத்தின் கொண்டாட்டமாக வர்ணித்து, "இது இந்திய அறிவியலுக்கு மிகச் சிறந்த தருணம். இந்திய இளைஞர்களின் பொற்காலம்”, என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறைகளுக்கான இணையமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், அணுசக்தி, விண்வெளி, பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். உலக அறிவியல் தினத்தை முன்னிட்டு சன்சத் தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த ஆண்டு உலக அறிவியல் தினத்தின் கருப்பொருளான, "நம்பிக்கை, மாற்றம் மற்றும் எதிர்காலம்", பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இந்தியாவின் எதிர்காலத்திற்குத் தயாராக உள்ள தொலைநோக்குப் பார்வையுடன் ஒத்துப்போகிறது என்று அமைச்சர் கூறினார்.
ஆய்வகங்களில் செய்யப்படும் கண்டுபிடிப்புகள் விளை நிலங்கள், வகுப்பறைகள், மருத்துவமனைகள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களை அடையும்போது மாற்றம் ஏற்படும் என்றும், இதன் மூலம் ஆராய்ச்சிக்கும் சமூகத்திற்கும் இடையிலான தொடர்பு வலுப்பெறும் என்றும் அவர் தெரிவித்தார். காலநிலை முதல் உயிரி தொழில்நுட்பம், ஆழ்கடல் ஆய்வு வரை உலகம் ஒன்றிணைந்து முன்னேறும்போதுதான் 2050-ம் ஆண்டின் எதிர்காலம் பாதுகாப்பானதாகவும் நிலையானதாகவும் இருக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.
அரசின் உயிரி-இ3 பொருளாதாரம் (சுற்றுச்சூழல், வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்திற்கான உயிரி தொழில்நுட்பம்) என்ற தொலைநோக்குப் பார்வையைப் பற்றிப் பேசிய டாக்டர் சிங், புதுப்பிக்கத்தக்க மற்றும் உயிரி அடிப்படையிலான எரிபொருட்களை நோக்கிய உலகளாவிய மாற்றத்தை இந்தியா வழிநடத்துகிறது என்றார். உயிரி எரிபொருளை உற்பத்தி செய்வதற்கு, உபயோகப்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயைப் பயன்படுத்தும் உதாரணத்தை அவர் மேற்கோள் காட்டினார். இது நிலைத்தன்மையை ஊக்குவிப்பதுடன், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கிறது மற்றும் தன்னிறைவை ஆதரிக்கிறது என்றார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2188446
(Release ID: 2188446)
***
SS/BR/SH
(Release ID: 2188557)
Visitor Counter : 8