பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

டெல் அவிவ்வில் நடைபெற்ற 17வது இந்தியா-இஸ்ரேல் கூட்டுப் பணிக்குழுவின் பாதுகாப்பு ஒத்துழைப்புக் கூட்டம்

Posted On: 04 NOV 2025 6:58PM by PIB Chennai

இந்தியா-இஸ்ரேல் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த 17-வது கூட்டுப் பணிக்குழுவின் கூட்டம், டெல் அவிவ்வில் 2025 நவம்பர் 4 அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு இந்தியப் பாதுகாப்புத் துறை செயலாளர் திரு. ராஜேஷ் குமார் சிங் மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகத்தின் பொது இயக்குநர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அமீர் பாரம் ஆகியோர் தலைமை வகித்தனர்.

இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஏற்கனவே வலுவாக இருக்கும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் தீவிரப்படுத்துவதற்கான ஒரு ஒருங்கிணைந்த பார்வை மற்றும் கொள்கைத் திசையை வழங்குவதற்காக, இந்தக் கூட்டத்தின் போது பாதுகாப்பு ஒத்துழைப்புக் குறித்த ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம்  கையெழுத்திடப்பட்டது.

இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் நன்மை பயக்கும் வகையில், இந்த ஒப்பந்தத்தில் பரந்த அளவிலான ஒத்துழைப்புப் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இரு நாடுகளுக்கும் பொதுவான நலன் சார்ந்த உத்திசார் உரையாடல்கள், பயிற்சிகள், பாதுகாப்புத் தொழில் ஒத்துழைப்பு மற்றும் திறன்கள் ஆகியவை இதில் உள்ள முக்கியமான துறைகளாகும். மேலும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, தொழில்நுட்பப் புத்தாக்கம், செயற்கை நுண்ணறிவு மற்றும் சைபர் பாதுகாப்பு ஒத்துழைப்பு போன்ற துறைகளும் இதில் அடங்கும். இந்த ஒப்பந்தம் மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும், கூட்டு மேம்பாடு மற்றும் கூட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும் வழிவகுக்கும்.

கூட்டுப் பணிக்குழு  தற்போது நடைபெற்று வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பு முயற்சிகளை மதிப்பாய்வு செய்ததுடன், இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பயனடைந்துள்ளதாக ஒப்புக்கொண்டது. தொழில்நுட்பத் துறையில் வருங்கால ஒத்துழைப்புக்கான சாத்தியமான பகுதிகள் மற்றும் செயல்பாட்டுத் திறன்களை மேம்படுத்துவது குறித்தும் இரு தரப்பினரும் விவாதித்தனர். அவர்கள் பயங்கரவாதத்தின் பொதுவான சவால்கள் உட்பட பல்வேறு விஷயங்களைப் பற்றி ஆலோசித்ததுடன், அந்த அச்சுறுத்தலுக்கு எதிராகப் போராடுவதற்கான தங்கள் கூட்டுத் தீர்மானத்தையும் வலியுறுத்தினர்.

இந்தியா-இஸ்ரேல் பாதுகாப்புப் பங்களிப்பு ஆழமான பரஸ்பர நம்பிக்கை மற்றும் பொதுவான பாதுகாப்பு நலன்களின் அடிப்படையில் நீண்ட காலமாக நிலைத்து நிற்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2186384

***

AD/VK/RJ


(Release ID: 2186495) Visitor Counter : 5